(புதுகை சஞ்சீவியின் ”எழுத்தாளன் சொன்ன கட்டுக்கதைகள்” சிறுகதை நூலுக்கு நான் எழுதியுள்ள அணிந்துரை )
தமிழில் சிறுகதை இலக்கியம் என்பது தமிழ் மரபிலிருந்த
வாய்மொழிக் கதைகளின் தொடர்ச்சியாகவே வந்தமைந்த ஒரு வகைமை . பொதுவாக ஆய்வாளர்களால் சொல்லப்படுவதுபோல்
அது மேலைநாட்டிலிருந்து வந்ததல்ல. தமிழ் உரைநடை மரபு குறித்து தொல்காப்பியம் இவ்வாறு கூறுகிறது.
பொருள் மரபில்லாப் பொய் மொழியானும்
பொருளொடு புணர்ந்த நகை மொழியானும் ( பொரு 1420 )
இதில் பொருள் மரபில்லா பொய்மொழியானும் என்பதற்கு கற்பனை கலந்த
புனைவுப் பேச்சு எனவும் பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்பதற்கு உண்மைகலந்த வேடிக்கைப்
பேச்சு எனவும் உரையாசிரியர் விளக்கம் தருவர். மேற்கண்ட மரபுக்கூறுகளை எடுத்துக்கொண்டுதான் பாரதி தனது ஆறில்
ஒரு பங்கு , காக்காய் பார்லிமெண்ட் முதலான கதைகளைப் படைத்தார்.
மேற்கத்திய கலை
வடிவங்களை இந்திய எண்ணங்களைக் கொண்டு படைத்துக் காட்டுவதே நவீனம் என்று பரவலாக இங்கு
அறியப்பட்டிருந்த காலத்தில், பாரதியோ நமது தமிழ் மரபை நவீனப்படுத்த முயன்றார்..அதாவது
மரபிலக்கியத்தின் பழமைவாத நம்பிக்கைகளை ஒதுக்கி
அவற்றை மறுபரிசீலனை செய்யும் புத்திலக்கியப் போக்கினை தொடங்கி வைத்தார் .
ஆக தமிழின் சிறுகதை
இலக்கியத்தை நுட்பமாகப் பார்த்தால் மற்ற எல்லாக்
கலைகளையும் போலவே உலகளாவிய வடிவத் தாக்கங்களுக்கும்
குறுக்கீடுகளுக்கும் உள்ளாகி நல்லதோர் வடிவக் கச்சிதத்தை அடைந்தது என்றே சொல்லவேண்டும். அது உலகம் முழுதும் நடந்த மறுமலர்ச்சி மற்றும் தொழிற்புரட்சிக்
காலங்களின் தாக்கத்தினால் உண்டான விளைவுகளில் ஒன்று. அதனால் சிறுகதை நம்முடையது , வடிவக் கச்சிதம் வந்து
சேர்ந்தது என்றே கொள்ளவேண்டும்
****** ***** ********
ஒருவர் நடந்த ஒரு நிகழ்வை அடுத்தவருக்கு சொல்கிறபோது ஒவ்வொரு கூறையும் காட்சிப்படுத்தி
விவரித்து ரசனையாக சொல்வாரெனில் கேட்பவர் அதைக் ”கதை”போல் உணர்கிறார். . மற்றொரு நேர்வில்
, நடக்காத ஒன்றை ஒருவர் புனைந்து சொல்வாரெனில் கேட்பவர் அவர் நன்றாக ”கதை அளப்பதாக”
சொல்கிறார். முதலில் சொன்னபடி கதை என்பது உண்மை என்றாகிறது . இரண்டாவதில் அது பொய்
என்றாகிறது. ஆக கதை என்பது உண்மையா ? பொய்யா ? . நாம் இப்படிச் சொல்லலாம். கதை என்பது
உண்மையைப் புனைவது.
ஒரு உண்மையைப் புனைந்து
அதன் உள் ஒளியை படைப்பாக்கி அதன் மூலம் வாழ்வின் மகத்தான தருணங்களை வாசகனுக்குக் கொண்டுசேர்ப்பவன்
ஒரு நல்ல எழுத்தாளன் என்றால் , அவ்வகையில் தற்காலப் படைப்பாளர்களில் இந்த தொகுப்பின்
மூலம் முதல் வரிசைக்கு வந்திருக்கிறார் புதுகை சஞ்சீவி .
தலைப்புக் கதையான எழுத்தாளன் சொன்ன கட்டுக்கதைகளில்
கதைசொல்லியோடு அவனுக்குள் இருக்கும் எழுத்தாளன் எனும் சுய விமர்சகன் நடத்தும் போராட்டங்களை உயிர்ப்பாய் விவரித்துச்
செல்கிறார். அந்த எழுத்தாளன் எப்போதும் எதிர்மறை விவாதங்களையே புரிபவனாக இருந்தாலும்
, நனவிலி மனத்தின் கனவுகளில் புதிய வெளிச்சங்களைத் தருவதும் அவனின் உள்வேலைதான். தன்னை
கருவேல மரமாகக் காண்பதும் கொடிகளும் கொம்புகளும் தன்னை அழுத்திக் கொண்டிருப்பதும் அருகில்
சீராக அமைக்கப்பட்ட பணங்காய்ச்சி மரத் தோட்டங்களும் தமிழ் சிறுகதைக்குப் புதிய படிமங்கள்..
கதையின் இறுதியில் அவன் சந்திக்கச் செல்வது மனைவியையும் மகனையும் மட்டுமல்ல, ஒரு புது
வாழ்வையுந்தான். .கட்டுக்கதை சிதறிக்கிடக்கும் அவனது வாழ்வை மறுகட்டமைப்பு செய்கிறது.
தீராக்கடன் கதை
நாம் வெளிப்படுத்தாமல் கடக்க முயற்சிக்கிற
ஒரு அடிப்படையான உடலியல் பிரச்சினையை அதி தீவிரமாகப் பேசுகிறது .
கதையின் நிகழ்வுகளில் கொஞ்சமும் தொடர்புபடுத்தப்படாத அதிர்ச்சியான
இறுதி முடிவு ஒரு கணம் நம் மூச்சைப் பிடித்துப் பார்க்கிறது. இந்த வாழ்க்கைப்பாட்டின்
அழுத்தங்களால் நசிவதையே தம் வாழ்வாகக் கொண்டுள்ள
எண்ணற்ற பெண்களுக்கு மொத்த ஆணினமும் பட்டுள்ள தீராக் கடனைக் காட்டி குற்ற உணர்வை ஏற்படுத்துகிறார்
. சஞ்சீவி.
***** ******
*****
கதைகளை மிகப்பொருத்தமான சொற்களைத் தேர்ந்து
சொல்லிச்செல்லும் விதத்தில் புதுகை சஞ்சீவி ஒரு தேர்ச்சிமிக்க எழுத்துக் கலைஞராக மிளிர்கிறார்
.. காட்சிகளை பொருத்தமான வரிசையில் சரியான
இடத்தில் வைப்பதில் வியப்பூட்டுகிறார்.
ஞானச்செருக்கு எனும்
கதையில் எளிய குடும்ப பின்ணணி கொண்ட ஒரு பெண்ணை மாப்பிள்ளைவீட்டார் பெண் பார்க்க வருகிறார்கள்
, .
// ”பொண்ண நல்லா
பாத்துக்கப்பா ” யாரோ மாப்பிள்ளையிடம் சொன்னது கேட்டது. .அங்கிருந்த அனைவரும் அவளது
பிரகாசமான கண்களை ,கூரிய மூக்கை , மென்மையான சிவந்த விரல்களை , பளிச்சென்ற சருமத்தை
அவரவர் மனத்தராசுகளில் எடைபோட்டுக் கொண்டிருந்தார்கள்.//
கதையின் பெரும்பகுதி நகர்ந்துவிட்ட நிலையில் அந்த பெண்ணின் தோற்றத்தை
முன்னர் எங்கும் சொல்லாமல் மாப்பிள்ளை வீட்டார் பார்க்கிறபோதுதான் வாசகனுக்கும் காட்டுகிறார்.
இந்த இடவைப்பு கவனிக்கத்தக்கது. இந்தக் கதையின் முடிவை படிக்கின்ற பெற்றோர்கள் தம்
மகளின் மனதறியாமல் அவளது முன்னற்றக் கனவுகளைச் சிதைக்கிற ஒரு திருமண முடிவை எடுக்கமாட்டார்கள்.
அதேபோல், நகரத்து பேருந்தில் பயணித்தவர் சொன்ன கதையில் அந்த
மீன் வியாபாரி கதை முழுக்க ஒரு பழைய சைக்கிளில்தான் சென்றுகொண்டிருப்பான். ஆனால் ஒரு
பதட்டமான சூழலில் தனக்கு உதவி செய்த ஒரு அம்மையாரை சந்திக்க செல்லும்போது மட்டும் எண்ணெய்ப்
பசையில்லாத சைக்கிள் செயினின் கொடூரமான சத்தத்தை பதிவுசெய்கிறார்.
அவனது மன அவதிக்குப் பின்னிசையாக அது பொருந்துகிறது.
பாறைக்குளம் கதையில்
வரும் ஐந்து விடலைப்பருவ ந்ண்பர்கள், கிளிப்பட்டி அம்மன் கோயிலில் போய் இரவில் தூங்கினால்
கனவில் வருங்கால மனைவி தெரிவாள் என்று ஒரு பாட்டி சொன்னதைக் கேட்டு அங்கு தூங்கப் போகிறார்கள்
. அவர்கள் தூங்கினார்களா கனவில் மனைவி வந்தாளா எனச் சொல்லாமல் அப்படியே வைத்துவிட்டு
கதையின் அடுத்தப் பகுதிகளைச் சொல்லிச்செல்வார். முனைப்பான பகுதியில், நண்பர்களின் ஒருவனான சந்திரன் பாறைக்குளத்தில் மூழ்கி இறந்து விட காவல்
துறையினர் இவர்கள்மீது கூற்றம் சுமத்த முயற்சிக்க அப்போதுதான் தூங்கிய கதையினை இணைக்கிறார்.
அன்று யாருடைய கனவிலும் ஒருத்தியும் வரவில்லை என்றும் அப்ப நம்ம
ஒருத்தருக்குமே கல்யாணம் ஆகாதா என சந்திரன் கேட்டதையும் சொல்லி நம்மை காவல்துறை கைது
செய்துவிட்டால் பிறகேது கல்யாணம் என அவர்கள் புலம்பும் இடத்தையும் அழகாகச் சேர்க்கிறார்.
இது அவரது எழுத்தின் வரைகலைச் சிறப்பு.
****** ******* *******
தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுமே விவரணைகளால்
சொல்லப்பட்டிருப்பதைவிட காட்சி மொழிகளாலேயே அதிகமாய் சொல்லப்பட்டிருக்கின்றன. .ஒவ்வொரு
நிகழ்வும் காட்சிகளாக நம் முன்னே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன அல்லது அந்த கதைக்களத்தில் பாத்திரங்களோடு நாமும் உடனிருக்கிறோம். வாசகனையும் கதைக்குள் கொண்டுபோய்
வாழவைப்பது மிகுந்த சவாலான எழுத்துவகை.. அது படு இயல்பாக புதுகை சஞ்சீவிக்கு கைவந்திருக்கிறது.
எளிய மனிதர்களின்
மிக எளிய வாழ்க்கையை, அவ்வளவாக கவனத்தில் கொள்ளப்படாத உள்ளடக்கங்களை கதைப்பரப்புக்கு
கொண்டுவருவது படைப்பாளரின் மனிதத்துவ அன்பின் மேன்மை என்றே சொல்லவேண்டும். அதுதான்,
வாசிப்பவரின் சமனை குலைக்கக்கூடிய ”தீராக்கடன்” , உறவு புறக்கணித்தபோதும் நாங்கள் இருக்கிறோமென
நண்பனின் கல்லறையை மெழுகி வணங்கும் நண்பர்களைக்காட்டி நட்பை உயர்த்தும் ”கல்லறைத்தோட்டம்”
ஆகிய கதைகளை எழுத வைத்திருக்கிறது.
செல்லாக்கோபம்
கதை முதல் வரியிலிருந்து கடைசி வரிவரை வாசகனை
அடக்கமுடியாத சிரிப்பலைகளில் ஆழ்த்துகிறது.. இந்த வகைமையில் ஒரு கதையை தமிழ் வாசகப்பரப்பு
அண்மைக்காலத்தில் கண்டதில்லை என்றே சொல்லவேண்டும். கொல்லெனச் சிரிக்கும் சிரிப்பு
, வாய்பொத்தி கமுக்கமாய் சிரிக்கும் சிரிப்பு , நமட்டுச் சிரிப்பு என அதில் வரும் பாத்திரங்கள்
சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அந்த ஒவ்வொரு சிரிப்பிலும் , சிரிப்புக்கு காரணமான சுப்பனை போன்ற ஏதுமறியா
அப்பாவி மனிதர்களின் வலியை வாசகன் உணரமுடிகிறது. ..அது அறியாமைகளின் மீது நிகழ்த்தப்படும்
அரசியல் சமூக அதிகாரங்களின் குறியீடாக வெளிப்படுகிறது.
அண்மையில் எழுத்தாளர்
ச.தமிழ்ச்செல்வன் அவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் எழுதியுள்ள தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் ( முதல் ஐம்பது ஆண்டுகள்
) நூலுக்காக ஐயாயிரம் கதைகளை படித்ததாக கூறினார். அதன் இரண்டாவது ஐம்பது ஆண்டுகள் பகுதி
வெளிவரவிருக்கும் நிலையில் அதற்காக இன்னும் ஐயாயிரம் கதைகளுக்குமேல் அவர் படித்திருக்ககூடும்.
அதைப்பற்றி அவர் கூறும்போது நம் படைப்பாளர்கள் எல்லாவற்றையும் , எதையும் இல்லையெனச்
சொல்லமுடியாத அளவுக்கு எழுதிவிட்டார்கள். எத்தனை பார்வைகள் எத்தனை கோணங்கள் ,எத்தனை
வடிவங்கள் ..என சிலாகித்தார்.
அப்படி நிறைந்து
கிடக்கிற கதைப்பரப்பில் இன்னும் இன்னும் எங்கள் தமிழ் வாழ்வில் எழுத வேண்டியது ஏராளமாய்
இருக்கிறது என்று கிளர்ந்துவரும் அடுத்தக்கட்ட எழுத்தாளர்களில் புதுகை சஞ்சீவி குறிப்பிடத்தக்கவராய்
இருப்பார் என்பதற்கு அவரின் இந்த தொகுப்பே சான்று.
புதுக்கோட்டை - ராசி.பன்னீர்செல்வன்
27.12.2022
.
அருமையான விமர்சனம்
ReplyDelete