Saturday, 17 December 2011

தொன்னூறுகளில் எனது கவிதைகள்





0   தவளையின் கனவில்
     விரதப் பாம்புகள் .
     வண்ணத்துப் பூச்சியின் கனவில்
     கையில்லாச் சிறுவர்கள் .
     மானின் கனவில்
     புல் மேயும் புலிகள் . 
     எலியின் கனவில்
     நட்புடன் பூனைகள் .  


     நத்தையின் கனவில் 
     நாளைய தளிர்கள்.
     தேனீக்களின் கனவில் 
     புள்ளிவட்ட முதல் துளி.   

    நாயின் கனவில் 
    நிமிர்ந்த  வால்கள். 
    கோழியின் கனவில் 
    வானத்தில் நீச்சல் .

   மனிதனின் கனவில் 
   மற்றொரு கனவு .



2  0   வாய் பெயர்களைச் 
     சொல்லிச் சொல்லிப் பார்க்கிறது .
     கண்கள் நான்கும் பேசிக்கொள்கின்றன 
     காதுகள் கொலுசின் ஒலியைத்தான்  
     சுவாசித்துக்கொள்கின்றன
     மூக்கோ கூந்தலின்
     மலர்மொழியை கேட்டு மயங்குகிறது .
     மெய்யோ தனை மறந்து
     பொய்யாகிப்  போகிறது .

      இந்த காதலில் மட்டுந்தான் 
      புலன்கள் 
      தங்கள் கடமைகளைக்கூட
     மாற்றிக்கொள்கின்றன. 

      புலன்களே மாற்றிக்கொள்ளும்போது 
      குலங்கள் மாற்றிக்கொண்டால் என்ன ...



3  0    வெளித்தடம் 

        எண்ணம் புகாத வெளியில் 
        சிகரத்தின் ஆழமும் 
        ஆழத்தின் முகடும் .

        ஒளிவேர்ச்செடியின் 
        மோன நுனிப்பூக்கள் 

        எதிரெதிர் அடிவானப்பெருவெளி
        புள்ளியாய் ......

         பெருங்காற்றுக்கு எதிராய் 
         முகங்கொடுப்பு....
         ஈர அலைக்கரையில்
         கால்பதிப்பு .....

         திறந்து வெளிவந்து 
         முழுதும் திறந்து கிடப்பு....

         எண்ணச்சிறகுகளை  
         கழட்டிவீசிவிட்டு
         சக.....  வா 
         வெளிக்கு வெளியே . 






Friday, 16 December 2011

எண்பதுகளில் எனது கவிதைகள்-5



  பறையின் சித்திரங்கள் 


1 இடிகளின் முழக்கம் 
   திசையெல்லாம் அதிர்கிறது 
  அனலில் காய்ச்சிய பறை .


2 உயிரற்றுக்   கிடக்கிறது 
  கழட்டிப்  போடப்பட்ட 
   பறையின் தோல் .


3 இருந்த இசையை 
   விசைதான் வெளிக்காட்டியது 
   தோலிலும் கம்பிலும் .


4  எவ்வளவு வலிமை 
    இந்த ஒப்பாரிக்கு...
    பறையோடு இயைகிறதே !


5 தொண்டையைக் கனைத்து 
   சரிசெய்துகொள்கிறது ஊதி
   சீவாளிகளை மாற்றி மாற்றி .


6 ஒப்பாரியோடு சேர்ந்து 
   தானும் அழுகிறது 
   மழையில் நனைந்த பறை 


7 காற்றில் துடித்துவரும் 
   பறையில் மயங்கியது குயில் 
   சேர்ந்து பாடலாமா ....
   


Tuesday, 13 December 2011

எனது மேடைக் கவிதைகள் -1

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டினையொட்டி (புதுக்கோட்டை-மே 28-29 - 2010 )நடைபெற்ற  பொதுமேடை கலைவிழாக் கவியரங்கில் நான் வாசித்த கவிதை


0

Sunday, 11 December 2011

எனது கவிதைகள்

எண்பதுகளில் எனது கவிதைகள்-4 


1  காட்டுச் சிறுவர்கள் 
      எண்ணி விளையாடுகிறார்கள்
      பாம்பின் தடங்களை .


2   பனித்துளிகள் 
     முத்துக்கோர்த்திருக்கின்றன
     மிளகுக் கொடிகளில்.


 3  நீண்ட இரவுச் சாலையில் 
    இரு சக்கர வாகன ஒளியில் 
    குறுக்கே நழுவும் பாம்புகள் .


4   சில்லுவண்டுகளின் பேரிரைச்சல் 
     நின்றதொரு காட்டில் 
     அலறுகிறது நிசப்தம் .


5   முளைத்துக் கிடக்கின்றன 
     நவதானியத் தளிர்கள் 
      மூன்றாம்நாள் தெளித்த பால் .


6    தூரத்தில் தெரியும் 
      அருவியின் சாரல், 
      நீர் புகைகிறது 


7   கிளிகள் எல்லாம் 
     ஆண்பால்தான் ,
     கனிகளைக் கேளுங்கள் .  


8  ஒப்பாரியோடு சேர்ந்து 
    தானும் அழுகிறது 
    மழையில் நனைந்த பறை .