Friday 20 March 2020

மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் குடியுரிமை அல்லாதோரை கண்டறிதலும்


           நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்,தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியன குறித்த எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுகிற சூழலில் மத்திய அரசு ஒரே விளக்கத்தைத்தான் ஊடகங்களுக்கு திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது. குடியுரிமைச் சட்டத்திற்கும் குடிமக்கள் பதிவேட்டுக்கும் தொடர்பில்லை; குடியுரிமை பதிவேட்டுக்கும் மக்கள்தொகை பதிவேட்டுக்கும் தொடர்பில்லை என்பதுதான் அது. அமைச்சகம் மட்டுமன்றி பிரதமரும் உள்துறை அமைச்சரும் அடிக்கடி இதனையே சொல்லிவந்துள்ளனர்.

இச்சூழலில் எதிர் வரும் ஏப்ரல் 1 முதல் செப்டெம்பர் 30 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிக்கை தேசிய மக்கள் தொகை ஆணையாளரால் கடந்த வருடம் ஜுலை 31 அன்று வெளியிடப்பட்டது. அவ்வறிவிப்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பே தேசிய குடிமக்கள் பதிவேட்டினை தயாரிப்பதற்கான முதற்கட்டச் செயல்பாடு என்றும், 2003 ல் ( வாஜ்பாய் அரசால் ) கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படிதான் இது செயல்படுத்தப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2003 குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளில்  வீடுவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அவ்விவரங்கள் உள்ளூர் மக்கள்தொகை அலுவலரால் சரிபார்க்கப்பட்டு மக்கள்தொகைப்பதிவேடு தயாரிக்கப்படும் .அதன் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி செய்யப்படும் என சொல்லப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து உச்ச நிதீமன்றத்தில் நூறுக்கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 22 ல் அவற்றை விசாரணைக்கு எடுத்துகொண்ட உச்ச நீதிமன்றம்   , மார்ச் 18 க்குள் அவை குறித்த  பதில் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு  மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது . இந்நிலையில் மார்ச் 17 செவ்வாய் அன்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் பிரமாணப் பத்திரம் ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்  செய்துள்ளது.

அந்த பிரமாணப் பத்திரத்தில் , குடிமக்கள் அல்லாதோரிடமிருந்து இந்திய குடிமக்களை   பிரித்தறியவும் , சட்டதிற்கு புறம்பாக நாட்டிற்குள் வந்திருப்பவர்களை கண்டறிந்து அவர்களை சட்டபடி வெளியேற்றவும் தேசசியகுடிமக்கள்பதிவேடு அவசியமாகிறது . அவ்வறு குடிமக்களை குடிமக்கள் அல்லதோரிடமிருந்து இனங்காண  அத்தியாவசியத் தேவையாக இருக்கிற தேசிய குடிமக்கள் பதிவேட்டின் தயாரிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்போடு இணைந்தோ அல்லது தனியாகவோ செயல்படுத்தப்படும்

சட்டவிரோதமாக குடியேறியவர்களை இனங்காணுதல் என்பது ஒரு அரசின் இறையாண்மை ,சட்டம் மற்றும் அற அடிப்படையிலான கடமையாகும்.. அப்படி சட்டவிரோதமாக உள்ளே வந்திருப்பவர்களை இனங்கண்டு அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் பணிகளை தொடங்குவதும் மத்திய அரசின் பொறுப்பாகும் .
1946 ல் போடப்பட்ட வெளிநாட்டினர் சட்டம்  அவர்களை வெளியேற்றும் முழு அதிகாரத்தையும் மத்திய அரசுக்கு தந்திருக்கிறது.   சட்ட விரோதமாக குடியேறிய எந்தவொரு நபரும் இந்தியாவில் தொடர்ந்து வசிக்கவோ அல்லது குடியுரிமை கோரவோ முடியாது . அரசியல் சாசனத்தின் 21 ஆவது பிரிவு குடியுரிமைக்கான பரந்துபட்ட வாய்ப்புகளை அளித்திருந்தாலும் அது சட்டவிரோதமாக குடியேறியவர்களை உள்ளடக்கவில்லை.வலுவான ஆதாரங்களின் அடிபடையிலேயே ஒருவர் தனது குடியுரிமையை கோர இயலும் . 

ஒருவர் தனது குடியுரிமையை நிறுவ தனது பிறந்த தேதி /பிறந்த இடம்/தாய் தந்தையரின் பிறந்த இடம், அவர்தம் குடியுரிமை / தேவைபடும் நேர்வுகளில் தாத்தா பாட்டியின் பிறந்த இடம்/  ஆகிய ஆதாரங்களை குடியுரிமை சட்ட விதி 6A (1) (d) ன் படி வழங்கவேண்டும்`.. வழங்கப்பட்ட ஆதரங்களை சரிபார்த்து மாநில அளவிலான மக்கள் தொகை அதிகாரிகள் அதனை இறுதி செய்வார்கள். மாநில அலுவலர்களால் ஏற்றுகொள்ளப்படாத சந்தேகத்திற்குரிய தனிநபர் விபரங்கள் முதற்கட்ட  சான்றுகளாக பரிசீலிக்கப்படும் சாத்தியமிழக்கக் கூடும்.

மேற்கண்ட விவரங்கள் உள்ளிட்ட தனது 129 பக்க பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மேலும் அதில் , குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது முழுவதும் சட்டப்பூர்வமானது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது, இது நாடாளுமன்றத்தின் இறையாண்மைக்குத் தொடர்பான விசயம்.. இது குறித்து நீதிமன்றத்தின் முன்பு கேள்வி கேட்க முடியாது . குடியுரிமை குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது . இச்சட்டம் தற்போது உள்ள எந்த உரிமைகளையும் பறிக்காது  இது மக்களின் சட்டபூர்வ ஜனநாயக மதச்சார்பற்ற உரிமைகளை பாதிக்காது .இந்த சட்டம் எந்த இந்தியர்களுடனும் தொடர்பு கொண்டதல்ல. என்றும் கூறப்பட்டுள்ளது.

மத அடிப்படையிலான சட்டத்திருத்தம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என நீதி மன்றத்திலேயே பிராமண பத்திரம் தாக்கல் செய்யும் துணிவு மோடி அரசுக்கே உள்ள சிறப்பு. . 2003 ல் திருத்தப்பட்ட சட்டத்தில் மக்கள் தொகைப்பதிவேடு தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைதான் தொடர்பு படுத்தப்பட்டதே தவிர மத அடிப்படை ஏதும் பேசப்படவில்லை.


ஆக தற்போது மக்கள் தொகைப் பதிவேட்டுடன் இணைந்த குடிமக்கள் பதிவேட்டினைத் தயாரிப்பதுதான் அரசின் பிரதான நோக்கம் எனில் அதற்கு 2003 திருத்தச்சட்டமே போதும்.   .ஆனால் இவ்வளவு முனைப்புடன் குடியுரிமை திருத்த சட்டத்தை  நிறைவேற்றியதன் உள்நோக்கம் மத அடிப்படையிலான பிரிவினைவாதத்தைப் பேணி ஒரு ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதுதான் .
2014 டிசம்பருக்கு முன்பு ஆப்கானிஸ்தான் ,பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இந்து ,சீக்கியர் ,பார்சி, புத்தம் ,சமணம் மற்றும் கிருத்துவ மதத்தினர் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்பதுதான் புதிய சட்டத் திருத்தம் . இதில் இஸ்லாம் மதத்தினர் சேர்க்கப்படாததும் ஏனைய இலங்கை மியான்மர் உள்ளிட்ட நாடுகள் சேர்க்கப்படாததும் வன்மத்தின் கோரமுகத்தையே காட்டுகின்றன.


2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆண்டு என்பதால் அதை சாதகமாக்கி வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புதான் என ஏப்ரல் 1 தொடங்கும் கணக்கெடுப்பை அரசு காட்டிக்கொள்ள விரும்புகிறது.

ஆக மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரித்து அதன் அடிப்படையில் குடியுரிமைக்கு தகுதி இல்லாதோரை கண்டறிந்து வெளியேற்றும் செயலுக்கு முன்னதாக சட்டவிரோத குடியேறி யார் என்று வரையறுத்து கொள்ளவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் .
     2014 டிசம்பருக்கு  முன்பு சட்டவிரோதமாக குடியேறிவர்களில் யார் குடியேறியது சட்டவிரோதம் அல்ல என்று முடிவு செய்வதற்கு மதத்தை எடுத்திருப்பது மதவாத சக்தியான பா ஜ க என்கிற ஆர் எஸ் எஸ் சின் 75 வருட கால கனவு செயல்திட்டம். அந்தக் கனவுகள் செயல்படுத்தப்படுகின்றன.








1 comment: