வேதங்களின்உள்ளடக்கம்-
அறநெறிப்பண்பு கொண்டவையா
என்ற தலைப்பில் டாக்டர் அம்பேத்கர் எழுதிய கட்டுரைகளை மருத்துவர் நா. ஜெயராமன் தொகுத்துள்ளார்.
அந்நூலுக்கு நான் எழுதியுள்ள அணிந்துரை.
-------------------------------------------------------------------------------------------
2019 மார்ச் ஏப்ரல் மாதங்களில் தமிழகமெங்கும் கடும் வறட்சி நிலவியது அச்சூழலில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பணீந்திரரெட்டி அத்துறையின் அனைத்து மண்டல இணை ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில்
“வரும் 2019-2020 ஆம் ஆண்டு விகாரி வருடத்தில் நல்ல பருவமழை பெய்து நாடுசெழிக்க இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள முக்கிய கோயில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கீழ்கண்ட நிகழ்ச்சிகளை தத்தம் பிரிவில் உள்ள கோயில்களில் அந்தந்தக் கோயில்களின் பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு நடத்திட அனைத்து செயல் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பர்ஜன்ய சாந்தி வருண ஜெபம், வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல், அருள்மிகு நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்துவரை நீர்நிரப்பி வழிபாடு செய்தல், சிவபெருமானுக்கு சீதளகும்பம் எனப்படும் தாரா பாத்திர நீர்;விட்டு அபிஷேகம் செய்தல், சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தல், மகா விஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல்…….
மேற்கண்டவாறு அந்தந்தக் கோயில்களின் பழக்கவழக்கத்திற்கு உட்பட்டு சிறப்பாக நடத்திட, இந்த நிகழ்வு தொடர்பான கற்றறிந்தவர்களை தேர்வுசெய்து மழைவேண்டி யாகம் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோயில் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.”
இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்ட அவ்வாணையின் அடிப்படையில் பெரும்பாலான கோயில்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு நகரமெங்கும் பதாகைகள் கட்டி விளம்பரப்படுத்தப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக வளைவுகள் தோரணங்கள் அமைக்கப்பட்டு அப்பகுதி சார்ந்த அமைச்சர்கள் முன்னிலையில் மழைவேண்டி யாகங்கள் நடைபெற்றன புரோகிதர்கள் பெரியபெரிய பித்தளை அண்டாக்களில் கழுத்தளவு நீரில் அமர்ந்து செய்த யாகங்களையும் வேள்விக் குண்ட யாகங்களையும் குறித்து செய்தித்தாள்கள் விரிவான செய்திகளை வெளியிட்டு மகிழ்ந்தன.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிற்கும் சற்றும் குறையாத அளவில் இந்தியா வளர்ந்திருக்கும் காலத்தில், முழுவதும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட சந்திரயான் போன்ற செயற்கைக்கோள்கள் ஏவப்படுகிற காலத்தில் மழைக்கு புரோகிதர்களை வைத்து யாகம் வளர்ப்பதை புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் 3500 ஆண்டுகளுக்கு முன்னால் செல்ல வேண்டும்.
வேள்விகளையும் சடங்குகளையும் இம்மண்ணுக்கு அறிமுகப்படுத்தியவை வேதங்கள். இந்தியாவிற்கு வெளியிலிருந்து இங்குவந்த ஆரியர் கொண்டுவந்த பண்டைக்கவிகளின் பாடல்களின் தொகுப்பே வேதங்கள்.
வேதங்கள் ரிக், யஜீர், சாம, அதர்வணம் என நான்கு. ஒவ்வொரு வேதத்திலும் மூன்று பகுதிகள். அவை சம்ஹிதை பிராமணம், ஆரண்யகம்.
சம்ஹிதை வழிபாட்டுப் பாடல்களையும், பிராமணம் வேள்விச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும், ஆரண்யகம் வனப்பாடல்களையும் உள்ளடக்கியவை.
இதில் ஆரண்யகங்களில்தான் உபநிடதங்கள் எனப்படும் தத்துவ விசாரணைகள் உள்ளன இவை வேதங்களின் இநுதிப்பகுதியாக இருப்பதால் வேதாந்தம் என்றும் கூறப்படுகிறது.
சம்ஹிதைகள் காலத்தால் முந்தியவை. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தனது இந்திய தத்துவம் நூலில் சம்ஹிதைகள் 3500 ஆண்டுகளுக்கு முந்தியவை என்கிறார். உபநிடதங்கள் காலத்தால் பிந்தியவை
“வேத நாகரிகம் வைதிகச் சடங்குகளாலான ஒன்று. வேள்விகளில் சோமரசத்தை அளிப்பதே வேதஆரியரின் சமயவாழ்வின் முக்கியச் சிறப்புப் பகுதி. ஆழ்ந்து சிந்திக்கும் கருத்துக்கள் வளராதவாறு சடங்குச் செயல்கள் மிகுதியாக இருந்தன”.
இந்த மேற்கோள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை பதிப்பாசிரியராகக் கொண்டு இந்திய அரசு வெளியிட்டுள்ள “ கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருளியில்வரலாறு” எனும் பெருநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வைதிகர்களும் இந்துத்துவாவாதிகளும் போற்றுகிற வேதங்களின் மூலப் பாடல்கள் அதாவது சம்ஹிதை – பிராமணம் எனப்பட்ட முற்பகுதிகளின் தன்மை இவ்வளவே. அந்த சடங்குமயமான வேதமரபில் தத்துவ விசாரணைக்கு போதிய வெளி இல்லை. தீயின் புகையும், பலியிடப்பட்ட ஆடு மாடுகளின் ஓலமும், சோமபானப் போதையுமே அடைத்துக் கொண்டிருந்தன.
மிகவும் பிந்திய காலத்தில் எழுந்த உபநிடதங்களிலேயே விவாதிக்கத்தக்க தத்துவச் சிந்தனைகள் வெளிப்பட்டன.
000 000 000
வேத வேள்விமரபு தமிழ்ச் சமுதாயத்திற்குள் நுழைந்ததை சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி என்றும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்றும் மன்னர்கள் தங்களுக்கு சூடிக்கொண்ட பெயர்களே அதற்குச் சான்று.
தஞ்சை மாவட்டத்தின் பூஞ்சாற்றூரை ஆண்ட கௌணிய விண்ணந்தாயன் என்ற மன்னனைப் பற்றி ஆவூர் மூலங்கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் இவ்வாறு செல்கிறது.
"நீர்நாண நெய் வழங்கியும் , எண் நாணப் பல வேட்டும் , மண்நாணப் புகழ் பரப்பியும்…"
வேள்விநெய் கண்டு நீர் வெட்கப்பட்டதாம். வேள்விகளின் எண்ணிக்கையில் எண்ணே வெட்கப்பட்டதாம்
விண்ணந்தாயனின் புகழ்கண்டு பூமியே வெட்கப்பட்டதாம். வேள்வி மரபு எந்த அளவுக்கு ஊடுருவி நின்றது என்பதும் புரிகிறது.
வேள்விக்காகவே பிராமணர்களுக்கு அரசர்கள் தானம் வழங்கினர். இன்றும் சதுர்வேதி மங்கலங்களும், உத்தமதான புரங்களும், பிரமதேயங்களும் சான்றாக இருக்கின்றன.
வேள்வியின் மூலமே தங்களுக்கு கிடைத்ததெல்லாம் கிடைத்தது என நம்பவைக்கப்பட்டது. வேள்வியே அகவாழ்வின் மையப் பொருளானது. அதற்கான சடங்குகளைக் கூறும் வேதங்கள் புனித மானவையாக கொள்ளப்பட்டன. அவை மதமாக தத்துவமாக முன்மொழியப்பட்டன.
000 000 000
சங்க இலக்கியங்களில் பத்துபாட்டு எட்டுத்தொகை நூல்களில் பல பாடல்கள் வேதங்கள் குறித்து பேசுகின்றன “எழுதாக் கிளவி, எழுதாக் கற்பு” ஆகிய மிக நுட்பமான சொற்களால் வேதங்களின் மீது விமர்சனங்களை வைக்கின்றன .
மேற்கண்ட சொற்கள், வேதங்கள் அவற்றின் தொடக்க காலத்திலிருந்து எழுதப்படாத வாய்மொழிப் பாடல்களாகவே இருந்து வந்திருக்கின்றன எனபதை நமக்கு உணர்த்தும் முக்கியச் சான்றுகள்.
நீண்ட காலத்திற்கு வேதங்கள் எழுதப்படாமலே வாய்மொழியாக ஒதப்பட்டு வந்து மிகப் பிந்திய காலத்திலேயே எழுத்துருவாக்கம் பெற்றிருக்கலாம்.
கீழ்கண்;டவற்றை அதனை உறுதிசெய்யும் சான்றுகளாகக் கொள்ளலாம். எட்டாம் நூற்றாண்டின் இறுதியில்தான் கற்பூரம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் கற்பூரத் தீபாராதனை குறித்து அதர்வண வேதத்தில் உள்ளது
வேத மறுப்பாளரான புத்தரைப்பற்றிய செய்திகள் அவர் பிறப்பதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னாலேயே உள்ள யசூர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து நமக்குப்புரிவது இதுதான். எழுதாமல் வாய்மொழியாகவே வைத்துக்கொண்டு இந்தியா முழுமைக்கும் வெளிப்பட்டு வளர்ந்து வந்த மற்ற தத்துவ மரபுகளை உள்வாங்கி செரித்து தனதாக்கிக் கொண்டு பின்னர் எழுத்து வடிவம் அளிக்கப்பட்டிருக்கலாம்.
காலத்தால் முந்திய சம்ஹிதை பிராமணம் ஆகிய வேதங்களின் முற்பகுதிகள் வேள்விகளையும் சடங்கு சம்பிரதாய மந்திரங்களையும் மட்டுமே பேசுகின்றன. பிந்திய கால உபநிடதங்கள் பேசும் தத்துவ விசாரணைகளில் மற்ற மரபு சார்ந்த கலப்பிருக்கலாம். ரிக் வேதத்தில் உள்ள அறிவுப் பூர்வமான தத்துவப்பாடல்களுக்கு கீழ் அடிக்குறிப்பாக ‘திராவிட ரிக்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதைத் தென்னாட்டின் பங்களிப்புக் கலப்பாக கருத இடமுண்டு.
000 000 000
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தனது ஆய்வு நூலான “இந்துமதப் புதிர்கள்” என்னும் நூலில் வேதங்கள் குறித்த தனது ஆய்வுகளை ஆழமாகவும் விரிவாகவும் எழுதியுள்ளார்.
வேதங்கள் சனாதனமானவை, அதாவது என்றென்றும் இருந்து வருபவை, பொய்யாதவை, கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை, ஆகவே மிகுந்த புனிதத்தன்மை வாய்ந்தவை. இவ்வாறுதான் அவை கட்டமைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் பிரம்மாவின் நினைவில் பாதுகாக்கப்பட்டு ஒரு கல்ப காலத்திலிருந்து அடுத்த கல்ப காலத்திற்கு அவை கடத்தப்படுவதாகச் சொல்லப்படுவது ஒன்று. ஒரு கல்பகாலம் என்பது பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும் (சிருஷ்டி) அழிவிற்கும் (பிரளயம்) இடைபட்ட காலம். இவ்வாறு சொல்லப்படுவதற்கு காரணம் வேதங்கள் பிரபஞ்சம் தோன்றியபோது கடவுளால் அருளப்பட்டவை என்றும் அவை மனித முயற்சிக்கு அப்பாற்பட்டவை எனவும் நிறுவத்தான்.
இவ்வாறு கூறப்படும் “வேதங்களின் புனிதத் தன்மை ஏற்கப்படவேண்டுமானால் அவை அறநெறிப் பண்புகளைக் கொண்டவையாக இருக்கவேண்டும். மனித மாண்புகளை சிறிதளவேனும் உயர்த்தக் கூடிய அறநெறிகள் இல்லாத ஒன்றினை புனிதமாகக் கொள்வது ஒரு புதிர்தான்” என விளக்குகிறார் டாக்டர் அம்பேத்கர்.
ஆய்வாளர் மூயிர் இவ்வாறு கூறுகிறார் “வேதங்கள் அவற்றைப் பாடிய பண்டைக்கால கவிகளின் சொந்த நம்பிக்கைகள், உணர்வுகள் ஆகியவற்றின் வெளிப்பாடேயன்றி வேறில்லை. தாங்கள் வணங்கும் கடவுள்களின் புகழைப் பாடி நிவேதனங்களை அளித்து, எல்லோரும் விரும்புகிற ஆசிகளை, உடல்நலம், செல்வம், நீண்ட ஆயுள், கால் நடைகள், குழந்தைகள், எதிரிகள் மேல் வெற்றி, பாவமன்னிப்பு, சொர்க்கபோகம் ஆகியவற்றை அருளும்படி அவர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்” ஆக வேதங்களின் உள்ளடக்கங்களின் தன்மை இதுதான்.
அம்பேத்கர் தனது நுட்பமான ஆய்வுகளின் மூலம் வேதங்களில் உள்ளவற்றின் தன்மைகளை பலவகையான சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.
ரிக் வேதம் முழுக்க விரவிக்கிடக்கும் பிரார்த்தனைப் பாடல்களை வாயு, அக்னி, இந்திரன், மித்ரன், ஆதித்தியன் ஆகியோரை வேண்டிப் பாடும் பாடல்களை பட்டியலிட்டு அவற்றின் பொருளோடு எடுத்துரைத்துள்ளார். அதர்வண வேதத்தில் உள்ள 250 க்கும் மேலான, அடுத்தவரை வசியம் செய்யும் மந்திரங்களை பட்டியலிட்டு காட்டியுள்ளார்.
ஆக, அன்றாட வாழ்வியல் தேவைகளுக்காக இறைவனை இறைஞ்சிப் பாடும் பண்டைக்கவிகளின் பாடல்களாகவே வேதங்கள் பார்க்கப்படுகின்றன.
“இந்துமதப் புதிர்கள்” நூலில் அவர் ஆய்ந்து வெளிப்படுத்தும் முடிவுகள் அறிவுலகத்தால் வியந்து ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இதுவரை யாரும் மறுத்துரைத்து எழுத முடியாத தன்மையுடையவை.
அந்த ஒப்பற்ற நூலிலிருந்து வேதங்களின் அறநெறிப் பண்பு குறித்த கட்டுரைகள், இந்துக் கடவுளர்களை அவர்கள் ஏன் சண்டையிட வைத்தார்கள் என்பதான கட்டுரைகள், நான்கு வருணங்கள் நான்கு ஆசிரமங்கள் குறித்த கட்டுரைகள், வேதங்களின் புதிர்கள் குறித்த கட்டுரைகள் ஆகியன இந்நூலில் அப்படியே தொகுத்து தரப்பட்டுள்ளன.
அபெகா வெளியீட்டு வரிசையில் வரும் இந்நூல் வாசிப்பவரின் சிந்தனையின் கதவுகளைத் திறந்து வெளிச்சம் பாய்ச்ச வல்லவை.
ராசி. பன்னீர்செல்வன்.
புதுக்கோட்டை

No comments:
Post a Comment