Sunday 23 September 2012

துணை உறுப்புகள்

கண்களை  மேசையின் மேல் வைத்தேன்
காலத்தை  அதன் அருகிலேயே  வைத்தேன்
ஒன்றை ஒன்று தொட்டுவிடாதபடி

சட்டையை  தொங்க விட்டபோது
எழுத்துகள் கொட்டி உருண்டோடின

வாயையும்  காதுகளையும்
உணவு மேசையில் வைத்து விட்டு
உண்டு முடித்தேன்

வெளியில்  மீண்டும்  கிளம்புகையில்
வாகனத்தின்  கீழ்  சிக்கிக்கிடந்த
என் கால்களை
செல்ல நாய் கடித்துக்கொண்டிருந்தது

செல்லும்  வழியில்  பெரிய  மைதானத்தோடும்
வரிசையான  கட்டிடங்களோடும்
மெல்லிய  இரைச்சலோடுமிருந்த
என் மூளை  என்னை  நலம் விசாரித்தது .

அனைத்தையும்  கடந்து
பிழைப்பையும்  கடமையையும்
பிரித்தறிய முடியா  நாற்காலியில்
அமர்ந்தேன்

தலைக்கு  மேல்  எண்ணம்
வேகமாக  சுழன்றதில்
புழுங்கிக்  கொட்டியது .

ஒருவழியாய்  மாலையில்
வெளியே  வந்தபோது
எதிரே  இருந்த பெரிய மரத்தில்
சின்னஞ்ச்  சிறு  மஞ்சள் பூக்களில்
சிரித்துக்கொண்டிருந்தது
போன ஞாயிறு  நான்  தொலைத்திருந்த
என் மனம் .