Sunday, 16 February 2014

மௌனச் சிறுகதை

தமிழின் முதல் மௌனச் சிறுகதை 

அவளும் அந்த ஏழு நாட்களும்

 படிப்பதற்கு முன் ஒரு வேண்டுகோள்.

      இது மௌனச்சிறுகதை . பேச்சு, வர்ணனை, விவரிப்பு, உவமம்,எண்ணஓட்டம் போன்ற கதைசொல்லும் உபகரணங்கள் ஏதுமின்றி புறக்காட்சிகளால் மட்டுமே அடுக்கப்பட்டு இயங்கிச்செல்லும் கதை இது. இந்தக் ;கதையின் வரிகளை வழக்கம் போல் வாசிக்காமல் ஒவ்வொரு வார்த்தையையும் வரியையும் வாசித்தபின் நிறுத்தி அவற்றை அகக்காட்சிகளாய் உணர்ந்து பின் அடுத்த வார்த்தைக்குச் செல்லுங்கள். இவ்வகையில் இக்கதை ஒரு கூட்டுப்படைப்பாளியாய்
இயங்கிட வாசகரைக் கோருகிறது.

          -----------------------------------------------------------------------------------------------



பஸ் வந்து நிற்கிறது. அவன் ஏறுகிறான் .பஸ் நகர்கிறது பஸ் ஓடி நிற்கிறது.அவள் ஏறுகிறாள் .ஏறியதும் அவன் பக்கம் பார்க்கிறாள்.அவனும் பார்க்கிறான். பேருந்து நிலையத்தில் பஸ் நின்றதும் இறங்கி வெவ்வேறு பக்கம் நடக்கிறார்கள்.


     காலை செய்தித்தாளின் தலைப்பில் ‘முதல்வர் பதவியேற்பு’.பஸ்ஸில் ஏறியவளை அவன் பார்க்கிறான்.அவள் வேறுபக்கம் பார்த்துவிட்டு அவன் திரும்பியதும் பார்க்கிறாள். அவள் முகத்தில் புன்னகை.

     மழை.  குடைகளை பிடித்தபடி ஆட்கள். சாலையில் வெள்ளம். மழை. தூறல்.
மழை. புது வருட காலண்டர் மாட்டப்படுகிறது. பள்ளியில் கோடை விடுமுறை எழுதப்பட்டு சாத்தப்பட்டு இருக்கிறது. டீவி யில் சுதந்திரக்கொடி ஏறுகிறது.கிறிஸ்துமஸ் கேக் விற்கும் பேக்கரியில் கூட்டம்.
பழைய காலண்டர் அகற்றப்படுகிறது. மீண்டும் புதுக்காலண்டர்.

பஸ்ஸில் அவள் ஏறியதும்  அவன் அருகே புன்னகையுடன் சென்று நிற்கிறாள். அவளது பேக்கை அவன் வாங்கி மடியில்  வைத்துக்கொள்கிறான். அதைத்திறந்து சாக்லேட்டை எடுத்தவாறே அவளைப் பார்க்கிறான். .அவள் சிரிக்கிறாள்.சாக்லேட்டைச் சுவைக்கிறான்.                                                

     காலண்டரின் தேதித்தாட்கள் கொஞ்சமாய் இருக்கின்றன.

     ‘வருவாய்த்துறை’ என்று போட்டிருந்த அலுவலகத்தின் உள்ளே  ஒரு மேசையில்அவன் எழுதிக்கொண்டிருக்கிறான்.

     வங்கியின் கடிகாரத்தில் ஐந்தரைமணி. வங்கியை விட்டு அவள் வெளியே வருகிறாள்.;;; பேருந்து நிலையத்தில் அவள் நின்று கொண்டிருக்கிறாள். அவன் வந்து சேர்கிறான். இருவரும் ஓட்டலுக்குள்போகிறார்கள்

      காலை செய்தித்தாளின் தலைப்பில் ‘முதல்வரின் ஐந்து வருட சாதனை விழா’..பஸ்ஸில் அவள்  ஏறியதும் அவனைப்பார்த்து புன்னகைக்கிறாள். அவனருகில் காலியாயிருக்கும் இருக்கையில் போய் அமர்கிறாள்.

     ஓட்டல் கார்டனில் எதிர் எதிரே அமர்ந்திருக்கிறார்கள.; சிரிப்புடன் சிரிப்புடன் சிரிப்புடன் ஒருவரை ஒருவர்  பார்க்கிறார்கள். அவள் சிரித்தவாறே ஸ்வீட்டைச் சுவைக்கிறாள்.
 
     அவனும் ஸ்பூனில் எடுத்துக் குனிந்து வாயில் வைக்கிறான். சுவைத்தவாறே நிமிர்கிறான்.நிமிர்கையில் சற்றே முந்தானை விலகியிருக்கும் அவளின் வலதுபக்கம் எதேச்சையாய் கண்ணில் படுகிறது.அவன் கண்பட்டதை அவள் பார்த்து இயல்பாய் முந்தானைத் தலைப்பை சரிசெய்கிறாள்.

    இப்போது அவள் முகத்தில் சிரிப்பு இல்லை. எழுந்து சென்று (கொஞசம் வேகமாய்) கையலம்புகிறாள். தான் எழுந்திருக்கும் முன் பார்க்கிறான். அவளின் ;தட்டில் ஸ்வீட் மிச்சமிருக்கிறது.

     அம்மா சாப்பாட்டைப் பார்க்கிறாள். தட்டில் சாப்பாடு அப்படியே இருக்கிறது.எதிரே அவன் உட்கார்ந்திருக்கிறான். எழுந்து தன் அறைக்குள் போகிறான்.படுக்கையில் குப்புறவிழுகிறான். முகம் தலையணைக்குள் புதைந்திருக்கிறது. லேசாக உடல் குலுங்குகிறது.
  கடிகாரத்தில் ஒரு மணி. தியேட்டரில் இரண்டாவது காட்சிவிட்டு ஆட்கள் போகிறார்கள்.படுக்கையில் புரண்டவாறு இருக்கிறான். எழுந்து சேரில் உட்காருகிறான். கண்கள் கலங்கிப்போய் அழுத வீக்கத்துடன் காணப்படுகின்றன.

  காலண்டரில் வியாழன். .பஸ்ஸில் இருக்கிறான்.அவள் ஏறும் நிறுத்தத்தில் ஆட்கள் ஏறுகிறார்கள்.கழுத்தை வளைத்து ஏறுபவர்களையே பார்க்கிறான்.அவள் இல்லை.

  வெள்ளி. அவள் இல்லை.                                    

   ;வீட்டில் தன்அறையில்  சவரம்  செய்யாத முகத்துடன் உட்கார்ந்திருக்கிறான். மேசையில் தட்டில் தோசை இருக்கிறது.காபி ஏடு படிந்து இருக்கிறது. காலண்டரில் சிவப்பில் ஞாயிறு.
 
    பள்ளிப்பிள்ளைகள் பஸ்ஸில் ஏறுகிறார்கள். அவள் இல்லை. அலுவலகத்துக்குள் செல்கிறான். தொலைபேசியில் எண்களை சுழற்றுகிறான்.ஏதும் பேசாமல் கேட்காமல் வைக்கிறான்.

   காலண்டரில் செவ்வாய்.

   அவள் பஸ்ஸில் இல்லை .அவன் அலுவலகத்துக்குள் சென்று விடுமுறை விண்ணப்பம் எனத் தாளில் எழுதுகிறான்.பேனா இரண்டு நாட்கள் என எழுதுகிறது. வெளியில் வருகிறான். பஸ்ஸில் ஏறி வீட்டுக்குள் செல்கிறான்.


     ‘ஆடிட் அர்ஜென்ட்’ என்று எழுதப்பட்டிருந்த பத்து பனிரெண்டு ஃபைல்களுக்குப் பின்னால் மறைந்து போய் ;கையை உதறிக்கொண்டு உதறிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறாள் அவள்.

     ஃபைலை மூடிவிட்டு பெயருடன் 54325 என்று எழுதப்பட்டிருந்த அட்டையைப்பார்த்து தொலைபேசியைச் சுழற்றுகிறாள்.

      காதிலேயே வைத்துக்கொண்டிருக்கிறாள்.மீண்டும் சுழற்றுகிறாள். பேசாமல் தலையை மட்டும் அசைத்தபடி வைக்கிறாள் .நெற்றியை துடைத்துக்கொண்டு; ஸீட்டில் வந்து உட்கார்கிறாள்.

      வெள்ளைத்தாளெடுத்துக் கடிதம் எழுதுகிறாள்.முகவரி எழுதி பிய+னிடம் கொடுக்கிறாள்.

      புதன். பஸ்ஸில் அவன் நின்று கொண்டிருக்கிறான்.பஸ் போகும் திசையில் சாலையையே பார்த்தபடி.  அவளின் நிறுத்தம் தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது.

      நெருங்குகிறது. வருகிறது. பஸ் நிற்கிறது.ஆட்கள் ஏறுகிறார்கள.அவள் இல்லைஅவன் அங்கேயே இறங்குகிறான்.; அவள் நிற்கும் தரையையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.

      வீட்டில் தன் அறையில் உட்கார்ந்;திருக்கிறான். மேசையில் கிடக்கும் வார இதழைப் ;புரட்டுகிறான்.

       முந்தானை விலகிக் கிடக்க மோகமாய்ப் பார்க்கும்  நடிகையின் படம். ஒருஆணை கோபமாய் முறைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் படம். வாரஇதழை வீசி அடிக்கிறான். தலையைப் பிடித்துக்கொள்கிறான். விளக்கை அணைக்கிறான். மேசை விளக்கு மட்டும் ஒளிர்கிறது. தாள் எடுக்கிறான். பேனா எழுதுகிறது.

        ‘தாரிணி அன்று ஓட்டலில் சாப்பிடும்போது நான்…..’ காலை செய்தித்தாள் வந்து விழுகிறது. ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம்.

         அம்மா அறைக்குள் வருகிறார். மேசையில் கண்ணாடிக்குவளையில் பாதிப்பால். மஞ்சள் நிறத்தில்.

          குனிந்து மேசையில் நெற்றியைப்பதித்து  நாற்காலியில் உட்கார்ந்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறான்.

          அம்மா மெல்ல முதுகில் கைவைத்து உலுக்க கழுத்து சடக்கென தொங்கிச்சாய்கிறது. உதடுகளில் எறும்புகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.

          ஐந்தாறு எறும்புகள் வாயில் ஊர்ந்து கொண்டிருக்கின்றன.

          அவள் மேசையில் ஒரு கடிதம் வைக்கப்படுகிறது. அதில் அவனதுமுகவரி. பக்கத்தில் ‘திருப்பப்படுகிறது’ என சிவப்பு மையில் எழுதப்பட்டிருக்கிறது.

அழுது வீங்கியிருக்கும் அவளது கண்கள் மீண்டும் கலங்குகின்றன.கடிதத்தைப்  பிரிக்கிறாள்.

 ‘என் உயிர் பாபு.
           ஸாரிப்பா… ஆபிஸில் ஆடிட். எட்டேகால் பஸ்ஸிலேயே  வந்துவிடுகிறேன்.வேலை கை ஒடிகிறது.
   உனக்கு மூன்று தடவை போன் பண்ணினேன் தெரியுமா..நீ இல்லையே…சாயங்காலத்தில் பஸ் ;ஸ்டாண்டுக்குக்கூட வரவில்லையே... என்ன ஆயிற்று உனக்கு.நாளை ஆடிட் முடிகிறது. நாளை பஸ் ஸ்டாண்டில் என்னைப்பார்… ப்ளீஸ்.

           டேய் படவா… உன்னைப் ;பார்க்காமல்  உயிரே போய்விடும்போல் இருக்கிறதடா ….ஏமாத்திடாதே’
                                                                -----------------------------------------------------------------------------------------------------------                  

குறிப்பு: 1992ல் நான் எழுதிய இக்கதை என்னிடமே இருந்து- பின் அனுப்பப்பட்டு 9.4.1995 ஆனந்தவிகடன் இதழின் இணைப்பு விகடனில் ‘தமிழ்ச் சிறுகதைகளில் ஒரு புதிய பங்களிப்பு’ என்ற குறிப்போடும் கதையின் அமைப்பு குறித்த விளக்கத்தோடும் பிரசுரமானது.
                                           -

No comments:

Post a Comment