மரியம்மா டீச்சர் வீடு ஒன்றுதான் இந்த ஊரிலேயே வேதக்கார வீடு. டீச்சருக்கு இது ஒன்றும் சொந்த ஊரில்லை. பக்கமாயிருக்கும் கிடாரத்திலிருந்து பெரிய ஸாரும் மரியம்மா டீச்சரும் புருஷன் பெஞ்சாதியாய் இங்கு வேலைக்குவந்தவர்கள்தான். கிடாரம் ஊரே வேதக்கார ஊராம். பெரிய ஸாருக்கு அவ்வளவாய் வேதக்கார வழக்கமெல்லாம் பிடிக்காது. இந்த ஆள்களா உள்ள ஊரில் பள்ளிக்கூடம் நடத்தவேண்டியிருந்தாலோ என்னவோ ஸார் ரொம்ப நீக்குப் போக்காயிருப்பார். ஆனால் இந்த மரியம்மா டீச்சர்தான் மூச்சுக்கு முன்னூறு முறை ‘கர்த்தரே கர்த்தரே’ என்று சொல்லிக்கொண்டு கிடக்கும்.
பள்ளிக்கூடத்தில் இன்னொரு ஸார் சின்ன ஸார். இந்து ஆள்தான். ஆனால் ஒரு மூலைக்கு ஒதுங்கிவிட்டவர். பள்ளிக்கூடத்தில் பெரிய ஸாருக்கும் மேல் மரியம்மா டீச்சரின் சத்தம்தான் ஹோஹோவென்று கேட்கும்.
அடிக்கடி ஒரு ஆள் வெள்ளைக்கவுன் போட்டு எந்த ஊரிலிருந்தோ மரியம்மா டீச்சர் வீட்டிற்கு வருவார். ஊர்ப்புள்ளைகள் எல்லாம் அதிசயமாய் அவரைப் பார்த்துக்கொண்டே பின்னால் நடந்து வரும்கள். புள்ளைகள் கிளப்பிவிடும் புழுதிக்கு மத்தியில் அவர் நடந்து வருவதைப் பார்க்க மரியம்மா டீச்சர் ரொம்ப அவமானப்படும். புள்ளைகள் மேல் கோபங்கொண்டு கத்தும். அவரை வீட்டில் வைத்து ரொம்ப உபசரிக்கும். பெரிய ஸார் ஏதாவது ஒப்புக்கு அவரிடம் பேசிவிட்டுப்போவார்.
மரியம்மா டீச்சர் வீடு மாதிரி இந்த ஊரிலேயே ஒரு வீடும் இல்லை. பூப்பூவாய் போட்ட திரை தொங்கும். உள்ளே முக்காலியில் காகிதப்பூ சொருகி ஒரு ஜாடி இருக்கும். பாசிகளைக் கோந்தில் ஒட்டி படம் தொங்கும். வீடு பூராவிலும் ஒரு மாதிரி வாசனை இருக்கும். ஒன்னொண்ணும் வித்தியாசந்தான் மரியம்மா டீச்சர் வீட்டில்.
தீபாவளி அன்றைக்கு இந்த ஊரிலேயே மரியம்மா டீச்சர் வீடு ஒன்றில்தான் கருப்பட்டி தோசை சுடமாட்டார்கள். புள்ளைகளின் இம்சை பொறுக்கமாட்டாமல் பொம்பிளைகள் தீபாவளிப் பலகாரம் கொண்டுபோய் மரியம்மா டீச்சரிடம் கொடுப்பார்கள். சிரித்துக்கொண்டே வாங்கி வாங்கி அறைவீட்டு மூலையில் வைத்துக்கொள்ளும். கையால்கூட அந்தப் பலகாரங்களை தொடாது. அரை ஆள் உயரத்திற்கு ஒரு நாய் வளர்க்கும். அதற்கும்கூட அந்தப் பலகாரங்களைப் போடாது. காச்சு மூச்சென்று பலசாதிப் பிச்சைக்காரர்கள் தீபாவளி அன்றைக்கு தகர டின்களோடும் அலுமினியத் தட்டுக்களோடும் வருவார்கள். அப்படியே தூக்கி அந்த ஆள்களிடம் கொட்டிவிடும். சாமி கும்பிடும்போது இந்த பலகாரங்களையும் வைத்துக் கும்பிட்டுத்தான் பொம்பளைகள் கொண்டு வந்திருப்பார்களாம். மரியம்மா டீச்சரிடம் கிடந்து வளர்வதால் அந்த வீட்டு நாய்க்குக் கூட தோஷம் வரக்கூடாதாம்.
பள்ளிக்கு வைக்கையில் புள்ளைகளும் தாய்தகப்பன்களும் காப்பரிசி தேங்காய் எல்லாம் கொண்டு வருவார்கள். பெரிய ஸார் புள்ளை கையைப்பிடித்து ஓம் என்று எழுத வைப்பார். புள்ளைகள் எல்லாம் எழுந்து நின்று ‘கைத்தலம் நிறைகனி’ என்று பாடும்கள். பாடி முடித்ததும் புள்ளையைப் பெத்த தகப்பன் இடுப்பில் துண்டு கட்டிக் கனிந்து சின்னசாரிடமும் மரியம்மா டீச்சரிடமும் காப்பரிசியைக் கொடுப்பார். சின்ன ஸார் வாயெல்லாம் பல்லாக வாங்கிக்கொள்வார். ஒரு குத்தை அள்ளிப்போட்டுக் கொண்டே மிச்சத்தைப் பொட்டணம் கட்டிக்கொள்வார். மரியம்மா டீச்சர் மட்டும் வாங்கிப் பக்கத்தில் வைத்துக்கொள்ளும். பள்ளிக்கூடத்தில் விடப்பட்ட பிள்ளை காரை பெயர்ந்து கிடக்கும் பள்ளிக்கூடக் கட்டிடத்தையும் புள்ளைகள் கூட்டத்தையும் வாத்திமார்க் கைப்பிரம்பையும் பார்த்துவிட்டு வெறித்துக்கொண்டு அழுது அழுது மூக்கெல்லாம் சளியோட நிற்கும். அதன் கைகளிலிருந்து தகப்பன் தன் கையைப் பிய்த்து எடுத்துக்கொண்டே ‘புள்ளைக்கு இனிமே நீங்கதான் பொறுப்பு’ என்று வாத்திமாரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனதும் மரியம்மா டீச்சர் சட்டாம்புள்ளையைக் கூப்பிடும். காப்பரிசியை எடுத்து எல்லாப் புள்ளைகளுக்கும் கொடுத்துவிடச் சொல்லும். சாமி கும்பிட்ட அரிசியானதால் விரலால்கூட அதைத்தொடாது மரியம்மா டீச்சர்.
மரியம்மா டீச்சருக்கு ஒரே ஒரு மகன். முந்தி இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் படித்துக் கொண்டிருந்தான். அப்புறம் பெரிய படிப்பு படிக்க ராமநாதபுரம் போய் விட்டான். அதிலிருந்து டீச்சருக்குப் பெரியகுறை. ‘‘இந்தப் பள்ளிக்கூடம் பூராவிலும் ஒருபுள்ளைகூட வேதக்காரப்புள்ளை இல்லையே’’ என்று ஓயாமல் வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருக்கும்.
ஒரு சனிக்கிழமை மத்தியானம் இருக்கும். அன்றைக்கு பள்ளிக்கூடம்தான். புள்ளைகள் எல்லாம் பசி மயக்கதிலிருந்தார்கள். அப்போது மரியம்மா டீச்சர், எல்லாப்புள்ளைகளையும் கூட்டி வைத்துக் கொண்டு சொன்னது. ‘‘நாளைக்கு மத்தியானம் யார் யாருக்கு இஷ்டமோ அவுகள்ளாம் பள்ளிக்கூடத்துக்கு வந்தா நல்ல நல்ல கதையெல்லாம் சொல்வேன். யார் யார்யெல்லாம் ஒழுங்கா கதை கேக்க வர்ராகளோ அவுகளுக்கெல்லாம் கிறிஸ்மஸுக்கு மொத நாள் நல்ல நல்ல பிரைஸ் கொடுப்பேன். எல்லா ஞாயித்துக்கிழமையிலும் கதை கேக்க வர்ரேங்கிற புள்ளைக மட்டும் உயர்த்துங்க.’’
‘‘ஞாயித்துக்கிழமை மத்தியான வெயிலில்தான் புள்ளைகளுக்கு ஏராளமான சோலிகள். கிழடுகளிடமிருந்து பொடிமட்டையை அபேஸ் செய்துகொண்டு வந்து கம்பும் கையுமாய் அலைந்து புதர்களில் ஒதுங்கும் ஓணானை அடித்து அதன் வாய் தலையெல்லாம் பொடியைத் தூவி அது தலைசுற்றிப் பேயாடுவதைப் பார்ப்பதைவிடவும் சந்தோசம் வேறெதிலும் இருப்பதில்லை. வீட்டிலிருந்து மிளகாய் உப்புத் திருடி நுணுக்கி வைத்துக்கொண்டு புளியமரத்திலேறி பிஞ்சு பிஞ்சுக் கொறடுகளாய்ப்பறித்து வந்து நாக்குப் பொத்து போகும் வரை தொட்டுத் தொட்டுத்தின்பதில் உள்ள ருசி வேறெதிலும் இருப்பதில்லை.
மரியம்மா டீச்சர் யார் யார் ஞாயித்துக்கிழமை கதை கேக்க வருவீர்கள் என்று கேட்டதும் எல்லாப்புள்ளைகளுக்கும் இந்த சொகங்களும் ருசிகளும் ஞாபகத்தில் வந்து கம்மென்று இருந்தன. டீச்சர் ஓரிரு முறை அதட்டியதும் திருதிருவென்று முழித்தன. மரியம்மா டீச்சருக்குப் பக்கத்தில் நின்ற புள்ளைகளில் ஒண்ணு ரெண்டு டீச்சர் முகத்தைப் பார்த்தபடியே கைகளைத் தூக்கியதும் நெறையக் கைகள் பிரைஸ் கேட்டு உயர்ந்து நின்றன.
மறுநாள் ஞாயித்துக்கிழமை மத்தியானம் பள்ளிக்கூட மைதானமெல்லாம் வெயிலில் மொறு மொறுத்துக் கொண்டிருக்கையில் மரியம்மா டீச்சர் பவுடர் பூசி பச்சுப் பச்சென்று பள்ளிக்கூடத்திற்குள் வந்தது. இருபது புள்ளைகள் வரை வந்திருந்தன. பள்ளிக்கூடம் இல்லாத நாளில் பள்ளிக்கூடத்திற்கு வந்து எல்லா வகுப்புகளும் ஓவென்று வெறிச்சோடிக்கிடந்ததைப் பார்த்த கிளுகிளுப்பிலும் என்னென்ன வெல்லாமோ கதைகளைக் கேட்கப்போகிறோம் என்ற உற்சாகத்திலும் புள்ளைகள் காச்சுமூச்சென்று கத்திக்கொண்டு கிடந்தன. மரியம்மா டீச்சர் செருப்பைக் கழற்றிக்கொண்டே முகம் பூராவும் சிரிப்பாய் பிள்ளைகளைப் பார்த்தது.
பள்ளிக்கூடத்திற்குப் பின்புறத்தில் தோட்டத்திற்குப் பக்கத்தில் ஒரு தாழ்வாரம் உண்டு. தோட்டத்து வேப்பமரம் அந்த வகுப்பறைமேல் வளைந்து படர்ந்து கிடக்கும். எப்படி ஒறைக்கும் வெய்யிலுக்கும் அந்த இடம் மட்டும் சிலுசிலுவென்றிருக்கும். மரியம்மா டீச்சர் புள்ளைகளையெல்லாம் கூட்டிக்கொண்டு அங்கே போனது. அஞ்சாப்புச் சட்டாம்பிள்ளை போய் ஒரு நாற்காலியை கொண்டுவந்து போட்டான். அன்றைக்கே பிரைஸ் வாங்கப்போவது போல் புள்ளைகள் எல்லாம் அடக்க சடக்கமாய் உட்கார்ந்துகொண்டது.
மரியம்மா டீச்சர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சொன்னது : ‘‘இன்றைக்கு வந்திருக்கும் புள்ளைகள்தான் ரொம்ப நல்ல புள்ளைகள், நீங்கள் விரும்பியவைகளை கர்த்தர் கொடுப்பார். இன்றையிலிருந்து நீங்கள்ளாம் கர்த்தரின் புள்ளைகள். நமக்கு வேண்டியவைகளை யெல்லாம் நாம் கர்த்தரிடம் கேட்போம். எல்லோரும் மண்டியிடுங்கள்’’ என்று கூறிக்கொண்டே மரியம்மா டீச்சர் நாற்காலியிலிருந்து எழுந்து முழங்காலை மடித்து இரண்டு கைகளையும் ஏந்திக்கொண்டு பேச ஆரம்பித்து.
மரியம்மா டீச்சர் கைகளை ஏந்திக்கொண்டு மண்டி போட்டதைப் பார்த்த புள்ளைகளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. டீச்சரே பிரைஸ் கேட்டு யார் முன்னாலேயோ மன்றாடுவது போல் முதலில் தெரிந்தாலும் எல்லாப்புள்ளைகளும் திருதிருவென்று முழித்தன. முதலில் அஞ்சாப்புச் சட்டாம்பிள்ளைதான் மண்டிபோட்டு டீச்சரைப்போலவே கைகளை விரித்து பிரைஸ் கேட்டான். அந்தப்பயல் இருந்த கோலத்தைப் பார்க்கப் பார்க்க புள்ளைகளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த டீச்சர் திடுமென்று கண்ணைத் திறந்து எல்லோரையும் மண்டியிடும்படி சைகை காட்டியது. பக்கத்துப் பக்கத்துப் புள்ளைகளைப் பார்த்துக்கொண்டே சிரிப்புகளை அடக்கியபடி இடித்துக்கொண்டும் தடுமாறிக்கொண்டும் மண்டி போட்டன.
டீச்சர் சொன்னதையெல்லாம் புள்ளைகள் திக்கித் திக்கி ஒப்பித்துக்கொண்டே போயின. எங்கள் ஊரில் நல்ல மழை பெய்ய வேண்டும் கர்த்தரே என்றதும், புள்ளைகளை உசுப்பி விட்டது போலிருந்தது. இரண்டு வருஷமாய் ஊரில் மழையில்லை. வயற்காடெல்லாம் பாளம்பாளமாய் வெடித்துக்கிடந்தன. முனியசாமி கோவிலுக்கு எருது கட்டு நடத்திப்பார்த்தும் மழைச்சோறெடுத்துப் பார்த்தும் சப்பாணி கோவிலில் சாமிகும்பிட்டுப் பார்த்தும் இன்னும் மழை பெய்யவில்லை. ‘‘மூன்றாம் வகுப்புப் பாண்டிக்கு உடம்பு சொஸ்தமாகவேண்டும் கர்த்தரே’’ என்று டீச்சர் சொன்னதும் புள்ளைகள் உருக்கமாகிவிட்டன. பாண்டி நன்றாகப் படிப்பான். மரியம்மா டீச்சர் வீட்டிற்கு அடுத்த வீடுதான் பாண்டிவீடு. இழுப்பு வந்து உடம்பெல்லாம் வெளிறிப் போய் மணிக்கட்டில் மஞ்சள் துணிகட்டிப் போட்டிருக்கிறார்கள். ராத்திரிக்கு ராத்திரி பாண்டி வீட்டில் கோடாங்கிச்சத்தம் கேட்கும். பாண்டி அப்பாவும் அம்மாவும் கஞ்சிதண்ணி குடிப்பதில்லை. பாண்டிக்காக பதினெட்டு கோயில்களுக்கு வெதப்புக் கொடுத்துக்கொண்டு திரிகிறார்கள்.
அதுவரை டீச்சர் சொன்னதையெல்லாம் திருப்பிச் சொல்லி வந்த புள்ளைகள் மழையைச் பற்றியும் பாண்டியைப்பற்றியும் டீச்சர் ஏக்கத்தோடு சொன்னதும் புள்ளைகளுக்கு கூச்சம் போய் இயல்பாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். அப்புறம் என்னென்னவெல்லாமோ சொல்லிவிட்டு மரியம்மா டீச்சர் ‘ஆமென்’ என்றது. எல்லாப்புள்ளைகளும் சத்தம்போட்டு ‘ஆமென்’ என்றன. டீச்சர் கண்ணைத் திறந்து எல்லோரையும் உட்காரச் சொல்லி சைகையும் காட்டிவிட்டு எழுந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது.
‘‘ஒங்களுக்கெல்லாம் கதை கேக்க ஆசையா இருக்கில்ல’’ என்று டீச்சர் கேட்டதும் ‘‘ஆமாம் டீச்சர்’’ என்று குப்பென்று பிள்ளைகள் கத்தின.
மரியம்மா டீச்சர் கதை சொல்லத் தொடங்கியது. பெத்தலகேம் என்ற இடத்தில் யேசுவானவர் பிறந்த கதையை அது சொல்லிவந்தபோது புள்ளைகள் வாயில் ஈப்போவது கூடத் தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தன. மரியம்மா டீச்சர் அம்மா, ஆடு, இலை, ஈ எல்லாம் சொல்லிக் கொடுக்கும்போது மரக்கட்டை மாதிரி முகம் இருக்கும். சரியாகத் திருப்பிச் சொல்லாத புள்ளைகளுக்குப் பிரப்பம்பழம் கொடுக்கும். முகமெல்லாம் வெடுவெடுவென மாறும். பெத்லகேமில் யேசுவானவர் பிறந்த கதையைச் சொல்லும்போது, மரியம்மா டீச்சரின் முகமெல்லாம் அருளோடிருந்தது. ஏற்ற இறக்கங்களோடு கைகளை ஆட்டி நீட்டி உருகிப் போய் கதை சொல்லி வந்தது. தீர்க்கதரிசிகள், மேய்ப்பவர்கள், தேவதூதர்கள் எல்லாம் கதையில் வந்தார்கள். புள்ளைகளுக்கு இதெல்லாம் அரைகுறையாய்ப் புரிந்தாலும் இதுவரை கேட்காத மாதிரியில் இருந்ததால் மயங்கிப் போய் கேட்டுக் கொண்டிருந்தன. வால் நட்சத்திரம் ஆகாயத்திலிருந்து இறங்கிவந்து வழிகாட்டிக் கொண்டே போனதை டீச்சர் சொன்னபோது புள்ளைகளுக்குப் பறந்து போவது போல் தோன்றியது. சொக்கிப் போய்க் கிடந்தன. வால்நட்சத்திரம் ஆகாயத்திலுமில்லாமல் பூமியிலுமில்லாமல் நடுவால ஆள்களுக்கு முன்னாலேயே போன சங்கதியும் வேப்ப மரக்காத்தும் சேர்ந்த ஒரு அசங்க மசங்களில் நாலஞ்சு புள்ளைகள் ஒறங்கியே விட்டார்கள்.
பழைய கஞ்சி குடிச்ச கேரில் புள்ளைகள் யாராவது வகுப்பில் ஒறங்கி விழுந்தால் டீச்சர் பின்னங்கையை நீட்டச் சொல்லி பிரம்பால் அடிக்கும். கதை சொல்லி வரும்போது மட்டும் ஒறங்கிய புள்ளைகளைப் பார்த்து, `ராசுக்கு அரைச்சாமம் ஆச்சு, எழுப்புங்கடா’ என்று சிரிப்பும் கனைப்புமாய்ச் சொன்ன மாரியம்மா டீச்சர் வேறு ஆளாய் மாறி வந்து உட்கார்ந்து இருப்பது போல தெரிந்தது. டீச்சரிடம் இந்த மாதிரி ஆதரவான பேச்சுக்களைக் கேட்பதற்காக வேனும் ஓயாமல் டீச்சர் கதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் போல நெனைப்புத் தட்டியது புள்ளைகளுக்கு.
யேசுவானவர்மேல் புள்ளைகளுக்கு முதல்நாளே பிரியம் வந்துவிட்டது. `அவரு மாட்டுத் தொழுவத்துல பொறந்து கிடந்தபோது ஒன்னைமாதிரி, என்னை மாதிரி கறுப்பாவா இருந்தாரு, வெள்ளை வெளேர்னு பொறந்திருந்தாரு. அவரு மொகம் பூரா தேஜஸ் அடிச்சுதுன்னு டீச்சர் சொன்னதும் அததுக்கும் அவரைப்பத்தி ஒரு மரியாதை வந்துவிட்டது. டீச்சர் வீட்டுக்குப் பள்ளிக்கூட சாவி வாங்கப்போகும் புள்ளைகள் நெறையப் பேர் வீட்டில் தொங்கும் காலண்டரைப் பார்த்திருந்தன. சுற்றி காட்டாளுகளாய் நிற்க ஒரு குழந்தை தொழுவத்தில் கிடந்தது காலண்டர் படத்தில். அதன் முகத்தைச் சுற்றி நட்சத்திரம் மாதிரி ஜொலிக்கும். புள்ளைகள் அதையும் சேர்த்து நினைத்ததில் யேசுவும் உண்மையில் ஒரு சாமிதான் என்று ஒருவடிவாய் யோசித்துக் கொண்டே கதைகேட்டார்கள்.
கோடைக்காலம் போய் காத்துக்காலம் வந்தது. ஞாயிற்றுக்கிழமை மத்தியானங்களில் பள்ளிக்கூட மைதானம் புழுதிக் காலத்தில் அல்லாடியது. தாழ்வாரத்தில் படர்ந்திருந்த வேப்பமரக் கிளைகள் பேய்களைப் போல் தலைவிரித்தாடின. தூசி வந்து விடும் போதெல்லாம் புள்ளைகள் கண்களைத் துடைத்து விட்டுக்கொண்டே யேசுவானவரின் மகிமைகளைக் கேட்டன. கொஞ்சமாயிருந்த அப்பங்களின்மேல் யேசுவானவர் கையை வைத்தார். அப்பங்கள் ரொம்பவாய் வந்தன. சீக்காளிகளின் மேல் அவர் கையை வைத்தார். அப்புறம் அந்த ஆள்கள் மேல் சீக்கே இல்லை. மரியம்மா டீச்சர் இதையெல்லாம் சொல்லிவரும்போது அசலா அங்கேயே அதெல்லாம் நடப்பது போலிருந்தது புள்ளைகளுக்கு. மூணாப்பு பாண்டிக்கு உடம்பு குணமாக வேண்டி புள்ளைகள் தொடர்ந்து ஜெபம் செய்தார்கள். அந்த வருஷம் நல்ல மழை பெய்ய வேண்டுமென்று ஜெபம் முடியும் முன் கேட்டார்கள்.
ஒரு ஞாயித்துக்கிழமை மரியம்மா டீச்சர் கதை சொல்லிக்கொண்டிருந்தது. ரொம்ப அமைதியாய் புள்ளைகள் கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஊரே அமைதியாயிருந்தது. திடீரென்று கூ_கொள்ளை என்று சத்தம் வந்தது. புள்ளைகள் யாருக்கும் கட்டுப்படாமல் சத்தம் வந்த பக்கமாய் ஓடினார்கள். மூணாப்புப் பாண்டி செத்துப் போயிருந்தான். புள்ளைகளுக்கு எல்லாச் சாமிகள் மேலும் சந்தேகம் வந்தது. ரொம்ப யோசிப்பதற்குள் அடுத்த ஞாயித்துக்கிழமை வந்துவிட்டது. டீச்சர் கொடுக்கப்போகும் பிரைஸ்கள் கூடவே தோன்றி விதம் விதமான கற்பனைகளைத் தூண்ட புள்ளைகள் மறுபடியும் கதைகேட்க வந்தார்கள்.
காத்துக்காலம் அடங்கி அடைமழைக்காலம் வந்தது. பள்ளிக்கூடத்து மைதானம் சொதசொதவென்று கிடந்தது. தாழ்வாரத்து வேப்பமரக் கிளைகள் மழையில் வாங்கிய தண்ணி முத்துக்களைச் சடசடவென்று உதிர்த்துவிட்டன. புள்ளைகள் குளிருக்கு அடங்கி உட்கார்ந்து யேசு சாமியின் அற்புதங்களை அனுபவித்துக் கேட்டன. வானம் மூடிக்கொண்டு பனியும் மப்புமாயிருந்த ஒரு ஞாயித்துக்கிழமை மத்தியானத்தில் மரியம்மா டீச்சர் புள்ளைகளுக்கெல்லாம் பிரைஸ்கள் கொடுத்தது. அழகழகான பொம்மைகள் படம் வரையிற நோட்டுகள் கலர் கலராய் பென்சில்கள் சின்ன சின்ன டப்பாக்கள் எல்லாம் கொடுத்தது. இந்த ஊரில் வேதக்கோயில் இல்லை. அதனால் மரியம்மா டீச்சர் வருகிற வாரம் கிறிஸ்துமஸுக்கு கிடாரத்திற்குப் போய்விடும். புள்ளைகளுக்கு கிறிஸ்துமஸ் என்கிற வார்த்தையே குளிரும் மழையும் பிரைஸுமாய்க் குதூகலத்தைத் தந்தது. பிரைஸ்களை வாங்கி பக்கத்தில் வைத்துக்கொண்டு மண்டி போட்டுக் கண்களை மூடிக்கொண்டு தாங்களாகவே ஜெபம் செய்தன. ஜெபம் முடிந்து கண்களை முழித்து முதலில் பிரைஸ்களையே ஆவலோடு பார்த்து கைகளில் எடுத்து வைத்துக் கொண்டன.
கூச்ச நாச்சமில்லாமல் பக்தி சிரத்தையோடு புள்ளைகள் ஜெபம் செய்யத் தொடங்கிவிட்டன. கதைக்கு வராமல் ஊரணிப்பக்கமும் ஓணான்கள் பின்னாலும் திரிந்த பயல்கள் கதை கேட்கப்போய் பிரைஸ் வாங்கி வந்த பயல்களை `ஆமென் பயலெ வாடா’ என்று நக்கல் பண்ணிய போதும் இந்தப் புள்ளைகள் சட்டை பண்ணவில்லை. ஊரிலேயே இந்தப் புள்ளைகள் மட்டும் ஒரு தினுசாய் நடந்து போனார்கள்.
அந்த வருஷம் ஊரில் நல்ல மழை பெய்து வயல் வரப்பெல்லாம் பச்சை வீசியது. புள்ளைகள் கால்களில் சேறு அப்பியது. `பூட்ஸ் போட்டு நடக்கிறேன் பாரு’ என்று சேறு அப்பிய கால்களோடு லெப்ட் ரைட் என்று கத்திக்கொண்டே சொத் சொத்தென்று நடந்தன. `நாங்க ஜெபிச்சதினால தான் ஊருக்கு மழை வந்திச்சு’ என்று மரியம்மா டீச்சர் சொன்னதை புள்ளைகள் ஆத்தாமாரிடம் சொல்லின. `ஜெபிச்சுப் பார்த்தியலெ, ஏண்டா மூணாப்புப் பாண்டி செத்தான்?’ என்று ஓணான் அடிக்கிற பயல்கள் எதிர் கேள்வி கேட்டார்கள். கல்லுச்சாமியைக் கும்பிடுகிற பயல்கள் என்றும் கர்த்தர் சாமியைக் கும்பிடுகிற பயல்கள் என்றும் பிரிந்து கொண்டார்கள்.
இந்தப் புள்ளைகள் வேறவேற சாமிகளைக் கும்பிடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொண்டே வந்தன. இதற்கு முன்பெல்லாம் ஊருணியில் குளித்தால் ஈரச்சட்டையை முழங்கையில் போட்டுக்கொண்டு கீழ்ப்படியில் நின்று முனியசாமி கோயிலைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு அடிமண்ணை நெற்றியில் வைத்துக் கொள்வார்கள். கண்மாய்க்குக் குளிக்கப் போனாலே உலகம்மாளுக்கு கும்பிடு போட்டுவிட்டு வருவார்கள். மரியம்மா டீச்சரிடம் கதை கதையாய்க் கேட்டபின்பு ஊருணி முனியசாமி கோவிலையும் கண்மாய்க்கரை உலகம்மா கோயிலையும் பிடரி வழியாகப் பார்த்து நடையைக் கட்டினார்கள்.
மரியம்மா டீச்சரின் வீட்டில் மட்டும்தான் ஊரிலேயே தினமும் காலையில் இட்டிலி சுட்டுச் சாப்பிடுவார்கள். மத்தியானத்தில் குழம்பு சோறும் அந்த ஒரு வீட்டில்தான். வண்ணா வீட்டில் துவைத்து இஸ்திரி போட்டுவரும் சேலையைக் கட்டிக்கொண்டுதான் தினமும் மரியம்மா டீச்சர் பள்ளிக்கூடம் வரும். பெரியசாரையும் அழுக்குச்சட்டையெல்லாம் போடவிடாது. அவரும் எப்பொழுதும் இஸ்த்திரி போட்ட சட்டை வேட்டியோடுதான் பள்ளிக்கூடம் போவார். மரியம்மா டீச்சர் மகன் இராமநாதபுரத்தில் ஹாஸ்டலில் தங்கிப்படித்தான். கால்பரிட்சை அரைப்பரிட்சை லீவுகளில் ஊருக்கு வரும்போது அவன் போட்டிருக்கும் அரைட்ரவுசர் சட்டைகளைப் பார்த்து புள்ளைகளுக்கு அவன் மேல் ஒரு மரியாதை வரும். அளவாய்க் கச்சிதமாய் அவன் உடுத்தி வருவான். பொடிமட்டை மாயாண்டி டெயிலரிடம் தைத்தால் ட்ரவுசர் என்ன சட்டையென்ன எல்லாமே பொந்தா பொந்தாவென்று கவுனைப் போல கிடைக்கும். மரியம்மா டீச்சர் மகனுக்கு எல்லாமே ராமநாதபுரத்தில் தைப்பதுதான்.
மரியம்மா டீச்சர் வீட்டுப் பழக்க வழக்கங்களை நெருக்கத்தில் பார்த்த புள்ளைகளுக்கு காலையில் இட்லி, மத்தியானம் குழம்பு சோறு, ராத்திரியில் குழம்பு சோறு, அளவாய்த் தைத்து இஸ்த்திரி போட்ட ட்ரவுசர் சட்டை இவைகள் மேல் சொல்ல முடியாத ஆசை வந்துவிட்டது. மரியம்மா டீச்சர் கர்த்தர் சாமியைக் கும்பிடுவதால்தான் இத்தனையும் அந்த வீட்டிற்கு மட்டும் கிடைக்கின்றன என்று புள்ளைகள் பேசிக் கொண்டன.
தரவைக் காடுகளில் மாடு மேய்க்கும் போது உள்ள தனிமையிலும் உச்சி வெயிலில் நடவிற்கு நாற்று விளிம்பும் வலுவான வேலை செய்யும்போது உள்ள ஆற்றாமையிலும் வாமடையில் தண்ணீர் பாய்வதை வரப்பில் உட்கார்ந்து காவல் காக்கும்போது வரும் வெறுமையிலும் களத்து மேட்டில் பிணையல் மாட்டோடு சுற்றிச் சுற்றி வரும் யந்திரத்திலும் சோவென்று ஊற்றிக் கொண்டிருக்கும் மழை நேரத்தில் குதுகுதுப்பிலும் இந்தப் பிள்ளைகள், `கர்த்தரே எனக்குக் காலையில் சுடச்சுட இட்லி வேண்டும். மத்தியானமும் ராத்திரியும் குழம்பு சோறு வேண்டும். ராமநாதபுரம் டெய்லர் தைக்கும் ட்ரவுசர் சட்டை வேண்டும் ஆமென்’ என்று ஜெபம் செய்தார்கள்.
ஜெபித்து முடிந்ததும் அந்தப்புள்ளைகள் காலையில் இட்லி சாப்பிட்டுவிட்டு ராமநாதபுரம் டெய்லர் அளவாய்த் தைத்த கலர் கலரான ட்ரவுசர் சட்டை அணிந்து டக்டக்கென்று தெருக்களில் நடப்பது போலவும் மத்தியானச் சாப்பாட்டிற்குப் பள்ளிக்கூடத்திற்குத் தட்டுகளேந்தி வரிசைகளில் நிற்காமல் தங்கள் தங்கள் வீடுகளுக்குள் அதிகாரமாய் நுழைந்தது போலவும், சோப்புப்போட்டு முகம் கழுவுவது போலவும், பவுடர் போட்டு வெளியே போவதுபோலவும் வெகு நம்பிக்கையுடன் கற்பனை செய்தார்கள்.
திண்ணைகளில் படுக்கைகளை விரித்ததும் உறங்கப் போகுமுன்பு புள்ளைகள் படுக்கைகள் மீது மண்டியிட்டு ஜெபம் செய்தன. காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் கண்களை கசக்கிவிட்டுக் கொண்ட மறுநொடியே ஜெபம் செய்தன. புள்ளைகள் சாமி கும்பிட்டுவிட்டுப் படுப்பது சாமி கும்பிட்டுவிட்டு எழுந்திருப்பதும் பற்றி ஆத்தா அப்பன்களுக்கு ரொம்பப் பெருமை. கூப்பிட்ட குரலுக்கு பிள்ளைகள் உடனே ஏனென்று கேட்டு விடுவதில்லை. இரண்டு மூன்று தடவைகள் கூப்பிட்ட பிறகுதான் மறுகுரல் கொடுத்தார்கள். அவர்கள் எப்போதும் வேறெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
மரியம்மா டீச்சர் கால் தரையில் படாமல் நடந்தது. அதுக்கு அவ்வளவு சந்தோசம். ``வேதக்கார வீடு இல்லையின்னா என்ன? வேதக்கார புள்ளைக நெறைய ஆயிருச்சே’’னு மரியம்மா டீச்சருக்கு நெனச்சு நெனச்சு சந்தோசம்.
பெரிய ஸார் மேசைமேல் ஒருநாள் மரியம்மா டீச்சர் ஒரு உண்டியலைக் கொண்டு வந்து வைத்தது. யேசு முகக்காந்தியோடு உள்ள ஒரு படம் அதில் ஒட்டப்பட்டிருந்தது. ``யேசு ராஜா வருகிறார்’’ என்று அதில் அழகாக எழுதியிருந்தது. பள்ளிக்குப் புள்ளைகளைச் சேர்க்கும்போதும், அஞ்சாப்பு முடிஞ்சு புள்ளைகளுக்கு ரிக்காடுஷீட் கேட்டுவரும் போதும் அதில் காணிக்கை போடவேண்டுமென்று பெரிய ஸாருக்கும் புள்ளைகளுக்குமாய்ச் சேர்த்து சொல்லிவிட்டது. கீழத்தெருவில் ராமுத்தேவர் ரொம்ப நொடித்துப்போய் மனை இடத்தை விற்க வந்ததை, ``வேதக்கோயில் கட்டத் தருவார்களா’’ என்று கேட்டு மரியம்மா டீச்சர் ஆள்மேல் ஆளாய் அனுப்பிக்கொண்டிருந்தது.
புள்ளைகள் இட்லிக்கும் குழம்பு சோறுக்கும் ராமநாதபுரத்தில் அளவாய்த் தைக்கும் ட்ரவுசர் சட்டைகளுக்கும் கர்த்தரே என்று ஆரம்பித்து ஆமென் என்று முடித்து வயல்காடுகளையும் வாமடைகளையும் வெறித்துப் பார்த்துக் கொண்டு திரிந்தன.
No comments:
Post a Comment