Wednesday 5 April 2023

புதுகை சஞ்சீவியின் கடிதம்

 

                    08.08. 2008

 

பேரன்புமிக்க ராசி சார் அவர்களுக்கு

இருகரம் கூப்பிய வணக்கம்.

 

இன்று  முழுவதும் உறக்கம் வராமல் , நெகிழ்ந்த மனதோடு புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். கண்கள் இறுக மூடியிருந்தாலும் என் சிந்தனை முழுவதும் உங்களைப் பற்றியதாகவே இருக்கிறது.

 

நான் ஆசைப்பட்ட மாதிரியே காவ்யாவில் இன்னும் பதினைந்து நாட்களில் புத்தகம் தயாராகி விடும் என்கிற செய்தி கேள்விபட்டதிலிருந்தே மனம் உங்களைத்தான் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.

இந்த கடிதம் எழுதத் தொடங்கும் போது என் கண்களில் ஈரம் படர்கிறது. இதுதான் ஆனந்தக்கண்ணீர் என்பதா ?எழுத்தில் வடிக்க முடியாத ஒரு உணர்வு தேகமெங்கும் சிலிர்த்தோடுகிறது. நெகிழ்ச்சியா? பரவசமா? சந்தோசமா ?புரியவில்லை. 

என் தந்தை இறந்த தினத்தில் சொட்டுக்கண்ணீர்கூட வந்த்தில்லை எனக்கு.அப்பா செத்துக்கிடக்குறாரு கல்லுப்போல இருக்கான்னு நினைப்பார்களே ,என்பதற்காகவாவது ரெண்டு சொட்டுக் கண்ணீர்கூட வரக்கூடாதா என்று ஏங்கியிருக்கிறேன்.வாசலில் கூடியிருக்கும் உறவினர்கள் கூட்டம் என்னைப் பார்த்துப் பார்த்து என் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டுப் பேசிக்கொண்டிருக்க நான் பிரேதத்தைப் பார்த்தாலாவது  அழுகை வருமா என்கிற யோசனையோடு வீட்டுக்குள்சென்று அவருடைய காலடியிலேயே கால் மணி நேரம் நின்று பார்த்தும் கொஞ்சமும் கலங்காத மனதுடன் வெளியே வந்திருக்கிறேன்.இத்தனைக்கும் அப்பாவின் மேல் பாசம் இல்லாமல் தந்தையின் மீது வெறுப்பாகவோ வளர்ந்த பிள்ளை இல்லை நான்.


Thursday 19 January 2023

உண்மைகளின் புனைவாளன்

 (புதுகை சஞ்சீவியின் ”எழுத்தாளன் சொன்ன கட்டுக்கதைகள்” சிறுகதை நூலுக்கு நான் எழுதியுள்ள அணிந்துரை )

  

 

     தமிழில் சிறுகதை இலக்கியம் என்பது தமிழ் மரபிலிருந்த வாய்மொழிக் கதைகளின் தொடர்ச்சியாகவே வந்தமைந்த ஒரு வகைமை . பொதுவாக ஆய்வாளர்களால் சொல்லப்படுவதுபோல் அது மேலைநாட்டிலிருந்து வந்ததல்ல. தமிழ் உரைநடை மரபு  குறித்து தொல்காப்பியம் இவ்வாறு கூறுகிறது.

பொருள் மரபில்லாப் பொய் மொழியானும்

பொருளொடு புணர்ந்த நகை மொழியானும்  ( பொரு 1420 )

 

இதில் பொருள் மரபில்லா பொய்மொழியானும் என்பதற்கு கற்பனை கலந்த புனைவுப் பேச்சு எனவும் பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்பதற்கு உண்மைகலந்த வேடிக்கைப் பேச்சு எனவும் உரையாசிரியர் விளக்கம் தருவர். மேற்கண்ட  மரபுக்கூறுகளை எடுத்துக்கொண்டுதான் பாரதி தனது ஆறில் ஒரு பங்கு , காக்காய் பார்லிமெண்ட் முதலான கதைகளைப் படைத்தார்.

       மேற்கத்திய கலை வடிவங்களை இந்திய எண்ணங்களைக் கொண்டு படைத்துக் காட்டுவதே நவீனம் என்று பரவலாக இங்கு அறியப்பட்டிருந்த காலத்தில், பாரதியோ நமது தமிழ் மரபை நவீனப்படுத்த முயன்றார்..அதாவது மரபிலக்கியத்தின் பழமைவாத நம்பிக்கைகளை ஒதுக்கி  அவற்றை மறுபரிசீலனை செய்யும் புத்திலக்கியப் போக்கினை தொடங்கி வைத்தார் .

       

      ஆக தமிழின் சிறுகதை இலக்கியத்தை  நுட்பமாகப் பார்த்தால் மற்ற எல்லாக் கலைகளையும்  போலவே உலகளாவிய வடிவத் தாக்கங்களுக்கும் குறுக்கீடுகளுக்கும் உள்ளாகி நல்லதோர் வடிவக் கச்சிதத்தை அடைந்தது என்றே சொல்லவேண்டும்.  அது உலகம் முழுதும் நடந்த மறுமலர்ச்சி மற்றும் தொழிற்புரட்சிக் காலங்களின் தாக்கத்தினால் உண்டான விளைவுகளில் ஒன்று.  அதனால் சிறுகதை நம்முடையது , வடிவக் கச்சிதம் வந்து சேர்ந்தது என்றே கொள்ளவேண்டும்

                        ******  ***** ********

 

      ருவர் நடந்த ஒரு நிகழ்வை  அடுத்தவருக்கு சொல்கிறபோது ஒவ்வொரு கூறையும் காட்சிப்படுத்தி விவரித்து ரசனையாக சொல்வாரெனில் கேட்பவர் அதைக் ”கதை”போல் உணர்கிறார். . மற்றொரு நேர்வில் , நடக்காத ஒன்றை ஒருவர் புனைந்து சொல்வாரெனில் கேட்பவர் அவர் நன்றாக ”கதை அளப்பதாக” சொல்கிறார். முதலில் சொன்னபடி கதை என்பது உண்மை என்றாகிறது . இரண்டாவதில் அது பொய் என்றாகிறது. ஆக கதை என்பது உண்மையா ? பொய்யா ? . நாம் இப்படிச் சொல்லலாம். கதை என்பது உண்மையைப் புனைவது.

 

    ஒரு உண்மையைப் புனைந்து அதன் உள் ஒளியை படைப்பாக்கி அதன் மூலம் வாழ்வின் மகத்தான தருணங்களை வாசகனுக்குக் கொண்டுசேர்ப்பவன் ஒரு நல்ல எழுத்தாளன் என்றால் , அவ்வகையில் தற்காலப் படைப்பாளர்களில் இந்த தொகுப்பின் மூலம் முதல் வரிசைக்கு வந்திருக்கிறார் புதுகை சஞ்சீவி .

 

    தலைப்புக் கதையான எழுத்தாளன் சொன்ன கட்டுக்கதைகளில் கதைசொல்லியோடு அவனுக்குள் இருக்கும் எழுத்தாளன் எனும் சுய விமர்சகன்  நடத்தும் போராட்டங்களை உயிர்ப்பாய் விவரித்துச் செல்கிறார். அந்த எழுத்தாளன் எப்போதும் எதிர்மறை விவாதங்களையே புரிபவனாக இருந்தாலும் , நனவிலி மனத்தின் கனவுகளில் புதிய வெளிச்சங்களைத் தருவதும் அவனின் உள்வேலைதான். தன்னை கருவேல மரமாகக் காண்பதும் கொடிகளும் கொம்புகளும் தன்னை அழுத்திக் கொண்டிருப்பதும் அருகில் சீராக அமைக்கப்பட்ட பணங்காய்ச்சி மரத் தோட்டங்களும் தமிழ் சிறுகதைக்குப் புதிய படிமங்கள்.. கதையின் இறுதியில் அவன் சந்திக்கச் செல்வது மனைவியையும் மகனையும் மட்டுமல்ல, ஒரு புது வாழ்வையுந்தான். .கட்டுக்கதை சிதறிக்கிடக்கும் அவனது வாழ்வை மறுகட்டமைப்பு செய்கிறது.   

 

     தீராக்கடன் கதை நாம் வெளிப்படுத்தாமல்  கடக்க முயற்சிக்கிற ஒரு அடிப்படையான உடலியல் பிரச்சினையை அதி தீவிரமாகப் பேசுகிறது .

கதையின் நிகழ்வுகளில் கொஞ்சமும் தொடர்புபடுத்தப்படாத அதிர்ச்சியான இறுதி முடிவு ஒரு கணம் நம் மூச்சைப் பிடித்துப் பார்க்கிறது. இந்த வாழ்க்கைப்பாட்டின் அழுத்தங்களால் நசிவதையே  தம் வாழ்வாகக் கொண்டுள்ள எண்ணற்ற பெண்களுக்கு மொத்த ஆணினமும் பட்டுள்ள தீராக் கடனைக் காட்டி குற்ற உணர்வை ஏற்படுத்துகிறார் . சஞ்சீவி.

 

                 *****    ******   *****

     தைகளை மிகப்பொருத்தமான சொற்களைத் தேர்ந்து சொல்லிச்செல்லும் விதத்தில் புதுகை சஞ்சீவி ஒரு தேர்ச்சிமிக்க எழுத்துக் கலைஞராக மிளிர்கிறார் .. காட்சிகளை பொருத்தமான வரிசையில்  சரியான இடத்தில் வைப்பதில் வியப்பூட்டுகிறார்.

    ஞானச்செருக்கு எனும் கதையில் எளிய குடும்ப பின்ணணி கொண்ட ஒரு பெண்ணை மாப்பிள்ளைவீட்டார் பெண் பார்க்க வருகிறார்கள் , .

     // ”பொண்ண நல்லா பாத்துக்கப்பா ” யாரோ மாப்பிள்ளையிடம் சொன்னது கேட்டது. .அங்கிருந்த அனைவரும் அவளது பிரகாசமான கண்களை ,கூரிய மூக்கை , மென்மையான சிவந்த விரல்களை , பளிச்சென்ற சருமத்தை அவரவர் மனத்தராசுகளில் எடைபோட்டுக் கொண்டிருந்தார்கள்.//

கதையின் பெரும்பகுதி நகர்ந்துவிட்ட நிலையில் அந்த பெண்ணின் தோற்றத்தை முன்னர் எங்கும் சொல்லாமல் மாப்பிள்ளை வீட்டார் பார்க்கிறபோதுதான் வாசகனுக்கும் காட்டுகிறார். இந்த இடவைப்பு கவனிக்கத்தக்கது. இந்தக் கதையின் முடிவை படிக்கின்ற பெற்றோர்கள் தம் மகளின் மனதறியாமல் அவளது முன்னற்றக் கனவுகளைச் சிதைக்கிற ஒரு திருமண முடிவை எடுக்கமாட்டார்கள்.

 

     அதேபோல்,  நகரத்து பேருந்தில் பயணித்தவர் சொன்ன கதையில் அந்த மீன் வியாபாரி கதை முழுக்க ஒரு பழைய சைக்கிளில்தான் சென்றுகொண்டிருப்பான். ஆனால் ஒரு பதட்டமான சூழலில் தனக்கு உதவி செய்த ஒரு அம்மையாரை சந்திக்க செல்லும்போது மட்டும் எண்ணெய்ப் பசையில்லாத சைக்கிள் செயினின் கொடூரமான சத்தத்தை பதிவுசெய்கிறார்.

அவனது மன அவதிக்குப் பின்னிசையாக அது பொருந்துகிறது.

 

   பாறைக்குளம் கதையில் வரும் ஐந்து விடலைப்பருவ ந்ண்பர்கள், கிளிப்பட்டி அம்மன் கோயிலில் போய் இரவில் தூங்கினால் கனவில் வருங்கால மனைவி தெரிவாள் என்று ஒரு பாட்டி சொன்னதைக் கேட்டு அங்கு தூங்கப் போகிறார்கள் . அவர்கள் தூங்கினார்களா கனவில் மனைவி வந்தாளா எனச் சொல்லாமல் அப்படியே வைத்துவிட்டு கதையின் அடுத்தப் பகுதிகளைச் சொல்லிச்செல்வார். முனைப்பான பகுதியில், நண்பர்களின் ஒருவனான  சந்திரன் பாறைக்குளத்தில் மூழ்கி இறந்து விட காவல் துறையினர் இவர்கள்மீது கூற்றம் சுமத்த முயற்சிக்க அப்போதுதான் தூங்கிய கதையினை இணைக்கிறார்.

அன்று யாருடைய கனவிலும் ஒருத்தியும் வரவில்லை என்றும் அப்ப நம்ம ஒருத்தருக்குமே கல்யாணம் ஆகாதா என சந்திரன் கேட்டதையும் சொல்லி நம்மை காவல்துறை கைது செய்துவிட்டால் பிறகேது கல்யாணம் என அவர்கள் புலம்பும் இடத்தையும் அழகாகச் சேர்க்கிறார். இது அவரது எழுத்தின் வரைகலைச் சிறப்பு.

 

            ******      *******     *******

       தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுமே விவரணைகளால் சொல்லப்பட்டிருப்பதைவிட காட்சி மொழிகளாலேயே அதிகமாய் சொல்லப்பட்டிருக்கின்றன. .ஒவ்வொரு நிகழ்வும் காட்சிகளாக நம் முன்னே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன அல்லது அந்த கதைக்களத்தில்  பாத்திரங்களோடு  நாமும் உடனிருக்கிறோம். வாசகனையும் கதைக்குள் கொண்டுபோய் வாழவைப்பது மிகுந்த சவாலான எழுத்துவகை.. அது படு இயல்பாக புதுகை சஞ்சீவிக்கு கைவந்திருக்கிறது.

   எளிய மனிதர்களின் மிக எளிய வாழ்க்கையை, அவ்வளவாக கவனத்தில் கொள்ளப்படாத உள்ளடக்கங்களை கதைப்பரப்புக்கு கொண்டுவருவது படைப்பாளரின் மனிதத்துவ அன்பின் மேன்மை என்றே சொல்லவேண்டும். அதுதான், வாசிப்பவரின் சமனை குலைக்கக்கூடிய ”தீராக்கடன்” , உறவு புறக்கணித்தபோதும் நாங்கள் இருக்கிறோமென நண்பனின் கல்லறையை மெழுகி வணங்கும் நண்பர்களைக்காட்டி நட்பை உயர்த்தும் ”கல்லறைத்தோட்டம்” ஆகிய கதைகளை எழுத வைத்திருக்கிறது.

 

      செல்லாக்கோபம் கதை முதல் வரியிலிருந்து கடைசி வரிவரை  வாசகனை அடக்கமுடியாத சிரிப்பலைகளில் ஆழ்த்துகிறது.. இந்த வகைமையில் ஒரு கதையை தமிழ் வாசகப்பரப்பு அண்மைக்காலத்தில் கண்டதில்லை என்றே சொல்லவேண்டும். கொல்லெனச் சிரிக்கும் சிரிப்பு , வாய்பொத்தி கமுக்கமாய் சிரிக்கும் சிரிப்பு , நமட்டுச் சிரிப்பு என அதில் வரும் பாத்திரங்கள் சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அந்த ஒவ்வொரு சிரிப்பிலும்  , சிரிப்புக்கு காரணமான சுப்பனை போன்ற ஏதுமறியா அப்பாவி மனிதர்களின் வலியை வாசகன் உணரமுடிகிறது. ..அது அறியாமைகளின் மீது நிகழ்த்தப்படும் அரசியல் சமூக அதிகாரங்களின் குறியீடாக வெளிப்படுகிறது.

 

     அண்மையில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் எழுதியுள்ள  தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் ( முதல் ஐம்பது ஆண்டுகள் ) நூலுக்காக ஐயாயிரம் கதைகளை படித்ததாக கூறினார். அதன் இரண்டாவது ஐம்பது ஆண்டுகள் பகுதி வெளிவரவிருக்கும் நிலையில் அதற்காக இன்னும் ஐயாயிரம் கதைகளுக்குமேல் அவர் படித்திருக்ககூடும். அதைப்பற்றி அவர் கூறும்போது நம் படைப்பாளர்கள் எல்லாவற்றையும் , எதையும் இல்லையெனச் சொல்லமுடியாத அளவுக்கு எழுதிவிட்டார்கள். எத்தனை பார்வைகள் எத்தனை கோணங்கள் ,எத்தனை வடிவங்கள் ..என சிலாகித்தார்.

 

      அப்படி நிறைந்து கிடக்கிற கதைப்பரப்பில் இன்னும் இன்னும் எங்கள் தமிழ் வாழ்வில் எழுத வேண்டியது ஏராளமாய் இருக்கிறது என்று கிளர்ந்துவரும் அடுத்தக்கட்ட எழுத்தாளர்களில் புதுகை சஞ்சீவி குறிப்பிடத்தக்கவராய் இருப்பார் என்பதற்கு அவரின் இந்த தொகுப்பே சான்று.

 

 

புதுக்கோட்டை                      -           ராசி.பன்னீர்செல்வன்

27.12.2022

 

 

.

 

 

 

 

 


Friday 20 March 2020

மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் குடியுரிமை அல்லாதோரை கண்டறிதலும்


           நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்,தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியன குறித்த எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுகிற சூழலில் மத்திய அரசு ஒரே விளக்கத்தைத்தான் ஊடகங்களுக்கு திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது. குடியுரிமைச் சட்டத்திற்கும் குடிமக்கள் பதிவேட்டுக்கும் தொடர்பில்லை; குடியுரிமை பதிவேட்டுக்கும் மக்கள்தொகை பதிவேட்டுக்கும் தொடர்பில்லை என்பதுதான் அது. அமைச்சகம் மட்டுமன்றி பிரதமரும் உள்துறை அமைச்சரும் அடிக்கடி இதனையே சொல்லிவந்துள்ளனர்.

இச்சூழலில் எதிர் வரும் ஏப்ரல் 1 முதல் செப்டெம்பர் 30 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிக்கை தேசிய மக்கள் தொகை ஆணையாளரால் கடந்த வருடம் ஜுலை 31 அன்று வெளியிடப்பட்டது. அவ்வறிவிப்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பே தேசிய குடிமக்கள் பதிவேட்டினை தயாரிப்பதற்கான முதற்கட்டச் செயல்பாடு என்றும், 2003 ல் ( வாஜ்பாய் அரசால் ) கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படிதான் இது செயல்படுத்தப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2003 குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளில்  வீடுவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அவ்விவரங்கள் உள்ளூர் மக்கள்தொகை அலுவலரால் சரிபார்க்கப்பட்டு மக்கள்தொகைப்பதிவேடு தயாரிக்கப்படும் .அதன் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி செய்யப்படும் என சொல்லப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து உச்ச நிதீமன்றத்தில் நூறுக்கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 22 ல் அவற்றை விசாரணைக்கு எடுத்துகொண்ட உச்ச நீதிமன்றம்   , மார்ச் 18 க்குள் அவை குறித்த  பதில் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு  மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது . இந்நிலையில் மார்ச் 17 செவ்வாய் அன்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் பிரமாணப் பத்திரம் ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்  செய்துள்ளது.

அந்த பிரமாணப் பத்திரத்தில் , குடிமக்கள் அல்லாதோரிடமிருந்து இந்திய குடிமக்களை   பிரித்தறியவும் , சட்டதிற்கு புறம்பாக நாட்டிற்குள் வந்திருப்பவர்களை கண்டறிந்து அவர்களை சட்டபடி வெளியேற்றவும் தேசசியகுடிமக்கள்பதிவேடு அவசியமாகிறது . அவ்வறு குடிமக்களை குடிமக்கள் அல்லதோரிடமிருந்து இனங்காண  அத்தியாவசியத் தேவையாக இருக்கிற தேசிய குடிமக்கள் பதிவேட்டின் தயாரிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்போடு இணைந்தோ அல்லது தனியாகவோ செயல்படுத்தப்படும்

சட்டவிரோதமாக குடியேறியவர்களை இனங்காணுதல் என்பது ஒரு அரசின் இறையாண்மை ,சட்டம் மற்றும் அற அடிப்படையிலான கடமையாகும்.. அப்படி சட்டவிரோதமாக உள்ளே வந்திருப்பவர்களை இனங்கண்டு அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் பணிகளை தொடங்குவதும் மத்திய அரசின் பொறுப்பாகும் .
1946 ல் போடப்பட்ட வெளிநாட்டினர் சட்டம்  அவர்களை வெளியேற்றும் முழு அதிகாரத்தையும் மத்திய அரசுக்கு தந்திருக்கிறது.   சட்ட விரோதமாக குடியேறிய எந்தவொரு நபரும் இந்தியாவில் தொடர்ந்து வசிக்கவோ அல்லது குடியுரிமை கோரவோ முடியாது . அரசியல் சாசனத்தின் 21 ஆவது பிரிவு குடியுரிமைக்கான பரந்துபட்ட வாய்ப்புகளை அளித்திருந்தாலும் அது சட்டவிரோதமாக குடியேறியவர்களை உள்ளடக்கவில்லை.வலுவான ஆதாரங்களின் அடிபடையிலேயே ஒருவர் தனது குடியுரிமையை கோர இயலும் . 

ஒருவர் தனது குடியுரிமையை நிறுவ தனது பிறந்த தேதி /பிறந்த இடம்/தாய் தந்தையரின் பிறந்த இடம், அவர்தம் குடியுரிமை / தேவைபடும் நேர்வுகளில் தாத்தா பாட்டியின் பிறந்த இடம்/  ஆகிய ஆதாரங்களை குடியுரிமை சட்ட விதி 6A (1) (d) ன் படி வழங்கவேண்டும்`.. வழங்கப்பட்ட ஆதரங்களை சரிபார்த்து மாநில அளவிலான மக்கள் தொகை அதிகாரிகள் அதனை இறுதி செய்வார்கள். மாநில அலுவலர்களால் ஏற்றுகொள்ளப்படாத சந்தேகத்திற்குரிய தனிநபர் விபரங்கள் முதற்கட்ட  சான்றுகளாக பரிசீலிக்கப்படும் சாத்தியமிழக்கக் கூடும்.

மேற்கண்ட விவரங்கள் உள்ளிட்ட தனது 129 பக்க பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மேலும் அதில் , குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது முழுவதும் சட்டப்பூர்வமானது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது, இது நாடாளுமன்றத்தின் இறையாண்மைக்குத் தொடர்பான விசயம்.. இது குறித்து நீதிமன்றத்தின் முன்பு கேள்வி கேட்க முடியாது . குடியுரிமை குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது . இச்சட்டம் தற்போது உள்ள எந்த உரிமைகளையும் பறிக்காது  இது மக்களின் சட்டபூர்வ ஜனநாயக மதச்சார்பற்ற உரிமைகளை பாதிக்காது .இந்த சட்டம் எந்த இந்தியர்களுடனும் தொடர்பு கொண்டதல்ல. என்றும் கூறப்பட்டுள்ளது.

மத அடிப்படையிலான சட்டத்திருத்தம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என நீதி மன்றத்திலேயே பிராமண பத்திரம் தாக்கல் செய்யும் துணிவு மோடி அரசுக்கே உள்ள சிறப்பு. . 2003 ல் திருத்தப்பட்ட சட்டத்தில் மக்கள் தொகைப்பதிவேடு தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைதான் தொடர்பு படுத்தப்பட்டதே தவிர மத அடிப்படை ஏதும் பேசப்படவில்லை.


ஆக தற்போது மக்கள் தொகைப் பதிவேட்டுடன் இணைந்த குடிமக்கள் பதிவேட்டினைத் தயாரிப்பதுதான் அரசின் பிரதான நோக்கம் எனில் அதற்கு 2003 திருத்தச்சட்டமே போதும்.   .ஆனால் இவ்வளவு முனைப்புடன் குடியுரிமை திருத்த சட்டத்தை  நிறைவேற்றியதன் உள்நோக்கம் மத அடிப்படையிலான பிரிவினைவாதத்தைப் பேணி ஒரு ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதுதான் .
2014 டிசம்பருக்கு முன்பு ஆப்கானிஸ்தான் ,பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இந்து ,சீக்கியர் ,பார்சி, புத்தம் ,சமணம் மற்றும் கிருத்துவ மதத்தினர் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்பதுதான் புதிய சட்டத் திருத்தம் . இதில் இஸ்லாம் மதத்தினர் சேர்க்கப்படாததும் ஏனைய இலங்கை மியான்மர் உள்ளிட்ட நாடுகள் சேர்க்கப்படாததும் வன்மத்தின் கோரமுகத்தையே காட்டுகின்றன.


2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆண்டு என்பதால் அதை சாதகமாக்கி வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புதான் என ஏப்ரல் 1 தொடங்கும் கணக்கெடுப்பை அரசு காட்டிக்கொள்ள விரும்புகிறது.

ஆக மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரித்து அதன் அடிப்படையில் குடியுரிமைக்கு தகுதி இல்லாதோரை கண்டறிந்து வெளியேற்றும் செயலுக்கு முன்னதாக சட்டவிரோத குடியேறி யார் என்று வரையறுத்து கொள்ளவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் .
     2014 டிசம்பருக்கு  முன்பு சட்டவிரோதமாக குடியேறிவர்களில் யார் குடியேறியது சட்டவிரோதம் அல்ல என்று முடிவு செய்வதற்கு மதத்தை எடுத்திருப்பது மதவாத சக்தியான பா ஜ க என்கிற ஆர் எஸ் எஸ் சின் 75 வருட கால கனவு செயல்திட்டம். அந்தக் கனவுகள் செயல்படுத்தப்படுகின்றன.








Tuesday 28 January 2020

அவளும் அந்த ஏழு நாட்களும்


                                                  மௌனச்சிறுகதை


இது மௌனச்சிறுகதை . பேச்சு, வர்ணனை, விவரிப்பு,உவமம், எண்ணஓட்டம் போன்ற கதைசொல்லும் உபகரணங்கள் ஏதுமின்றி புறக்காட்சிகளால் மட்டுமே அடுக்கப்பட்டு இயங்கிச்செல்லும் கதை இது.

இந்தக் கதையின் வரிகளை வழக்கம் போல்
வாசிக்காமல் ஒவ்வொரு வார்த்தையையும் வரியையும் வாசித்தபின் நிறுத்தி அவற்றை அகக்காட்சிகளாய் உணர்ந்து பின் அடுத்த வார்த்தைக்குச் செல்லுங்கள்.

இவ்வகையில் இக்கதை ஒரு கூட்டுப்படைப்பாளியாய் இயங்கிட வாசகரைக் கோருகிறது.

  ******      ******

பஸ் வந்து நிற்கிறது. அவன் ஏறுகிறான் .பஸ் நகர்கிறது பஸ் ஓடி நிற்கிறது.அவள் ஏறுகிறாள் .ஏறியதும் அவன் பக்கம் பார்க்கிறாள்.அவனும் பார்க்கிறான். பேருந்து நிலையத்தில் பஸ் நிற்கிறது. இறங்குகிறார்கள். வெவ்வேறு பக்கம் நடக்கிறார்கள்.



காலை செய்தித்தாளின் தலைப்பில் ‘முதல்வர் பதவியேற்பு’.பஸ்ஸில் ஏறூகிறாள். அவன் பார்க்கிறான்.அவள் வேறுபக்கம் பார்க்கிறாள். அவன் திரும்புகிறான். பார்க்கிறாள். அவள் முகத்தில் புன்னகை.

                                ******      ******

     மழை.  குடைகளை பிடித்தபடி ஆட்கள். சாலையில் வெள்ளம். மழை. தூறல்.
மழை. புது வருட காலண்டர் மாட்டப்படுகிறது. பள்ளியின் தகவல் பலகையில் கோடை விடுமுறை . டீவி யில் சுதந்திரக்கொடி ஏறுகிறது.பேக்கரியில் கூட்டம்.  கிறிஸ்துமஸ் கேக்குகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. 
 பழைய காலண்டர் அகற்றப்படுகிறது. மீண்டும் புதுக்காலண்டர்.

******      ******

பஸ்ஸின் உட்பக்கம்.   அவன் அருகே  நிற்கிறாள். அவளது பேக் அவன்  மடியில்  . பேக்கைத் திறக்கிறான். உள்ளே சாக்லேட்டுகள். எடுக்கிறான் .அவளைப் பார்க்கிறான்.அவள் சிரிக்கிறாள்.சாக்லேட்டை வாயில் வைக்கிறான்.   

******      **

******      ******

     காலண்டரின் தேதித்தாட்கள் கொஞ்சமாய் இருக்கின்றன.

      போர்டில் ‘வருவாய்த்துறை’ என்று போட்டிருக்கிற உள்ளே  ஒரு மேசையில் அவன் எழுதிக்கொண்டிருக்கிறான்.

     வங்கியின் உட்புறம். கடிகாரத்தில் ஐந்தரைமணி. வாசற்படிகளில்  அவள் வெளியே வருகிறாள்.;;; பேருந்து நிலையத்தில் அவள் நின்று கொண்டிருக்கிறாள். அவன் அருகே வருகிறான்.
.  ஓட்டலின் கண்ணாடிக்கதவு திறக்கிறது.இருவரும் உள்ளே போகிறார்கள்.

                      ******      ******
காலை செய்தித்தாளின் தலைப்பில் ‘முதல்வரின் ஐந்து வருட சாதனை விழா’..
பஸ்ஸில்  அவனைப் பார்க்கிறாள்  .மலர்ச்சியாய் அவள் முகம்.  அவனருகில் காலியாயிருக்கும் இருக்கையில் போய் அமர்கிறாள்.

     ஓட்டல் கார்டன்.  எதிர் எதிரே அமர்ந்திருக்கிறார்கள.; சிரிப்புடன் சிரிப்புடன் சிரிப்புடன் ஒருவரை ஒருவர்  பார்க்கிறார்கள். தட்டுகளில் இனிப்புகள் . அவள்  அல்வாவை ஸ்பூனில் எடுத்து வாயில் வைக்கிறாள்.
 
     அவனும் ஸ்பூனில் எடுத்துக் குனிந்து வாயில் வைக்கிறான். சுவைத்தவாறே நிமிர்கிறான். சற்றே முந்தானை விலகியிருக்கும் அவளின் வலதுபக்கம் ..குனிந்து தட்டைப் பார்க்கிறான் . அவள் கண்களில் படபடப்பு.  இயல்பாய் முந்தானைத் தலைப்பை சரிசெய்துகொள்கிறாள்.

     திரும்பி வேறுபக்கம் பார்க்கிறாள். எழுந்து சென்று (கொஞ்சம் வேகமாய்)
கையலம்புகிறாள்.  எழுந்தவாறே  பார்க்கிறான். அவளின் தட்டில் பாதி ஸ்வீட் இருக்கிறது.


                       


                                                     ******      ******

    அம்மா சாப்பாட்டைப் பார்க்கிறாள். தட்டில் சாப்பாடு அப்படியே இருக்கிறது.எதிரே அவன் உட்கார்ந்திருக்கிறான். அம்மா அவன் அருகே வந்து தொடுகிறாள். எழுந்து தன் அறைக்குள் போகிறான்.அவனையே பார்த்தவாறு  சாப்பாட்டைமூடுகிறாள் . கூடத்து விளக்குகளை அணைக்கிறாள்  . படுக்கையில் குப்புறவிழுகிறான். முகம் தலையணைக்குள் புதைந்திருக்கிறது.  உடல் குலுங்குகிறது.
  
கடிகாரத்தில் ஒரு மணி. படுக்கையில் புரண்டவாறு இருக்கிறான். எழுந்து  உட்காருகிறான். கண்கள் கலங்கிப்போய்  வீக்கத்துடன் இருக்கின்றன.

                                   ******      ******

  காலண்டரில் வியாழன். .பஸ்ஸில் இருக்கிறான்.அவள் ஏறும் நிறுத்தம். ஆட்கள் ஏறுகிறார்கள் கழுத்தை வளைத்து ஏறுபவர்களையே பார்க்கிறான்.அவள் இல்லை.

  வெள்ளி. அவள் இல்லை.                                   

   வீட்டில் தன்அறையில் ஷேவ் செய்யாத முகத்துடன் உட்கார்ந்திருக்கிறான். மேசையில் தட்டில் தோசை இருக்கிறது.காபி ஏடு படிந்து இருக்கிறது. காலண்டரில் சிவப்பில் ஞாயிறு.
 
    பள்ளிப்பிள்ளைகள் பஸ்ஸில் ஏறுகிறார்கள். அவள் இல்லை. அலுவலகத்துக்குள் செல்கிறான். தொலைபேசியில் எண்களை சுழற்றுகிறான்.சுழற்றுகிறான் . வைக்கிறான்.கண்களை மூடித் திறக்கிறான்

   காலண்டரில் செவ்வாய்.

   அவள் பஸ்ஸில் இல்லை .அவன் அலுவலகத்துக்குள் நிற்கிறான் விடுமுறை விண்ணப்பம் என போடப்பட்டிருக்கும் தாளை எடுக்கிறான்.பேனா இரண்டு நாட்கள் என எழுதுகிறது. வெளியில் வருகிறான். பஸ்ஸில் ஏறி வீட்டுக்குள் செல்கிறான்.

                        ******      ******


     ‘ஆடிட் அர்ஜென்ட்’ என்று எழுதப்பட்டிருந்த பத்து பனிரெண்டு ஃபைல்களுக்குப் பின்னால் மறைந்து போய் ;கையை உதறிக்கொண்டு உதறிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறாள் அவள்.

     ஃபைலை மூடிவிட்டு எழுந்து  தொலைபேசியைச் சுழற்றுகிறாள்.

      காதிலேயே வைத்துக்கொண்டிருக்கிறாள்.மீண்டும் சுழற்றுகிறாள். பேசாமல் தலையை மட்டும் அசைத்தபடி வைக்கிறாள் .நெற்றியை துடைத்துக்கொண்டு; ஸீட்டில் வந்து உட்கார்கிறாள்.

      வெள்ளைத் தாளெடுத்து  எழுதுகிறாள்.உறைக்குள் வைத்து முகவரி எழுதுகிறாள்.  பியூனிடம் கொடுக்கிறாள்.

                           ******      ******

      புதன். பஸ்ஸில் அவன் நின்று கொண்டிருக்கிறான்.பஸ் போகும் திசையில் சாலையையே பார்த்தபடி.  அவளின் நிறுத்தம் தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது.

      நெருங்குகிறது. வருகிறது. பஸ் நிற்கிறது.ஆட்கள் ஏறுகிறார்கள.அவள் இல்லை
அவன் அங்கேயே இறங்குகிறான்.; அவள் நிற்கும் தரையையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.

              ******      ******

      வீட்டில் தன் அறையில் உட்கார்ந்;திருக்கிறான். மேசையில் கிடக்கும் வார இதழைப் ;புரட்டுகிறான்.

       முந்தானை விலகிக் கிடக்க மோகமாய்ப் பார்க்கும்  நடிகையின் படம். ஒருஆணை கோபமாய் முறைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் படம். வாரஇதழை வீசி அடிக்கிறான். தலையைப் பிடித்துக்கொள்கிறான். விளக்கை அணைக்கிறான். மேசை விளக்கு மட்டும் ஒளிர்கிறது. தாள் எடுக்கிறான். பேனா எழுதுகிறது.

        ‘தாரிணி அன்று ஓட்டலில் சாப்பிடும்போது நான்…..’

காலை செய்தித்தாள் வந்து விழுகிறது. ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம்.

         அம்மா அறைக்குள் வருகிறாள். மேசையில் கண்ணாடிக் குவளையில் பாதிப்பால். மஞ்சள் நிறத்தில்.

          குனிந்து ,மேசையில் நெற்றியைப்பதித்து , நாற்காலியில் உட்கார்ந்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறான்.

          அம்மா  முதுகில் கைவைத்து உலுக்குகிறாள். அவன் கழுத்து சடக்கென தொங்கிச்சாய்கிறது. உதடுகளில் எறும்புகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன
          ஐந்தாறு எறும்புகள் வாயில் ஊர்ந்து கொண்டிருக்கின்றன.

        ******      ******

          அவள் மேசையில் ஒரு கடிதம் வைக்கப்படுகிறது. அதில் அவனது முகவரி. பக்கத்தில் ‘திருப்பப்படுகிறது’ என சிவப்பு மையில் எழுதப்பட்டிருக்கிறது.

 வீங்கியிருக்கும் அவளது கண்கள்  கலங்கியிருக்கின்றன.கடிதத்தைப்  பிரிக்கிறாள்.
 ‘என் உயிர் பாபு.
           ஸாரிப்பா… பேங்கில் ஆடிட். எட்டேகால் பஸ்ஸிலேயே  வந்துவிடுகிறேன்.வேலை கை ஒடிகிறது.
   உனக்கு மூன்று தடவை போன் பண்ணினேன் தெரியுமா..நீ இல்லையே…சாயங்காலத்தில் பஸ்ஸ்டாண்டுக்குக்கூட வரவில்லையே... என்ன ஆயிற்று உனக்கு.
நாளை ஆடிட் முடிகிறது. நாளை பஸ் ஸ்டாண்டில் என்னைப்பார்… ப்ளீஸ்.
டேய் படவா… உன்னைப் பார்க்காமல்  உயிரே போய்விடும்போல் இருக்கிறதடா ….ஏமாத்திடாதே’
                             --------------------------------------------------------------------------                 

குறிப்பு: 1992ல் நான் எழுதிய இக்கதை என்னிடமே இருந்து- பின் அனுப்பப்பட்டு 9.4.1995 ஆனந்தவிகடன் இதழின் இணைப்பு விகடனில் ‘தமிழ்ச் சிறுகதைகளில் ஒரு புதிய பங்களிப்பு’ என்ற குறிப்போடும் கதையின் அமைப்பு குறித்த விளக்கத்தோடும் என்புகைப்படத்தோடும் பிரசுரமானது.
                                           -ராசி.பன்னீர்செல்வன்





குடியரசு தின சிறப்புக் கருத்தரங்கம்


வேதக்கவியும் எழுதாக்கிளவியும்

வேதங்களின்உள்ளடக்கம்-
அறநெறிப்பண்பு கொண்டவையா 

என்ற தலைப்பில் டாக்டர் அம்பேத்கர் எழுதிய கட்டுரைகளை மருத்துவர் நா. ஜெயராமன் தொகுத்துள்ளார்.


அந்நூலுக்கு நான் எழுதியுள்ள அணிந்துரை.
-------------------------------------------------------------------------------------------


2019  மார்ச் ஏப்ரல் மாதங்களில் தமிழகமெங்கும் கடும் வறட்சி நிலவியது அச்சூழலில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பணீந்திரரெட்டி அத்துறையின் அனைத்து மண்டல இணை ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் 

“வரும் 2019-2020 ஆம் ஆண்டு விகாரி வருடத்தில் நல்ல பருவமழை பெய்து நாடுசெழிக்க இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள முக்கிய கோயில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கீழ்கண்ட நிகழ்ச்சிகளை தத்தம் பிரிவில் உள்ள கோயில்களில் அந்தந்தக் கோயில்களின் பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு நடத்திட அனைத்து செயல் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பர்ஜன்ய சாந்தி வருண ஜெபம், வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல், அருள்மிகு நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்துவரை நீர்நிரப்பி வழிபாடு செய்தல்,  சிவபெருமானுக்கு சீதளகும்பம் எனப்படும் தாரா பாத்திர நீர்;விட்டு அபிஷேகம் செய்தல், சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தல், மகா விஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல்…….

மேற்கண்டவாறு அந்தந்தக் கோயில்களின் பழக்கவழக்கத்திற்கு உட்பட்டு சிறப்பாக நடத்திட, இந்த நிகழ்வு தொடர்பான கற்றறிந்தவர்களை தேர்வுசெய்து மழைவேண்டி யாகம் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோயில் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.”

இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்ட அவ்வாணையின் அடிப்படையில் பெரும்பாலான கோயில்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு நகரமெங்கும் பதாகைகள் கட்டி விளம்பரப்படுத்தப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக வளைவுகள் தோரணங்கள் அமைக்கப்பட்டு அப்பகுதி சார்ந்த அமைச்சர்கள் முன்னிலையில் மழைவேண்டி யாகங்கள் நடைபெற்றன புரோகிதர்கள் பெரியபெரிய பித்தளை அண்டாக்களில் கழுத்தளவு நீரில் அமர்ந்து செய்த யாகங்களையும் வேள்விக் குண்ட யாகங்களையும் குறித்து செய்தித்தாள்கள் விரிவான செய்திகளை வெளியிட்டு மகிழ்ந்தன.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிற்கும் சற்றும் குறையாத அளவில் இந்தியா வளர்ந்திருக்கும் காலத்தில், முழுவதும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட சந்திரயான் போன்ற செயற்கைக்கோள்கள் ஏவப்படுகிற காலத்தில் மழைக்கு புரோகிதர்களை வைத்து யாகம் வளர்ப்பதை புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் 3500 ஆண்டுகளுக்கு முன்னால் செல்ல வேண்டும். 

வேள்விகளையும் சடங்குகளையும் இம்மண்ணுக்கு அறிமுகப்படுத்தியவை வேதங்கள். இந்தியாவிற்கு வெளியிலிருந்து இங்குவந்த ஆரியர் கொண்டுவந்த பண்டைக்கவிகளின் பாடல்களின் தொகுப்பே வேதங்கள்.

வேதங்கள் ரிக், யஜீர், சாம, அதர்வணம் என நான்கு. ஒவ்வொரு வேதத்திலும் மூன்று பகுதிகள். அவை சம்ஹிதை பிராமணம், ஆரண்யகம்.

சம்ஹிதை வழிபாட்டுப் பாடல்களையும், பிராமணம் வேள்விச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும், ஆரண்யகம் வனப்பாடல்களையும் உள்ளடக்கியவை.

இதில் ஆரண்யகங்களில்தான் உபநிடதங்கள் எனப்படும் தத்துவ விசாரணைகள் உள்ளன இவை வேதங்களின் இநுதிப்பகுதியாக இருப்பதால் வேதாந்தம் என்றும் கூறப்படுகிறது.

சம்ஹிதைகள் காலத்தால் முந்தியவை. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தனது இந்திய தத்துவம் நூலில் சம்ஹிதைகள் 3500 ஆண்டுகளுக்கு முந்தியவை என்கிறார். உபநிடதங்கள் காலத்தால் பிந்தியவை

“வேத நாகரிகம் வைதிகச் சடங்குகளாலான ஒன்று. வேள்விகளில் சோமரசத்தை அளிப்பதே வேதஆரியரின் சமயவாழ்வின் முக்கியச் சிறப்புப் பகுதி. ஆழ்ந்து சிந்திக்கும் கருத்துக்கள் வளராதவாறு சடங்குச் செயல்கள் மிகுதியாக இருந்தன”. 

இந்த மேற்கோள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை பதிப்பாசிரியராகக் கொண்டு இந்திய அரசு வெளியிட்டுள்ள “ கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருளியில்வரலாறு” எனும் பெருநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வைதிகர்களும் இந்துத்துவாவாதிகளும் போற்றுகிற வேதங்களின் மூலப் பாடல்கள் அதாவது சம்ஹிதை – பிராமணம் எனப்பட்ட முற்பகுதிகளின் தன்மை இவ்வளவே. அந்த சடங்குமயமான வேதமரபில் தத்துவ விசாரணைக்கு போதிய வெளி இல்லை. தீயின் புகையும், பலியிடப்பட்ட ஆடு மாடுகளின் ஓலமும், சோமபானப் போதையுமே அடைத்துக் கொண்டிருந்தன. 

மிகவும் பிந்திய காலத்தில் எழுந்த உபநிடதங்களிலேயே விவாதிக்கத்தக்க தத்துவச் சிந்தனைகள் வெளிப்பட்டன.

                                000 000 000

வேத வேள்விமரபு தமிழ்ச் சமுதாயத்திற்குள் நுழைந்ததை சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி என்றும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்றும் மன்னர்கள் தங்களுக்கு சூடிக்கொண்ட பெயர்களே அதற்குச் சான்று.

தஞ்சை மாவட்டத்தின் பூஞ்சாற்றூரை ஆண்ட கௌணிய விண்ணந்தாயன் என்ற மன்னனைப் பற்றி ஆவூர் மூலங்கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் இவ்வாறு செல்கிறது.

"நீர்நாண நெய் வழங்கியும் , எண் நாணப் பல வேட்டும் , மண்நாணப் புகழ் பரப்பியும்…"

வேள்விநெய் கண்டு நீர் வெட்கப்பட்டதாம். வேள்விகளின் எண்ணிக்கையில் எண்ணே வெட்கப்பட்டதாம்

விண்ணந்தாயனின் புகழ்கண்டு பூமியே வெட்கப்பட்டதாம். வேள்வி மரபு எந்த அளவுக்கு ஊடுருவி நின்றது என்பதும் புரிகிறது.

வேள்விக்காகவே பிராமணர்களுக்கு அரசர்கள் தானம் வழங்கினர். இன்றும் சதுர்வேதி மங்கலங்களும், உத்தமதான புரங்களும், பிரமதேயங்களும் சான்றாக இருக்கின்றன.

வேள்வியின் மூலமே தங்களுக்கு கிடைத்ததெல்லாம் கிடைத்தது என நம்பவைக்கப்பட்டது. வேள்வியே அகவாழ்வின் மையப் பொருளானது. அதற்கான சடங்குகளைக் கூறும் வேதங்கள் புனித மானவையாக கொள்ளப்பட்டன. அவை மதமாக தத்துவமாக முன்மொழியப்பட்டன.
                            
                              000 000 000


சங்க இலக்கியங்களில் பத்துபாட்டு எட்டுத்தொகை நூல்களில்  பல பாடல்கள் வேதங்கள் குறித்து பேசுகின்றன “எழுதாக் கிளவி, எழுதாக் கற்பு” ஆகிய மிக நுட்பமான சொற்களால் வேதங்களின் மீது விமர்சனங்களை வைக்கின்றன .

மேற்கண்ட சொற்கள், வேதங்கள் அவற்றின் தொடக்க காலத்திலிருந்து எழுதப்படாத வாய்மொழிப் பாடல்களாகவே இருந்து வந்திருக்கின்றன எனபதை நமக்கு உணர்த்தும் முக்கியச் சான்றுகள்.

நீண்ட காலத்திற்கு வேதங்கள் எழுதப்படாமலே வாய்மொழியாக ஒதப்பட்டு வந்து மிகப் பிந்திய காலத்திலேயே எழுத்துருவாக்கம் பெற்றிருக்கலாம்.

கீழ்கண்;டவற்றை அதனை உறுதிசெய்யும் சான்றுகளாகக் கொள்ளலாம். எட்டாம் நூற்றாண்டின் இறுதியில்தான் கற்பூரம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் கற்பூரத் தீபாராதனை குறித்து அதர்வண வேதத்தில் உள்ளது

வேத மறுப்பாளரான புத்தரைப்பற்றிய செய்திகள் அவர் பிறப்பதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னாலேயே உள்ள யசூர்  வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து நமக்குப்புரிவது இதுதான். எழுதாமல் வாய்மொழியாகவே வைத்துக்கொண்டு இந்தியா முழுமைக்கும் வெளிப்பட்டு வளர்ந்து வந்த மற்ற தத்துவ மரபுகளை உள்வாங்கி செரித்து தனதாக்கிக் கொண்டு பின்னர் எழுத்து வடிவம் அளிக்கப்பட்டிருக்கலாம்.

காலத்தால் முந்திய சம்ஹிதை பிராமணம் ஆகிய வேதங்களின் முற்பகுதிகள் வேள்விகளையும் சடங்கு சம்பிரதாய மந்திரங்களையும் மட்டுமே பேசுகின்றன. பிந்திய கால உபநிடதங்கள் பேசும் தத்துவ விசாரணைகளில் மற்ற மரபு சார்ந்த கலப்பிருக்கலாம். ரிக் வேதத்தில் உள்ள அறிவுப் பூர்வமான தத்துவப்பாடல்களுக்கு கீழ் அடிக்குறிப்பாக ‘திராவிட ரிக்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதைத் தென்னாட்டின் பங்களிப்புக் கலப்பாக கருத இடமுண்டு.

                            000 000 000

பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தனது ஆய்வு நூலான “இந்துமதப் புதிர்கள்” என்னும் நூலில் வேதங்கள் குறித்த தனது ஆய்வுகளை ஆழமாகவும் விரிவாகவும் எழுதியுள்ளார்.


வேதங்கள் சனாதனமானவை, அதாவது என்றென்றும் இருந்து வருபவை, பொய்யாதவை, கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை, ஆகவே மிகுந்த புனிதத்தன்மை வாய்ந்தவை. இவ்வாறுதான் அவை கட்டமைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் பிரம்மாவின் நினைவில் பாதுகாக்கப்பட்டு ஒரு கல்ப காலத்திலிருந்து அடுத்த கல்ப காலத்திற்கு அவை கடத்தப்படுவதாகச் சொல்லப்படுவது ஒன்று. ஒரு கல்பகாலம் என்பது பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும் (சிருஷ்டி) அழிவிற்கும் (பிரளயம்) இடைபட்ட காலம். இவ்வாறு சொல்லப்படுவதற்கு காரணம் வேதங்கள் பிரபஞ்சம் தோன்றியபோது கடவுளால் அருளப்பட்டவை என்றும் அவை மனித முயற்சிக்கு அப்பாற்பட்டவை எனவும் நிறுவத்தான்.
இவ்வாறு கூறப்படும் “வேதங்களின் புனிதத் தன்மை ஏற்கப்படவேண்டுமானால் அவை அறநெறிப் பண்புகளைக் கொண்டவையாக இருக்கவேண்டும். மனித மாண்புகளை சிறிதளவேனும் உயர்த்தக் கூடிய அறநெறிகள் இல்லாத ஒன்றினை புனிதமாகக் கொள்வது ஒரு புதிர்தான்” என விளக்குகிறார் டாக்டர் அம்பேத்கர்.

ஆய்வாளர் மூயிர் இவ்வாறு கூறுகிறார் “வேதங்கள் அவற்றைப் பாடிய பண்டைக்கால கவிகளின் சொந்த நம்பிக்கைகள், உணர்வுகள் ஆகியவற்றின் வெளிப்பாடேயன்றி வேறில்லை. தாங்கள் வணங்கும் கடவுள்களின் புகழைப் பாடி நிவேதனங்களை அளித்து, எல்லோரும் விரும்புகிற ஆசிகளை, உடல்நலம், செல்வம், நீண்ட ஆயுள், கால் நடைகள், குழந்தைகள், எதிரிகள் மேல் வெற்றி, பாவமன்னிப்பு, சொர்க்கபோகம் ஆகியவற்றை அருளும்படி அவர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்” ஆக வேதங்களின் உள்ளடக்கங்களின் தன்மை இதுதான்.

அம்பேத்கர் தனது நுட்பமான ஆய்வுகளின் மூலம் வேதங்களில் உள்ளவற்றின் தன்மைகளை பலவகையான சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.

ரிக் வேதம் முழுக்க விரவிக்கிடக்கும் பிரார்த்தனைப் பாடல்களை வாயு, அக்னி, இந்திரன், மித்ரன், ஆதித்தியன் ஆகியோரை வேண்டிப் பாடும் பாடல்களை பட்டியலிட்டு அவற்றின் பொருளோடு எடுத்துரைத்துள்ளார். அதர்வண வேதத்தில் உள்ள 250 க்கும் மேலான, அடுத்தவரை வசியம் செய்யும் மந்திரங்களை பட்டியலிட்டு காட்டியுள்ளார்.
ஆக, அன்றாட வாழ்வியல் தேவைகளுக்காக இறைவனை இறைஞ்சிப் பாடும் பண்டைக்கவிகளின் பாடல்களாகவே வேதங்கள் பார்க்கப்படுகின்றன.

“இந்துமதப் புதிர்கள்” நூலில் அவர் ஆய்ந்து வெளிப்படுத்தும் முடிவுகள் அறிவுலகத்தால் வியந்து ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இதுவரை யாரும் மறுத்துரைத்து எழுத முடியாத தன்மையுடையவை.
அந்த ஒப்பற்ற நூலிலிருந்து வேதங்களின் அறநெறிப் பண்பு குறித்த கட்டுரைகள், இந்துக் கடவுளர்களை அவர்கள் ஏன் சண்டையிட வைத்தார்கள் என்பதான கட்டுரைகள், நான்கு வருணங்கள் நான்கு ஆசிரமங்கள் குறித்த கட்டுரைகள், வேதங்களின் புதிர்கள் குறித்த கட்டுரைகள் ஆகியன இந்நூலில் அப்படியே தொகுத்து தரப்பட்டுள்ளன.

அபெகா வெளியீட்டு வரிசையில் வரும் இந்நூல் வாசிப்பவரின் சிந்தனையின் கதவுகளைத் திறந்து வெளிச்சம் பாய்ச்ச வல்லவை.


       ராசி. பன்னீர்செல்வன்.
       புதுக்கோட்டை




Sunday 1 September 2019

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் நான்காவது “இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்” வருக! வருக!!



கணினித் தமிழ்ச் சங்கம்புதுக்கோட்டை
இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் - 4 


இடம் – ஜெஜெ.கல்லூரி சிவபுரம், (மதுரைச்சாலை) புதுக்கோட்டை
நாள்- அக்டோபர்-12,13 சனி,ஞாயிறு காலை 9மணி – மாலை 5மணி
(அழைப்பிதழ் விரைவில், இது ஒரு முன்தெரிவிப்பே)

 பங்கேற்பாளர்கள் இணைய இணைப்புடன் கூடிய செல்பேசி / மடிக்கணினிகொண்டுவருதல் நல்லது. 
மற்றவர்க்கு செய்துதர முயற்சி செய்வோம்
இரண்டுநாள் மதியஉணவு, கையேடு, தேநீர்ச் செலவுக்காக 
ரூ.200 (மாணவர்க்கு ரூ.100) நன்கொடை வரவேற்கப்படுகிறது.

பங்கேற்பாளர் விவரம் தந்து முன்பதிவு செய்தல் அவசியம்

தலைமை
முனைவர் நா.அருள் முருகன் அவர்கள்
கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர்
(இணைஇயக்குநர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை)

தொடக்கவுரை
முனைவர் .இராசேந்திரன் அவர்கள்
ஆசிரியர் - கணையாழி – இலக்கிய இதழ்
(மேனாள் துணை வேந்தர் –தமிழ்ப்பல்கலைக் கழகம்) 

முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர்
திருமிகு நா.சுப்பிரமணியன் அவர்கள்,
செயலர் ஜெ.ஜெ.கல்விக் குழுமம், புதுக்கோட்டை
முனைவர் ஜ.பரசுராமன் அவர்கள் 
      முதல்வர்ஜெ.ஜெ.கலைஅறிவியல் கல்லூரி       
முனைவர் கு.தயாநிதி அவர்கள்
       தமிழ்த்துறைத் தலைவர்

---------- பயிற்சியளிக்கும் கணித்தமிழ் வல்லுநர்கள் --------
முனைவர் மு.பழனியப்பன் காரைக்குடி,  திண்டுக்கல் தனபாலன்சிவ.தினகரன் காஞ்சி, தி.ந.முரளிதரன் சென்னை பிரின்சு என்னாரெசுப் பெரியார் சென்னை, நீச்சல்காரன்சென்னை, எஸ்.பி.செந்தில்குமார் மதுரை,  முனைவர் பா.ஜம்புலிங்கம் தஞ்சாவூர்,கரந்தை ஜெயக்குமார், மற்றும் 
புதுக்கோட்டை நண்பர்கள் - 
யு.கே.கார்த்திகஸ்தூரிரெங்கன்எஸ்.இளங்கோ, புதுகை செல்வா,  த.ரேவதி,ஸ்ரீமலையப்பன்காயத்ரிஉதயகுமார், திவ்யபாரதி

-------------------ஒருங்கிணைப்பாளர்கள்-------------------
நா.முத்துநிலவன்ராசி.பன்னீர்செல்வன்மு.கீதா, இரா.ஜெயலட்சுமிகு.ம.திருப்பதி,எஸ்.டி.பஷீர்அலிமகா.சுந்தர்.மாலதி, கே.ஸ்டாலின் சரவணன்சு.மதியழகன்மைதிலி,தென்றல்பொன்.கருப்பையா மீரா.செல்வக்குமார், சோலச்சி. என்.கே.சூரியா
----------------------------------------------
ஒருங்கிணைப்பில் இணைந்து பணியாற்ற விரும்பும் புதுகை நண்பர்களோ, பயிற்சிமுகாமில் பயிற்சி தர விரும்பும் வல்லுநர்களோ விவரம்தெரிவித்தால் அவசியம் பயன்படுத்திக் கொள்வோம். 
வருக வருக!

பயிற்சிக் கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்காக உதவிசெய்ய, பங்களிக்க விரும்பி நன்கொடை தர விரும்புவோர் நமது ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா அவர்களை தொடர்பு கொண்டு நன்கொடை தந்தால் மிகவும் மகிழ்வோம். வழக்கம் போல முகாம் முடிந்து, வரவு செலவு விவரம் இங்குத்தரப்படும்

இணையத் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் விவரம்
(1)  கணினியில் தமிழ் எளிய அறிமுகம் –
(2)  இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் வாய்ப்பும் – உரை –
(3)  வலைத்தளங்களில் செய்யவேண்டியதும், செய்யக் கூடாததும்
(4)  தமிழில் வலைப்பக்கம் (Blog) உருவாக்கம் விரிவாக்கம் –
(5)  தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல்
(6)  தமிழில் புலனம் (whatsaap) செயல்பாட்டுப் பயிற்சி -
(7)  தமிழில் முகநூல் (FaceBook) செயல்பாட்டுப் பயிற்சி –
(8)  தமிழில் இன்ஸ்டாகிராம் செயல்பாட்டுப் பயிற்சி –
(9)  தமிழில் சுட்டுரை(Twitter)செயல்பாட்டுப் பயிற்சி –
(10)          ,இணைய (Online) வணிக வாய்ப்புகளும் ஏய்ப்புகளும் –
(11)          தட்டச்சு செய்யாமலே குரல்வழிப் பதிவேற்றுதல் -
(12)          மின்னூல் (E.Book) / இலவசப் பதிவிறக்கம் பற்றிய தகவல்கள் 
(13)          கிண்டில் (Kindle) படித்தல்பதிவிறக்கிச் சேமித்தல்
(14)          படைப்புகளை You-Tubeஇல் ஏற்றுதல் செயல்பாட்டுப் பயிற்சி-
(15)          மின்-சுவரொட்டி (Flex) தயாரித்தல்செயல்பாட்டுப் பயிற்சி -  
(16)          பார்க்க வேண்டிய குறும்படங்கள் (மாலை,இரவு) 

இவைபற்றிய கையேடுகள்  இலவசமாக வழங்கப்படும்
(இந்த முயற்சியை நமது வலைச்சித்தர்
திண்டுக்கல் தனபாலன் மேற்கொண்டு வருகிறார்.)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவு பார்த்து, புதுக்கோட்டையின் புகழ்வாய்ந்த ”எம்.எஸ்.ஸ்க்ரீன்ஸ்” ஆசிரியர் எம்.எஸ்.ரவி அவர்கள் தொடர்பு கொண்டு, “நான் ஃபோட்டோ ஷாப் வழியாக எப்படி போஸ்டர்கள் வடிவமைப்பது என்பது பற்றிச் சொல்கிறேன்” என்று சொன்னார். நமது அமைப்புகளில் எப்படியும் மாதம் 4,5கூட்டங்கள் நடக்கின்றன. அவற்றுக்கு அழைப்பிதழ், போஸ்டர்கள் வடிவமைக்க நாமே தெரிந்து கொண்டால் எவ்வளவு நல்லது என்று தோன்றியது! எனவே அவரது யோசனையைப் 
பயிற்சி முகாமில் செயல்படுத்தலாம் என்பதுஎன்கருத்து 
– நா.மு., 01-09-2019 இரவு 10.20

--------------------------------------------------------------------------------------------------------------

ஒரு வேண்டுகோள்...
இதைப் படிக்கும் நண்பர்கள். 
தமக்குத் தொடர்புள்ள சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து
இணையத்தமிழ் வளர்ச்சிக்கு
 உதவிடவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணையத்தால் இணைவோம்!
---------------------------------------
மேற்காணும் தலைப்புகளே அன்றி வேறு தலைப்புகளும் அவசியம் கற்பிக்கப்படவேண்டும் என்று கருதுவோர், அதுபற்றிய தகவல்களோடு, வணிகநோக்கிலன்றி வந்து கற்பிக்கத் தக்க வல்லுநர் விவரங்களையும் தந்துதவ அன்புடன் வேண்டுகிறேன், வணக்கம்.
----------------------------------------------------------
நமது முந்திய பயிற்சி முகாம்களைப் பற்றி அறிய -
--------------------------------- 
பயிற்சி முகாம் தொடர்பான மேல்விவரம் அறிய 

        மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com,
        செல்பேசி எண்கள்-
நா.முத்துநிலவன் 9443193293,    கவிஞர் மு.கீதா-9659247363 
---------------------------------------------