Sunday, 26 October 2014

இருளப்ப சாமியும் 21 கிடாயும் - வேல.இராமமூர்த்தி

இருளாண்டித் தேவரை உப்பங்காற்று ‘சிலு சிலு’ என உறக்காட்டியது. முளைக் கொட்டுத் திண்ணைக்கு என்று ஒரு உறக்கம் வரும். நெஞ்சளவு உயரமான திண்ணை. நடுவில் நாலு அடுக்கு சதுரக் கும்பம். தப்பித் தவறி கால் பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். நாலு கல்தூணில் நிற்கும் ஒட்டுக் கொட்டகை. கிழக்குப் பாதையோரம் தரையோடு முளைத்த பத்ரகாளி, இளவட்டஙக்ள் பத்ரகாளிக்குப் பயந்து இரவு நேரங்களில் தப்பிலித்தனம் பண்ணுவதில்லை. இந்த விஷயத்தில் பெரியாளுகள் ரொம்பக் கண்டிஷன்.

'எளவட்ட முறுக்கிலே எவளோடயாவது போறவன்... கம்மாக்கரை, கிணத்தடி, படப்படிப் பக்கம் போயிறுங்க. தப்பி நடந்தா... காளி கண்ணைக் கெடுத்திடும்’ என்பார்கள். மற்றபடி பகம் பூராவும் வெட்டுச் சீட்டு, ரம்மி, தாயக்கட்டம், ஆடுபுலி ஆட்டம் நடக்கும். தென்புறம் இருளாண்டித் தேவர் படுத்திருந்தார். அவர் தலைமாட்டில் கந்தையாத் தேவர். வட ஓரம் ஏழு பேர் ரம்மி, ஏழு பேரில் இருளாண்டித் தேவர் மகன், மகள் புருஷன், கந்தையாத் தேவர் மகன், தம்பி மகன் ஆடிக் கொண்டிருந்தார்கள். மேலப்புறம் வெட்டுச் சீட்டு, கிழக்கே பத்ரகாளி பார்வையில் தாயக் கட்டம். இருளாண்டித் தேவரின் கால்மாட்டில் ஆடுபுலி ஆட்டம். எல்லோரும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு சொந்தம். தகப்பன், மகன், மாமன், மச்சினன்.
சீட்டுப் பிடிக்க கை பழகாத சின்னப் பயலுகளுக்கு நிறைகுளத்தம்மன் கோயில் ஆலமரத்தில் காக்கா குஞ்சு விளையாட்டு. ஊர்க் கிணறுகள் அத்தனையும் குட்டப்புழுதி ஆகிவிடும். குதியாட்டம்தான்.
இருளாண்டித் தேவரின் இடதுகை மடங்கி தலைமாட்டில் பாந்தப்பட்டிருந்தது. இரண்டு தொடை இடுக்கிலும் வலது கையைக் கொடுத்திருந்தார். தொடை இடுக்கில் கிடந்த தழும்புகள் மேடு தட்டிக் கிடந்தன. கவுல்பட்டியில் ஆடு திருடப்போய் பிடிபட்டு பெருநாழி போலீஸார் கம்பியைக் காய வைத்து இழுத்தத் தழும்பு.
பெருநாழிக்கு மேற்கே நாலாவது மைலில் கவுல்பட்டி. தெலுங்கு பேசுகிற ரெட்டிமார் ஊரு. வண்ணான் குடிமகனைத் தவிர்த்து எல்லோரும் ரெட்டிமார்கள் தான். சம்சாரிகளுக்கான எல்லாக் கோப்புகளும் உள்ள ஊர். வீட்டு வீட்டுக்கு உழவு மாடு. கிடை கிடையாக ஆடு, ஊரைச் சுற்றி பெரும்பெரும் படப்புகள். வாய் அகன்ற மண்பானை போல் ஊரணி. மாட்டுக்கும் மனுசருக்கும் அதுதான் குடிதண்ணீர். யாரும் கால், முகம் கழுவக் கூடாது. கட்டு செட்டான ஊர். களவுக்கு இடங்கொடுக்காத ஊர்.
பத்து பேர் எதிர்த்து வந்தாலும் அடித்து விரட்டுகிற வீரன் இருளாண்டித்தேவர். அன்றைக்குக் கவுல்பட்டி களவுக்குப் போனவர்களில் யாரும் குறைந்த ஆளில்லை. முருகேசத் தேவர், ஒத்தையிலே நின்னு ஊரையே அடிக்கிற தாட்டியன். அதே மாதிரி கந்தையாத் தேவர், நாகுத்தேவர், கருப்பையாத் தேவர், முத்துத்தேவர், சுந்தரத்தேவர், குருசாமித் தேவர் எல்லாரும் வீரவான்கள். இத்தனை பேரும் கம்பு கட்டி நின்றால் எந்தப்படையும் பின்வாங்கும்.
அன்றைக்குச் சாமத்துக்கு மேலே எல்லாரும் கிளம்பி வைரவன் கோயில் பொட்டல் ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள். பின் நிலாக் காலம். ராத்திரி ஒரு மணிக்கு மேலே தான் நிலா கிளம்பும்.
ஆலமரம். பாறையில் வேர்ப்பிடித்து உச்சியில் நின்றது. ஆலமரத்துப் பட்சி உத்தரவு கொடுத்தால்தான் களவுக்குக் கிளம்புவது வழக்கம். ஆந்தை வலமிருந்து இடம் பாய்ந்தால் நல்ல சகுனம். போகிற இடத்தில் ஆபத்தில்லை. இடமிருந்து வலம் ஆகாது. வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டும். எல்லோர் கையிலும் வேல் கம்பு. கனத்த செருப்பு, கருப்புப் போர்வை, குத்துக்காலிட்டு காத்திருந்தார்கள். வெகுநேரம் கழித்து ‘கீச்ச்....’ என்ற சத்தத்தோடு ஆந்தை வலமிருந்து இடம் பாய்ந்தது.
இருளாண்டித் தேவர் எழுந்தார்.
“வைரவன் உத்தரவு கொடுத்துட்டாரு ஒரு குறையும் வராது. எல்லாரும் கெளம்புங்க”. கிளம்பினார்கள், பத்துப் பேருக்கு மேல் இருக்கும். நிலா கிளம்பி விட்டது. நாலு மைலும் வண்டிப்பாதை. ரெண்டு பக்கமும் முள்ளுக்காடு. இருளாண்டித்தேவர் முன்னால் போனார். பேச்சும் சிரிப்புமாக நடந்தார்கள்.
வனாந்தரம். இருட்டு. யாராவது கொஞ்சம் பலத்து பேசினாலோ, சிரித்தாலோ இருளாண்டித்தேவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

இடையிலே ரெண்டுமூணு ஓடைக்காடு. முழங்காலுக்கு வண்டல் இறக்கியது. செருப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடைகளைக் கடந்தார்கள்.
மணிப்பத்தா ஓடையைத் தாண்டி பத்து எட்டு நடந்திருப்பார்கள். வண்டிப்பாதையின் இந்தத் தடத்துக்கும் அந்தத் தடத்துக்கும் சரியாக ஒரு பாம்பு புழுதியைக் குடித்துக்கொண்டு படுத்திருந்தது. தொடைக்கனம். முன்னே போன இருளாண்டித்தேவர் ரெண்டு எட்டு இடைவெளியில் பாம்பைப் பார்த்துவிட்டு நின்றார். நாகம் தலை தூக்கிச் சீறுமுன், வேல்கம்பால் தலையில் ஒரு குத்துக் குத்தி முள்வேலிக்குள் தூக்கி எறிந்துவிட்டு நடந்தார். கவுல்பட்டி ஊரணிக்கரையைச் சுற்றி பெரும் பெரும் புளிய மரங்க்ள் பேயாய் நின்றன. நிலா வெளிச்சத்தில் ஊரணி புளியமரங்கள் தட்டுப்பட்ட உடனே இருளாண்டித்தேவர் உதட்டில் விரல் வைத்து ‘உஸ்... உஸ்...’ என்று எச்சரித்தார். செருப்புச் சத்தம் கேட்காதபடி பொத்தி பொத்தி நடந்து முன்னேறினார்கள். ஊர்க்கிட்டே அண்ட முடியாது. வீட்டு வீட்டுக்கு நாய் கெடக்கும். ராஜபாளையத்துக்கோம்பை நாய்கள். துரத்திப் பிடித்தால் தொடைக் கறியை தோண்டி எடுத்துவிடும்.

குளிருக்குக் குன்னிப் படுத்திருக்கும் அனாதைக் கிழவி மாதிரி ஊர் உறங்கிக் கொண்டிருந்தது. ஊரை தெற்கே விட்டு, ஊரணிக்கு வடக்காக நடந்தார்கள். ஆட்டுக்கிடை ஊருக்கு வெளியே மந்தைக் காடுகளில்தான் கெடக்கும்.
“யோவ்.... குருசாமித் தேவரே.... எட்டி நடங்க...”
ஊரணிக்கு வடக்கே நாலு புஞ்சை கடப்புக்கு ஆட்டுச் சத்தம் கேட்டது.
இருளாண்டித்தேவர் வலது கையை லாத்தி காட்டினார். எல்லோரும் வடக்காக எட்டி நடந்தார்கள்.
சுந்தரத்தேவருக்கு இருமல் முட்டியது. நெஞ்சுக்குள் அமுக்கினார்.
“கந்தையாத்தேவரே.... செருப்பு சத்தம்....”
கந்தையாத் தேவர் பொதுமலாய் நடந்தார்...
எல்லா ஆடுகளும் படுத்துக்கிடந்தன. ஒரு ஆடு ‘புர்ர்ர்ர்.... ர்....ர்...’ எனத் தும்மியது. தென்கோடியில் ஒரு கயிற்றுக்கட்டில். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தெரியாமல் போர்த்திக்கொண்டு கிடைக்காரன் படுத்திருந்தான். கட்டிலில் ஒரு வேல்கம்பு சாத்தி இருந்தது. கட்டிலுக்கடியில் நாய். சுருட்டிப்படுத்திருந்தது.
‘நேய் படுத்திருக்கு.”
அடுத்த புஞ்சைப் பொழியில் எல்லாஅரும் பதுங்கி உட்கார்ந்தார்கள். வேல் கம்புகளைக் கிடத்தி விட்டு போர்வைகளை இறுக்கிப் போர்த்தினார்கள். வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டார்கள்.
”தெற்கயும் மேற்கயும் யாரும் போகாதீங்க. வடக்க பாதிப்பேரும் கிழக்கப் பாதிப்பேரும் போகணும். சுருக்கா முடியணும்.”
வேல்கம்பை கையில் எடுத்துக் கொண்டார்கள். இருளாண்டித் தேவரோடு சேர்ந்து பாதிப்பேர் கிழக்கேயும், முருகேசத் தேவரோடு பாதிப்பேர் வடக்கேயும் பிரிந்தார்கள்.
பச்சைப் பனை ஓலையைக் கிழித்ததுபோல் குட்டி ஆடுகள் சிணுங்கின. சின்னச் சின்ன சத்தங்களோடு ஆடுகள் கிடந்தன. கிடைக்காரனும், நாயும் அசையவில்லை. நல்ல தூக்கம். நிலா வெளிச்சத்தில் ஆடுகளின் நிறம் தெரியும் அளவுக்கு நெருங்கி விட்டார்கள். சுந்தரத்தேவர் மறுபடியும் இருமலை நெஞ்சுக்குள் அமுக்கினார்.
’புர்ர்...ர்...ர்’ என்று ஒரு ஆடு தும்மியது. பத்தடி நெருக்கத்திலேயே நின்று அவரவருக்குத் தகுதியான ஆடுகளை இனம் குறித்தார்கள். கிடாயாக இருந்தால் கறி நல்லா இருக்கும். பெருத்த கிடாயாக இருந்தால் தோளில் போட்டுக் கொண்டு நாலு மைல் தூரம் ஓட வேண்டும். இருளாண்டித் தேவரின் சைகைக்காக காத்திருந்தார்கள். கட்டிலில் படுத்திருந்த கிடைக்காரன் புரண்டு படுத்தான். நாய் அசையவில்லை. கிழக்கே இருந்து இருளாண்டித் தேவர் துண்டை வீசினார்.
அவரவர் குறித்து வைத்திருந்த கிடாய்களை நெருங்கி இடது கையால் வாயை இறுக்கிப் பிடித்தார்கள். வலது கையால் குரல்வளையை ‘கடக்’ என நெறித்து ஒதுக்கி விட்டார்கள். கிடாய்கள் கால்களை உதறிய சத்தந்தான் லேசாய் கேட்டது. கத்த முடியவில்லை. கைக்கு இரண்டு கால்களைப் பிடித்துத் தூக்கி, துண்டைப் போர்த்துவதைப் போல் தோளில் போட்டார்கள்.
கிடைக்காரனுக்கும், நாய்க்கும் நல்ல தூக்கம். இடது கையால் ஆட்டுக் கால்களையும் வலது கையில் வேல் கம்பையும் பிடித்துக் கொண்டு ‘லொங்கு... லொங்கு’ என ஓடக் கிளம்பினார்கள். மூன்றாவது புஞ்சைப் பொழியைக் கடந்தால்தான் வண்டிப்பாதை. முருகேசத் தேவர் முன்னால் ஓடிக் கொண்டிருந்தார். தோளில் கிடந்த ஆட்டின் சூடு, இந்தக் குளிர்ந்த நேரத்தில் எல்லோருக்கும் இதமாக இருந்தது. வண்டிப்பாதைக்கு வந்து விட்டார்கள். யாரும் வாய் திறக்கவில்லை. ஓட்டம் குறைந்து ’ஓட்டமும் நடையு’மாகப் போனார்கள்.
முத்துத்தேவரின் கழுத்தில் கிடந்த கிடாயின் குரல்வளை சரியாக நெறிபடவில்லை

‘ம்மே... ம்மேய்... ம்மேம்...’ என்று கத்தக் கிளம்பி விட்டது. முத்துத்தேவரின் பிடி தவறியது. கிடாய் துள்ளவும் பிடியை விட்டு விட்டார்.
கீழே குதித்த கிடாய், ‘ம்  மே... மே... மேம்... ய்..’ என்று கத்தித் தீர்த்து விட்டது.
முத்துத்தேவர் சுதாரித்து, கிடாயின் குரல்வளையை கடித்துத் துப்பினார். கிடாய் சத்தம் நின்றது.
‘லொள்... லொள்... லொள்...’
இராஜபாளையத்தைக் கோம்பை கிளம்பி விட்டது. கிடை ஆடுகள் எல்லாம் கத்த ஆரம்பித்தன.  கிடைகாரன் போர்வையைச் சுருட்டி வீசிவிட்டு வேல் கம்பை கையில் எடுத்துக் கொண்டு ஊரைப் பார்த்துக் கத்தினான்.
“ஏய்..... கள்ளன்... கள்ளன்.... ஓடியாங்க...”
இருளாண்டித் தேவரோடு சேர்ந்து எல்லோரும் வண்டிப்பாதையில் கெதியாய் ஓடினார்கள். முத்துத்தேவர் கடைசியாக வந்தார். வாயில் ஆட்டு ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. முதல் புஞ்சைப் பொழியை நாய் தாண்டி விட்டது. ஊர் எழுந்து கொண்டது.
ஹூ...ஹூவெனக் கூச்சல்.
சுந்தரத் தேவருக்கு மூச்சு இரைத்தது. எல்லோரும் வேல் கம்பு இருந்த வலது கையில் செருப்பைக் கழற்றி எடுத்துக்கொண்டு ஓட்டமெடுத்தார்கள்.
மணிப்பத்தா ஓடை வண்டலுக்குள் சதக்.. பொதக்.. என மிதித்து வெளியேறி ஓடினார்கள். நாய் ஒரு புஞ்சைக் கடப்பில் வந்து கொண்டிருந்தது. ஊர்ச்சனங்கள் கம்புகளோடும் ஆயுதங்களோடும் வண்டிப் பாதையில் ‘திமு திமு’ என ஓடி வந்தனர்.
‘வேய் ரா.... வேய் ரா...”
நாய், வண்டலைக் கண்டதும் மலைத்து நின்று குரைத்தது. ஓடையின் தென்கரையில் கொஞ்ச தூரம் ஓடியது. வண்டல் மாறி தண்ணீர் தட்டுப்பட்டது. பாய்ந்து நீந்தி வடகரையில் ஏறிக் கிழக்கே வண்டிப் பாதையில் விரட்டி ஓடியது.
அதற்குள் முருகேசத் தேவர் கூட்டத்தினர் எட்டிப் போய்  விட்டார்கள். வைரவன் கோயில் பொட்டல் ஆலமரம்தான் இவர்களுக்குக் குறி. கெதியாக ஓடினால் ஒன்னுக்கு இருக்கும் நேரம்தான். எல்லையைத் தொட்டு விடலாம். அப்புறம் வெளியூரான் நெருங்க மாட்டான்.
நாய், நாலுகால் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது. கவுல்பட்டிச் சனம் மணிப்பத்தா ஓடையைக் கடந்து விட்டது.
“வேய் ரா..... வேய் ரா....”
களவாணிப் பயலுகளை ஒரு தடவை ஊருக்குள் விட்டுவிட்டால் அப்புறம் ஒண்ணும் மிஞ்சாது. மனுஷன் குடியிருக்க நீதி இல்லாமல் போயிரும். இதுவரைக்கும் அக்கம்பக்கத்திலே, அடுத்த ஊரு மூணாவது ஊருலேதான் களவுபோனது. கவுல்பட்டிக்குக் களவாணிப்பயலுக வந்தது இதுதான் முதல் தடவை. அவிழ்ந்த தலைமயிரைக் கூட அள்ளி முடியாமல் பெண்கள் சேலையை ஏத்திச் செருகிக் கொண்டு ஓடி வந்தார்கள்.
“வேய்  ரா... வேய்   ரா...”
கடைசியாகப் போய்க் கொண்டிருந்த முத்துத்தேவரை நாய் எட்டிக் கவ்வியது. வேட்டி பிடிபட்டது. முத்துத்தேவர் செருப்பை ஓங்கி நாயின் வாயில் அடித்தார். வேட்டியை விட்டுவிட்டது. போர்வையைக் கவ்வியது. பிடறியில் கிடந்த கிடாயை கீழே போட்டார். செருப்புக்களையும் கீழே போட்டார். போர்வையை உதறி விட்டார். வேல் கம்பு மட்டும் கையில் இருந்தது. நாய், நெஞ்சில் குதறியது. இடது கையால் நாயின் மூஞ்சியில் அடித்தார், வேல் கம்பை ஓங்கினார். வலது மணிக்கட்டை கவ்விக் கொண்டது. திமிர முடியவில்லை. வேல் கம்பு நழுவியது. இடது கையால் நாயின் மேல் வாயைப் பிடித்து, வாய்க்குள் மாட்டி இருந்த வலது கையை கீழே அமுக்கினார். நாய், பக்கத்து முள் வேலியில் விழுந்தது. குனிந்து வேல் கம்பை எடுப்பதற்குள் நாய் முதுகில் பாய்ந்தது. கீழே சாய்ந்தார்.
முன்னால் போனவர்கள் வெகு தூரம் போய்விட்டார்கள். பின்னால் ஊர் திரண்டு வந்து கொண்டிருந்தது.
“வேய் ரா... வேய் ரா....”
நிலா வெளிச்சத்தில் சனம் வருவது தெரிந்தது.
நாயைப் புரட்டினார். கால் நகத்தால் உடம்பைப் பிறாண்டியது. நாயோடு முள் வேலியில் புரண்டார். பாளம் பாளமாய் முள் குத்திக் கிழித்தது. மறு புரட்டில் வண்டிப் பாதைக்கு வந்தார். மேலே கிடந்த நாயின் வாயெல்லாம் ரத்தம் ஒழுகியது. இரண்டு கைகளையும் நாயின் வாய்க்குள் கொடுத்துக் கிழித்தார்.
பலமான சத்தத்தோடு நாய் மல்லாக்க சரிந்தது. முத்துத் தேவரின் வாய், கை, உடம்பெல்லாம் ரத்தம்.
”வேய் ரா... வேய் ரா...”
சனம் நெருங்கிக் கொண்டிருந்தது.
முத்துத்தேவர் எழுந்து வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டினார். போர்வையைக் காயங்களின் மேலே போர்த்திக் கொண்டார். கிடாயைத் தூக்கி தோளில் போட்டு, வேல் கம்பு, செருப்புகளை வலது கையில் எடுத்துக் கொண்டு கெதியாய் ஓடினார். வைரவன் கோயில் பொட்டல் ஆலமரம் நெருங்கித் தெரிந்தது.
மறுநாள், பெருநாழி போலீஸ் நிலையத்தில் கவுல்பட்டி கிராமமே வந்து நின்றது.
முதல்நாள் ராத்திரி களவுக்குப் போனவங்க, போகாதவங்க எல்லா ஆம்பளைகளுக்கும், போலீஸார் கம்பியைக் காய வைத்து துடிக்கத் துடிக்க, கதறக்கதற சூடு போட்டார்கள். கன்னத்திலே, தொடையிலே, கையிலே, கழுத்திலே, வயிற்றிலே, முதுகிலே என்று பலமாதிரி சூடு. அன்றைக்கு இழுத்த சூடுதான், இருளாண்டித் தேவரின் தொடை இடுக்கில் தழும்பேறிக் கிடந்தது.
இருளாண்டித் தேவர் புரண்டு படுத்தபோது, கால்மாட்டில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த நாகுத் தேவரின் இடுப்பில் கால் பட்டுவிட்டது.
“நல்லா மிதிங்க மச்சான்.”
நாகுத் தேவர் நக்கலாய்ச் சிரித்தார்.
“எங்கிட்ட மிதி வாங்கணும்னா முன் ஜென்மத்திலே புண்ணியம் செஞ்சிருக்கணும் மாப்ளேய்...”
இருளாண்டித் தேவர் உதட்டோரம் சிரித்தபடி கால்களை ஒடுக்கி மறுபடியும் தலை சாய்த்துக் கொண்டார்.
ரம்மி ஆட்டத்தில் ஜோக்கர் வெட்டியதில் தகராறு. தாயக் கட்டத்தில் ஒருநாய் வெட்டுப்பட்ட சந்தோஷம். சிரிப்பும் கேலியுமாய்ச் சத்தம்.
கிழக்கே இருந்து முருகேசத் தேவர் வந்தார்.
“ஏய்ய்... நம்ம மூத்தவர்மகன் சேது வந்திருக்குதாம்...”
எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். சீட்டாட்டம், ஆடு புலி, வெட்டுச் சீட்டு, தாயக்கட்டம் எல்லாவற்றையும் கலைத்தார்கள். உறங்கிக்கொண்டிருந்த இருளாண்டித் தேவரையும் கந்தையாத் தேவரையும் எழுப்பினார்கள்.
எல்லோரும் கிளம்பி மூத்தவர் வீட்டுக்கு நடந்தார்கள்.
சேது, கால், முகம் கழுவி துடைத்துவிட்டு அப்பாவுடைய போட்டோவுக்கு முன்னால் நின்றான். அய்யாவின் நெற்றியில் குங்குமம் இட்டிருந்தது. உச்சிநத்தம் காசிநாதன்செட்டி வீட்டில் கன்னம் போட்டு களவாடப் போனபோது அந்த ஊர்ச் சனங்களோடு நடந்த சண்டையில் வெட்டுப்பட்டு அய்யா இறந்து போனார். சேதுவுக்கு அருகில் அம்மா நின்றது. படத்தில் இருந்த கணவரையும் பக்கத்தில் நின்ற மகனையும் மாறி மாறிப்பார்த்து அம்மா அழுதது. சேதுவுக்குக் கண்கலங்கிப் பார்வையை மறைத்தது. வீட்டு வாசலில் ஆள் அரவாட்டம் தெரிந்ததும் சேது திரும்பி வாசலைப் பார்த்தான்.
“மருமகனே”.. கூட்டத்துக்கு முன்னால் முருகேசத் தேவர் நின்றார். சேது வாசலுக்கு வந்தான்.
“கும்பிடுறேன் மாமா.. கும்பிடுறேன் சின்னய்யா.. கும்பிடுறேன் மச்சான்.. வாங்க எல்லாரும் வாங்க...”
கண்டதும் சேது, கையெடுத்துக் கும்பிட்டதில் எல்லோருக்கும் சந்தோஷம் தாங்க முடியலே.
“எப்போ வந்தீங்கப்பூ...?”
”இப்போதான் மாமா.”
அம்மா திண்ணையில் பாய்களை விரித்தது. எல்லோரும் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள்.
“டூட்டி ஒப்புக்கொண்டுட்டீங்களா?” - நாகுத்தேவரின் கன்னத்தில் தழும்பு கிடந்தது.
“நாளைக்குப் போயி ஜாய்ன்ட் பண்றேன் மாமா.”
”எங்கே டூட்டி?” - குருசாமித் தேவரின் வலது கையில் தழும்பு இருந்தது.
“பழனி பக்கத்திலே மடத்தாகுளம் போலீஸ் ஸ்டேசன்லே”
“சப்-இன்ஸ்பெக்டருதானே?” - கந்தையாத் தேவருக்குப் பிடறியில் தழும்பு.
“ஆமாம், சின்னய்யா, ஒரு வருசம் ட்ரெயினிங் முடிஞ்சு... முதல் போஸ்டிங்”
திண்ணையின் மூலையில், ஓரத்தில் உட்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம் எம்பி எம்பி சேதுவைப் பார்த்தார்கள்.
‘உடுப்பு போட லாயக்கான ஆளு.’ எல்லோருக்கும் பெருமை தாங்கலே.
“உங்க அண்ணனை எங்கே காணோம்?”
“எனக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கெடைச்சா.. இருளப்ப சாமிக்குக் கிடாவெட்டி பொங்கல் வைக்கணும்னு அம்மா நேர்த்திக் கடன் வச்சதாம். அதுக்கு ஒரு கிடாக் குட்டி வெலைக்கு வாங்க அண்ணன் வெளியே போனாரு.”
முருகேசத் தேவர் கன்னத்தில் கிடந்த தழும்பைத் தடவிக்கொண்டே “என்னது..! கிடாக்குட்டியை வெலைக்கு வாங்கப்போனாரா? பைத்தியக்காரப் பிள்ளைக. நம்ம வீட்டுப் பிள்ளைக்கு சப்-இன்ஸ்பெக்டர் உத்தியோகம் கெடச்சிருக்கு. நம்ம சனமெல்லாம் சேர்ந்து கொண்டாட வேண்டாமா? நம்ம குலதெய்வம் இருளப்பனுக்கு நாளைக் காலையிலே ஒரு கிடாய் இல்லே.. இருபத்தியோரு கிடாய் வெட்டுப்படுது.” என்றவர் திண்ணையில் இருந்த எல்லோரையும் பார்த்து “ஏய்...ய்... வீட்டு வீட்டுக்கு ஒரு கிடாயைப் பிடிச்சுக் கொண்டு வந்து இங்கே கட்டுங்கடா” என்று உத்தரவிட்டார்.
“எதுக்கு மாமா.. வேண்டாம்...” சேது மருகி மருகி எல்லோரையும் பார்த்தான்.
“கள்ள ஆடு இல்லே மருமகனே.. எல்லாம் நம்ம சொந்த ஆடு.”
சேதுவின் கண்களில் குபுக் என நீர் அடைத்தது. காலமெல்லாம் காயம் பட்ட சனங்கள்.
“தம்பி சேதூ... இந்தப் பயலுகளுக்கு ஒரு ஆசை...”
“என்ன மாமா சொல்லுங்க”
“நீங்க சப்-இன்ஸ்பெக்ட்டர் உடுப்பு மாட்டிக்கிட்டு வந்து, கொஞ்ச நேரம் எங்க எல்லாரோடயும் உக்கார்ந்து பேசிக்கிட்டிருக்கணும்.”
முருகேசத் தேவரின் கைகளைச் சேது பிடித்துக் கொண்டான்.
“இதோ வர்றேன் மாமா.” வீட்டிற்குள் போனான். எல்லோரும் உள்வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். சிறிதுநேரத்தில் சேது சப்-இன்ஸ்பெக்டர் உடுப்போடு திண்ணைக்கு வந்தான். எல்லோரும் பதறியெழுந்து, தோளில் கிடந்த துண்டைக் கையில் எடுத்தபடி திண்ணையைவிட்டு இறங்கிக் கீழே நின்றார்கள்
*******

Sunday, 7 September 2014

வனம்மாள் - அழகிய பெரியவன்

     0   சிறுகதை 
  
 சூரியன் பொழியும் தூரத்து வானம் வரைக்கும் வெள்ளை வெள்ளையாய் குத்துக்கற்களும், சரளைக் கற்களுமாக நிரவி, நட்சத்திரங்களுடன் சிவந்த வானமாக அந்தச் செம்மண் பிரதேசம் இருந்தது. எங்கோ ஒன்றாய் தோழமையற்றுத் தனித்து தவிப்புடனிருந்தன பனை மரங்கள்.
சாலம்மாளுக்கு கானல் மருட்டியது. அவளின் மோட்டாங்காட்டின் வடக்காலே எழும்பிச் சரிந்திருக்கும் சிறு குன்றின் பாறைக் கூட்டங்களுக்கிடையிலே, நீர் வற்றிக் கிடக்கும் குட்டையை நோக்கி, தலையில் குடத்துடன் போய்க்கொண்டிருந்தாள் அவள். கூப்பாடுடAlakiyaperiyavan ன் விருட்டென்று அவளைக் கடந்த பறவையொன்றின் திசையிலே அலையலையாய் எழுந்து ஆடும் கருஞ்சுவாலைக் கூட்டம்போல தூரத்தில் ஊசிமலை அவளுக்குத் தென்பட்டது.

வயோதிகத்தின் நியதிகளைத் தட்டாமல் ஏற்றிருந்த சாலம்மாளின் தேகம், ஒரு யுகத்தின் நகர்வுபோல இயங்கியது. முந்தானையைச் சுருட்டித் தலைச்சும்மாடாகவும், முக்காடாகவும் மாற்றிக் கொண்டு பெருமூச்சுகளுடனும் தனக்குத் தானே பேசியபடியும் போய்க்கொண்டிருந்தாள் அவள். இரண்டு மூன்று குடங்கள் சுமந்து வந்ததற்குள் களைத்து ஒரு மரத்தடியில் ஓய்ந்து உட்கார்ந்துவிட்டாள்.

வெப்பக் காற்று மாந்தளிர்களில் பட்டு தணிந்து வீசியது. கருகும் தளிர்களின் வாசம்போல மாம்பூக்களின் வாசம் மெல்லக் காற்றிலே பரவி அடங்கியது. அவளைப் போலவே பக்கத்துத் துண்டுகளிலும் சிலர் மாஞ்செடிகள் வைத்திருந்தனர். சிலர் அப்படியே தரிசாகவிட்டு வைத்திருந்தனர்.

ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். அப்போது சாலம்மாளுக்கு நல்ல புத்தி இருந்தது என்றே சொல்ல வேண்டும். அந்த ஊரிலும், சுத்துப்பட்டிலும் இருக்கிற வானம்பார்த்த பூமி கொண்ட ஏழை விவசாயிகள் சிலருக்கு இயேசுகாரர்கள் இலவசமாகவே மாங்கன்றுகளைத் தருவதாகக் கேள்விப்பட்டாள். உடனே முந்திக்கொண்டாள் சாலம்மாள். அவளுக்கிருந்த கையளவு நிலத்துக்கு அவர்கள் கொடுத்த சில செடிகளே போதுமானதாக இருந்தன. கிடைத்த மாஞ்செடிகள் எல்லாமுமே மெங்களூரா, நீலம் வகைகளாகவே இருந்துவிட்டதால் சாலம்மாளின் மனசு கேட்கவில்லை. மேல் ஆலத்தூர் அரசாங்கப் பண்ணை வரை போய் காதர், பீத்தர், பங்கனப்பள்ளி, மல்கோவா என்று வகைக்கொன்றாகவும், சிலவற்றை வாங்கி வந்து வைத்தாள். செடிகளின் ஒட்டு பிரிந்துவிடாமல் தொட்டிகளை கவனமாக உடைத்து, பச்சைப்பிள்ளைகளை கையாள்வது போல நட்டு, குளம் குட்டை என்று விடாமல் அலைந்து நீர் ஊற்றினாள் சாலம்மாள். 

புதிய இடத்தில் பொருந்தாமல் இருப்பவர்களைப் போல இருந்த செடிகள் பச்சை பிடித்ததும் தான் அவளுக்கு உயிரே வந்தது. மரஞ்செடிகள் என்றாலே சாலம்மாவுக்கு உயிர்தான். கையில் கிடைப்பதையெல்லாம் கொண்டு வந்து வைத்து அவள் வீட்டை நந்தவனமாக்கியிருந்தாள். கொத்திக் கொண்டும், நீர்வார்த்துக்கொண்டும், சருகுகளை அள்ளிக்கொண்டும் இருப்பது தான் அவள் வேலை. பூத்துக் குலுங்கும் அவள் தோட்டத்துப் பூக்கள் ஊர்ப்பெண்டுகளின் தலைகளிலெல்லாம் சிரிக்கும். அவள் தோட்டத்துக் காய் கனிகளுக்கே தனி ருசிதான் என்று சொல்வார்கள்.

“மரம், மரமின்னு பைத்தியமா கீறாளே! காட்டுலேர்ந்து எறங்கிவந்துட்டாளா!”

“புள்ளைங்க, திக்குதெச இல்லாததுக்கு எதுமேலியாவது ஆச இருக்க வேண்டியதுதான். ஆனாலும் இப்பிடியா?”

“நம்ம வேலூர் பக்கமா யாரோ ஒருத்தரு வீட்டு மரங்களுக்கு பத்திரிக்க அடிச்சி கல்யாணம் செஞ்சிவெச்சாராமே. அப்பிடி இவுளும் செய்வாளோ எனுமோ?” ஊரார் பேசிக்கொள்வதும் உண்டு.

சாலம்மாளின் மரப்பிரியத்தை எவராலும் புலங்காண முடிந்ததில்லை. ஊரிலிருக்கும் அத்தனை மரங்களும் அவளுக்குத் தாய்மடிதான். தினமும் ஒன்றின் நிழலிலாவது செத்த நேரம் ஒக்காந்து மனக்குறைகளைத்தானே புலம்பியபடி இருப்பது வாடிக்கையாயிருந்தது சாலம்மாளுக்கு.
காற்றும் மழையுமாக இயற்கை ஒருமுறை சாடிவிட்டுப் போய்விட்ட போது வானத்தைப் பார்த்து நெட்டி முறிப்பதும், மழையைச் சபிப்பதுமாக இருந்தாள் சாலம்மாள். கொய்யாவின் இளங்கிளையையும், முருங்கையையும் பேய்க்காற்று பதம் பார்த்துவிட்டுச் சென்றிருந்தது. முறிந்த கிளைகளைச் சேர்த்து செம்மண் துணி சுற்றிவிட்டாள் சாலம்மாள். சிரித்துவிட்டுப் போனவர்களையெல்லாம் சட்டை செய்யவில்லை அவள். இப்படித்தான் போன மாதம் கிராம அபிவிருத்தித் திட்டம் ஒன்று அவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தது. ஊர்முச்சையருகே கிளை விரித்திருந்த அரசமரத்தையும், ஊர் எல்லையிலிருக்கும் நாகமரத்தையும் படிப்பகம் கட்டவும், நீரேற்று அறை, தொலைக்காட்சிப் பெட்டி அறை கட்டவும் வெட்டிவிடுவது என்று தீர்மானமாகிவிட்டது. சாலம்மாளுக்கு இது தெரியவந்ததும் ஆங்காரியாகிவிட்டாள். மரத்தின்மீது முதல் வெட்டு விழுந்தபோது தலைவிரி கோலமாய் குறுக்கே மறித்து விழுந்தாள் சாலம்மாள். ஓடிவந்ததில் அவளுக்கு மூச்சிரைத்தது.
“டேய் நாங்க அக்கா தங்கச்சிங்க தங்கியிருக்கண்டா இதுல..எங்களெ ஓட்டப்பாக்குறவன் எவன்டா?”
“தாயே பொறுக்கணும். நீ யாரு?”
“நாகலம்மா, பூவுலம்மா, எல்லம்மாடா எங்க இருப்பிடன்டா இது. நாங்க எடுத்து அடி வெக்கிறது எல்ல நாகமரம்டா. நாங்க இருக்கிற மரங்களெ வெட்டி எங்கள ஓட்டப்பாத்தா ஊரையே துவம்சம் பண்ணிடுவம்டா”
கத்திகளும், வாள்களும் கீழே விழுந்துவிட்டன. மரங்களை வெட்டுவதில்லை என்று பதில் பெற்றவுடன் மலையேறிவிட்டது சாமி. மரங்களைக் காப்பாற்றின அன்றெல்லாம் சாலம்மாள் அரசமரத்தடியிலேயேதான் கிடந்தாள். சாலம்மாள் தனிக்கட்டை. பிள்ளையில்லாததால் புருஷன் துரத்திவிட வாழாமல் வந்து ஊரோடு தங்கிவிட்டவள். நாதி என்றிருந்த ஒரே அண்ணனும் வேலை, வாழ்க்கை என்று ஊரைவிட்டுப் போய்விட்டான். கிராமத்து வீடும் கொஞ்சம் மேட்டுநிலமும் அவள் பாடு என்றாகிவிட்டது. யாரும் கண்டுகொள்ளாத அந்த மேட்டு நிலத்தில் வலு இருக்கும்வரை விழுந்து எழுவது என்று அல்லாடி வந்தாள். சும்மாடைப் பிரித்து முகம் துடைத்துக்கொண்டாள் சாலம்மாள். நேற்றுதான் நட்ட மாதிரி இருக்கிறது. அதற்குள் வளர்ந்துவிட்டன. பூவெடுத்திருக்கும் கவைகளை உடைத்துவிட வேண்டும். காப்புக்கு விட இன்னும் கொஞ்சம் போகட்டும் என நினைத்துக்கொண்டாள். கானலின் ஊடாக சுழன்ற அவள் பார்வை கிழக்காக இருந்த வெற்றிடத்தில் நிலைகுத்தித் தவித்தது. அங்கிருந்த கானலும், வெம்மையும் அப்படியே பெயர்ந்து அவள் மனதுக்குள் வந்து இறங்கியது. பழசை நினைத்துக்கொள்ள கண்கள் மடைதிறந்துகொண்டன.

கேட்க நாதியில்லை என்பதால் ஊரிலே சாலம்மாள் என்றாளே இளக்காரந்தான். நடுத்தெரு இடைச்சி ரங்கமணிக்கும், அவள் மச்சினன்மார்களுக்கும் ரொம்பவுமே கிண்டல்தான். ஒருநாள் விறகு பொறுக்கிக்கொண்டு தன் நிலத்தின் வழியே வந்த ரங்கமணி மாவிலைகளைப் பிய்த்து கசக்குவதைப் பார்த்துவிட்டாள் சாலம்மாள். வேர் கிளம்பிவிடுமே என்று பதைபதைத்து திட்டித் தீர்த்துவிட்டாள் ரங்கமணியை. கன்றுகளை வைத்து கொஞ்ச காலம்தான் ஆகியிருந்தது. 

மறுநாள் சாலம்மாள் நிலத்துக்குப் போனபோது பாதி மாஞ்செடிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருப்பதை பார்த்தாள். தன் கழுத்தை யாரோ அறுத்திவிட்டது போல வலித்தது வலித்தது அவளுக்கு. “ அய்யோ எம் புள்ளிங்களே! என் செல்லங்க போச்சே” வயிற்றிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு, வீழ்ந்திருக்கும் செடிகளை ஓடிஓடி எடுத்து அழுதாள் சாலம்மாள். சாலம்மாளின் பக்கத்து நிலம் ரங்கமணியுடையது. இவளின் நிலம்மீது ஒரு கண் ரங்கமணிக்கு இருந்தே வந்தது. “சின்னதுக்குத்தான் சின்னங் கொலையறதுன்ற மாதிரி ஆயிடுச்சே. அய்யோ எங் கொறையே. வேர் கெளம்பிடுமே, ஏண்டி இப்படி செய்யறன்னதுக்கேவா இப்படி பன்னிர்றது? ஒஞ் சாதித்திமிர எஞ் செடிங்க மேலியா காட்டறது?” ஊர்ப் பஞ்சாயத்துக்குப் பிராது கொடுத்துவிட்டு அன்று முழுவதும் இழவு வீட்டுக்காரி மாதிரி இருந்தாள் சாலம்மாள். “மரங்களுக்குப் போய் இப்படி மாரடிக்கிறாளே” என்று சொல்லிக் கொண்டனர் ஊரார். பொழுது அமர கூடிய பஞ்சாயத்தில் வெட்டியது யார் எனத் தெரியாமல் பேச முடியாது என்று தீர்ப்பு வந்தது. இவரிவர்கள்தான் வெட்டியிருப்பார்கள். தாட்டிமமான, அரக்கி அரக்கி நடந்திருக்கும் காலாடித் தடங்கள் ரங்கமணியினுடையதுதான் என்று சாலம்மாள் சொன்னதை யாரும் எடுத்துக் கொள்ளவில்லை.
அவுக்கென்றாகிவிட்டது சாலம்மாளுக்கு, மனசு ஆறாமல் மறுநாள் காலம்பரமே மாஞ்செடிகள் தந்த இயேசுக்கார அய்யா வீட்டுக்குப் போய் ஒப்பாரி வைத்தாள் சாலம்மாள்.
”நீ இப்படி அழவேண்டியதே இல்ல, வேற செடிகளுக்கு ஏற்பாடு பண்ணுவேன்” என்றதும் வேகமாய்த் தலையசைத்தாள் சாலம்மாள்.
வெட்டினவங்களுக்கு நீ தண்டென வாங்கித் தரணும் சாமீ, பாதி புள்ளைங்க களுத்த அறுத்துப்புட்டாங்களே”
“சரி நீ போயி போலீசுல சொல்லு. நான் பின்னாடியே வரேன்”
இயேசுக்கார அய்யா சொன்னதும் காவல் நிலையம் போய்விட்டாள் சாலம்மாள்.
“மரம் வெட்டின கேசெல்லாம் இங்க எடுத்துக்கறதில்ல பாட்டி” என்ற பதிலெல்லாம் அவளை அசரச் செய்யவில்லை. பகலுக்கும் காவல் நிலைய வாசலிலேயே மூக்குச் சிந்திக் கொண்டிருந்தாள் அவள்.
“சரி உன்னெ அடிச்சுப்புட்டு, மரத்தெ வெட்டிப்புட்டாங்கன்னு ஒரு மனு எழுதினு வா”
மனுகொடுத்தபிறகு காவல் நிலையத்துக்கும், இயேசுக்கார அய்யா வீட்டுக்கும் என நடந்தபடியே இருந்தாள். வழக்கு பதிவாகி முதல் சம்மன் வந்தபோதுதான் அவளுக்கு மனது ஆறியது. “என்னாதான் காலங்கெட்டுக் கெடந்தாலும் நியாயஞ் செத்துப் போகுமா? இருங்கடி இருங்க. துன்னத் துடிக்க எஞ்செடிகளெ வெட்டந்துக்கு இன்னிக்கு இருக்குது உங்குளுக்கு”
சம்மன் வந்த நாளெல்லாம் கோர்ட்டு வாசலில் தவம் கிடந்தாள். ஆனால் அவள் நினைத்தபடியெல்லாம் எதுவுமே நடக்காமல் அவளுக்கு ஏமாற்றமாய்ப் போனது.
ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளாகவே, “தப்பு தப்புத்தான்னு சொல்லிப்புட இந்த மனுசங்களுக்கு இத்தினி தயக்கமா?” என புலம்பிக் கொண்டே அண்ணன் மகன் தம்பிதுரை வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாள் சாலம்மாள்.
அவள் அண்ணன் போனபிறகு அவளுக்கென்று இருந்த ஒரே ஆதரவு தம்பிதுரைதான், அவன் தூரத்தில் இருந்தாலும் மாதத்துக்கு ஒருகால் பஸ் பிடித்துப் போய் பார்த்துவிட்டு வந்துவிடுவாள் அவள். அவனின் எல்லா பிள்ளைகளையும் மார்மேல்போட்டு சாலம்மாள் தான் வளர்த்துவிட்டாள். அதிலும் சின்னவள் சிவப்பி என்றால் சாலம்மாளுக்கு கொள்ளை ஆசை. தம்பிதுரை அரசாங்க வழக்கறிஞரைப் போய்ப் பார்க்கச் சொன்னான். மறுநாளே விசாரித்துக் கொண்டு வழக்கறிஞரிடம் போய்ச் சேர்ந்தவள், ஒப்பாரியும், முறையிடலுமாக நெளியவைத்ததுவிட்டாள் அவரை.

“ஏம்பாட்டி, தேக்கு மரத்தெ வெட்டிட்டாப்பில ஏன் அழற? மரந்தானெ பாக்கலாம் வுடு”
“அய்யா அதுங்க மரம் இல்லய்யா, என் வயித்துல பொறந்த பொறப்புங்க மாதிரி, அந்தக் கொலகாரப் பாவிகளுக்கு நீதான் தீர்ப்புச் சொல்லணும்”
வாய்தாவுக்கு வாய்தா சாலம்மாளின் ஒப்பாரி அதிகமாகிக் கொண்டே போனது. இனிமேல் அலுவலகம் பக்கம் வந்தால் கேசை தோற்கடித்துவிடுவேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார் வழக்கறிஞர்.

பிராது கொடுத்து மறுநாளே ரங்கமணியின் கூட்டாளிகளுக்கு தண்டனை கிடைத்துவிடும் என்று நினைத்தவளுக்கு இன்னும் எதுவுமே நடக்காதது அதிர்ச்சியாய் இருந்தது. நடையாய் நடந்து யார் யாரையோ பார்த்துவிட்டாள். எத்தனையோ வாய்தாக்களுக்கும் போய்விட்டாள். வேறு செடிகளுக்காக இயேசுக்கார அய்யாவை பலமுறை சென்று பார்த்ததிலும் ஒன்றும் நடக்கவில்லை. சாலம்மாள் ஓய்ந்துவிட்டாள்.
செங்கம்புதரிலிருந்து காடை ஒன்று ‘புர்’ என பறந்து போனதும்தான் சாலம்மாளுக்கு நினைவு திரும்பியது. வெயில் உச்சிக்கு ஏறியிருந்தது. காற்றில் சலசலக்கும் மாஞ்செடிகளைப் பார்த்தபோது அவளுக்கு ஆயாசமெல்லாம் மறைந்துபோனது. மிச்சமிருக்கும் மரங்களைப் பராமரிப்பதும், தண்ணீர் விடுவதும், நெட்டி முறிப்பதும், அவைகளுடன் பேசுவதுமாக இத்தனை நாட்களை கழித்துவிட்டாள். வயல் வரப்புகளிலும், தண்ணீர் தொரவுகளிலும் ரங்கமணியைப் பார்த்துக்கொள்ளும்படி நேர்ந்துவிடும்போதெல்லாம் அவளின் ஏளனச் சிரிப்பில் சருகுகள் மிதிபடுவதுபோல் ஆகிவிடும் சாலம்மாளுக்கு. அதைத் தவிர்க்கவும் இந்த மோட்டாங்காடே கதியென்றும் ஆகிவிட்டது அவளுக்கு. அடுத்த வருடம் மகசூலுக்கு விடும்படி மரங்கள் ஆகிவிட்டிருப்பது சாலம்மாளுக்கு சந்தோஷத்தைத் தந்தது. நாளைக்குத்தான் கடைசி வாய்தா. தீர்ப்பு வந்துவிடும் என்று வக்கீல் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்து மேலும் சந்தோஷம் தந்தது. முந்தானையால் முக்காடு போட்டுக்கொண்டு குடத்தைத் தூக்கியபடி, வீட்டுக்குப் போகும் சரிவில் இறங்கினாள் சாலம்மாள்.

கோர்ட்டு வாசலில் பூவெடுத்துக் குலுங்கும் மாமரத்தின் கிழே சாலம்மாள் உட்கார்ந்திருந்தாள். வெய்யில், குட்டிகளைக் கவ்வும் பூனையென பாரித்திருந்தது. சாலம்மாளின் தேகக் கூட்டினுள் இருந்த இதயம் சிறு பிராயத்துப் பிள்ளையென ஓடியாடிக்கொண்டிருந்தது. மாமரத்தின் குதியாட்டத்தைக் கண்டதும் அடிவயிற்றில் நீர்கழித்துப் புரள்வது போல அவளுள் பொருமல் எழுந்தது. அந்த மரத்தை அவள் கைகள் வாஞ்சையுடன் தடவி நெகிழ்ந்தன. கண்களில் நீர் ஊற்றெடுத்து சொட்டிவிடத் திரண்டு தயங்கியது.

கோர்ட்டுக் கட்டிடம், மனிதர்களின் புழக்கத்துடன் களை கட்டியிருந்தது. வக்கீல்களும், காவலர்களும், மக்களும் ஓடியாடிக் கொண்டிருந்தனர். ரங்கமணியும் அவள் மச்சினன்மார்களும் தூரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்ததை சாலம்மாள் பார்த்தாள். அவர்கள் பேசிச் சிரிப்பது தன்னைப் பற்றித்தான் என நினைத்துக்கொண்டாள் சாலம்மாள். கோபம் அவளின் வறண்ட திரேகத்துள் பரவியது. முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தன்னுடைய நடுவயது முதல் இந்த நாள் வரையிலாக கோர்ட்டு வாசலிலேயே தவம் கிடந்துவிட்டது போல் எண்ணி மலைத்துக் கொண்டாள். சாலம்மாளுக்கு என்று வானத்திலிருந்து கூப்பிடும் குரல் போல டவாலியின் அழைப்பு அப்போது கேட்டது. உள்ளே ஓடினாள் சாலம்மாள். நீதிபதி பேசினார். “மரங்களை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வெட்டினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவை புதிதாக நடப்பட்டிருந்த மாஞ்செடிகள் என்பதனால் வேர் பிடிக்காமலும் செத்திருக்கலாம்”.
அதைக் கேட்டதும் சாலம்மாளிடம் பேச்சில்லை. அவளின் குரல்வளை உள்ளிழுத்து கேவலின் அவல ஒலி கேட்டது.
“அதுங்க செடிங்க இல்லய்யா. எம்புள்ளைங்க. இந்த கொட்டி* நம்பியிருந்தது அதுங்களைத்தான்யா”
பைத்தியமாய் பிதற்றியபடி கோர்ட்டு வாசல் மாமரத்தின் அடியிலேயே இருந்தாள். அவமானமும், கோபமும், துக்கமுமாக இருந்தது அவளுக்கு. அந்தச் செடிகளுக்காக எத்தனை நடை, எத்தனை படியேறல், எத்தனை முறையிடல்... வயிறு பற்றிக் கொண்டது.
ஒருபாவமும் அறியாத பாலகனுங்க. என்ன பண்ணுச்சிங்க அதுங்களெ வெட்ட? அதுங்களுக்கு வாயிருந்தா என்னா பேசியிருக்குங்க. வீட்டுக்கு வந்தும் கூட சோறு பொங்காமல் நடுராத்திரி வரை ஒப்பாரி வைத்து சன்னமாகப் பாடி அழுதுகொண்டிருந்தாள்.
காலையில் எழுந்த கையோடு அடுக்களைப் பானைகளைத் தூர எடுத்து வைத்துவிட்டு பிரிமனைகளை நகர்த்தினாள். அடியில் புதைந்திருக்கும் உண்டியல்களைத் தோண்டி எடுத்தாள். ஐந்து உண்டியல்களும் நிரம்பியும் நிரம்பாமலும் இருந்தது. எல்லாவற்றையும் போட்டு உடைத்து காசுகளைச் சேர்த்தால் சாலம்மாள். மூட்டையாக முந்தானையில் முடிந்துகொண்டபோது பாரத்தினால் அவள் உடலே கீழ்நோக்கி குஞ்சியது. நேராய் பக்கத்து ஊர்ப் பண்ணைக்கு விறுவிறுவென்று நடந்தாள். மாங்கன்றுகளுக்கு சொல்லிவிட்டு தன் நிலத்திற்குத் திரும்பினாள்.

சுள்ளென்று உறைப்பதற்குள் பத்துப் பதினைந்து குழிகளை தோண்டிவிட்டாள் அவள். மண் ஆவியடித்து வாசம் கிளம்பியது. திடீரென சாலம்மாளுக்கு பேத்தி சிவப்பியின் ஞாபகம் வந்தது. ஒவ்வொரு வருசமும் கோடை விடுமுறையில் சிவப்பி சாலம்மாவுடன் வந்து இருந்து போவாள். கூலி நாழி என்று வருசமெல்லாம் சேர்த்த பணத்தில் சிவப்பி போகும்போது, துணிமணி என்று ஆனதை செய்து அனுப்புவாள் சாலம்மாள். இந்த வருசம் உண்டியல்களை உடைத்து மாஞ்செடிகளுக்கு சொல்லிவிட்டது சாலம்மாளுக்கு மனம் பாரமாய் இருந்தது.
“ராசாத்தி புள்ளெ வந்து ஏமாறுமே”
ஆற்றாமையோடு தோப்பைப் பார்த்தாள் சாலம்மாள். சிலுசிலுவென்று காற்றுக்கு துளிர்கள் ஆடிக்கொண்டிருந்தன.
“போட்டும், இந்த ஒரு வருசம். பொறகால எம்புள்ளிங்க நீங்களே பாத்துகுக மாட்டீங்களா ராசாத்தியெ”
மாமரங்கள் காற்றுக்கு மேலும் குலுங்கின. அவள் பேச்சை கேட்டபடியே குழிந்து கொண்டிருந்தது மண்.

மகாகவி பாரதியின் இரண்டு கடிதங்கள்

தம்பி விசுவநாதனுக்கு கடிதம்
புதுச்சேரி, 3 ஆகஸ்டு, 1918
ஸ்ரீமான் விசுவநாதனுக்குப் பராசக்தி துணை செய்க. உன்னுடைய அன்பு மிகுந்த கடிதம் கிடைத்தது. அதைப் படித்து அதினின்றும் உன்னுடைய புத்திப் பயிற்சியின் உயர்வைக் கண்டு சந்தோஷமடைந்தேன். தந்தைக் கப்பால் நீ என்னை முக்கிய சகாயமாகக் கருதுவது முறையே. இதுவரை உன்னை நேரே பரிபாலனம் செய்வதற்குரிய இடம் பொருளேவல் எனக்கு தெய்வ சங்கற்பத்தால் கிடையாமல் போய்விட்டது. அதையெண்ணி இப்போது வருந்துவதிலே பயனில்லை. எனினும் இயன்றவரை விரைவாகவே எனக்கு நற்காலமும் அதனாimages (1)ல் உன் போன்றோருக்குக் கடமைகள் செய்யும் திறமும் நிச்சயமாக வரும். உன் கடிதத்தில் கண்டபடி நீ இங்கே என்னைப்  பார்க்க வரும் காலத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சீக்கிரம் வா. தங்கை ஸ்ரீ லக்ஷ்மி சில வருஷங்களுக்கு முன் எட்டயபுரத்துக்கு வந்திருந்த காலத்தில் என்னைக் கொஞ்சம் பணம் அனுப்பச் சொல்லியிருந்தாள். அப்போது என் கையில் பணம் இல்லாதபடியால் அனுப்பவில்லை. அது முதல் என் மீது கோபம் கொண்டு எனக்கு ஒரு வார்த்தைகூட எழுதாமலிருக்கிறாள். என்னை மன்னிக்கும்படிக்கும் எனக்கு அடிக்கடி காயிதங்களெழுதும்படிக்கும் நீ அவளை அழுத்தமான பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறேன். தம்பியுள்ளோன் படைக்கஞ்சான் என்ற வாக்கியத்தின் உண்மையை உன் விஷயத்தில் நம்பியிருக்கலாமென்றே நம்புகிறேன்.

எனக்கு இனிமேல் இங்கிலீஷில் காயிதம் எழுதாதே. நீ எழுதும் தமிழ் எத்தனை கொச்சையாக இருந்தபோதிலும் அதைப் படிக்க நான் ஆவலுறுவேன். கொச்சைத் தமிழ்கூட எழுத முடியாவிட்டால் ஸம்ஸ்கிர்தத்திலே காயிதம் எழுது. திருப்பயணம் வி.ராமஸ்வாமி அய்யங்கார் என்னிடம் 'விநாயகர் ஸ்தோத்திரம்' (தமிழ் நூல்) அச்சிட வாங்கிக்கொண்டு போனார். இன்னும் அச்சிட்டனுப்பவில்லை. மேலும் அவர் 'பாஞ்சாலி சபதம்' அச்சிடும் சம்பந்தமாகப் பணம் சேகரித்துப் பட்டணத்துக் கனுப்புவதாகச் சொன்னார். அங்ஙனம் அனுப்ப முடியுமானால் உடனே புதுச்சேரியில் எனது விலாசத்துக்கனுப்பும்படி ஏற்பாடு செய்.

அது மாத்திரமேயன்றி, 'விநாயர் ஸ்தோத்திரம்' வேலையை விரைவில் முடித்துப் புஸ்தகங்களனுப்பும்படி சொல்லு. உடம்பையெண்ணிப் பயப்படாதே. அடிக்கடி பால் குடி. ஜலத்தை எப்போதும் காய்ச்சிக் குடி. வேறு எந்த விஷயத்துக்கும் கவலைப்படாதே. பொறுமையாலும் பயமின்மையாலும் இவ்வுலகத்தில் மனிதன் தேவத்தன்மை அடைகிறான். அந்நிலைமை உனக்கு மஹாசக்தி அருள் செய்க.

உனதன்புள்ள ஸஹோதரன், 
சி.சுப்பிரமணிய பாரதி
மனைவிக்குக் கடிதம்
ஓம்
ஸ்ரீ காசி 
ஹநுமந்த கட்டம்
எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.
உனதன்பன் 
சி.சுப்பிரமணிய பாரதி

Saturday, 6 September 2014

நா.முத்துநிலவன் நூலுக்கு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முகவுரை




நா.முத்துநிலவன் எழுதி வெளியிடக் காத்திருக்கும் – “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ (இலக்கியச் சிந்தனைக் கட்டுரைகள்) நூலுக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதியிருக்கும் முகவுரை -
(“பூ“ திரைப்படக் கதாசிரியரும் இவரே என்பது ஒரு கூடுதல் தகவல்)
--------------------------------------------------------
எங்கெங்கோ அழைத்துச்செல்லும் கட்டுரைகள்
       கவிஞர் தோழர் நா.முத்துநிலவனின் இக்கட்டுரைத்தொகுப்பை நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களில் நானும் ஒருவன். தொகுக்கப்படும்போதுதான் எழுதியவருக்கு (தனக்கே) ஓர் அடையாளம் கிடைக்கும்.இந்தப் பதினாறு கட்டுரைகளும் தமிழ் இலக்கிய உலகில் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற  சில ஆழமான விவாதங்களுக்கு ஊடே நடந்து செல்வதால் 50 ஆண்டுகால இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டாக ஒரு முக்கியத்துவம் இத்தொகுப்பிற்குக் கிடைக்கிறது.
ஒரு பெண்ணை அவள் பெண் என்பதாலேயே இச்சமூகம் அவளை நடத்தும் விதமும்  அதில் உறைந்திருக்கும் பாலியல் வன்முறையும் ஆணாதிக்க உளவியலும் இன்றைய தமிழ்ப் பெண்கவிகளின்   கவிதை வரிகளில் எங்கனம் தெறித்து வருகின்றன என்பதை இன்றைய தமிழில் பெண் கவிகள் என்கிற கட்டுரையில் தொகுக்கிறார்.தன்னுடைய கருத்தை துறுத்தலாக முன் வைக்காமல் கவிஞர்களின் கவிதைகளை முன்வைத்து தன்னுடைய பார்வையை இடையியையே வைத்துச்செல்கிறார். ஆணாய்ப்பிறப்பது இயற்கை தரும் லாட்டரிப்பரிசு  என்கிற நிர்மலா சுரேஷ் வரிகளைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து அதுவும்மேல்சாதி ஆணாய்ப் பிறப்பது பம்பர் பரிசு’ என்பதை அவர் சொல்லவில்லை ,நாமாகப் புரிந்து கொள்ள வேண்டியதுதான் என்று தன் கருத்தைப் பதிவு செய்யும் விதம் ரசமாக இருக்கிறது.
        புதுக்கவிதையின் வரவு செலவுக்கணக்கைப் பார்க்கும் அடுத்த கட்டுரை உண்மையிலேயே என்னைப் பழைய காலத்துக்கு இழுத்துச்சென்றது.புதுக்கவிதைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அன்று நடந்த விவாதங்களைத் தொகுத்துத்தரும் இக்கட்டுரை வல்லிக்கண்ணன் இல்லையே என்கிற குறையைத் தீர்க்கிறது.அன்றைய சில கவிதைத் திருட்டுகளையும்கூட இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது.நமது முற்போக்குக் கவிஞர்கள் குறித்து முத்துநிலவன் கொள்ளும் நம்பிக்கையும் பெருமிதமும் எனக்கு இல்லை.அவர்களின் ஊக்கமும் நோக்கமும் பாராட்டும்படி இருப்பதுபோல் கவிதைகள் இன்னும் வந்துசேரவில்லை என்பது என் கருத்தாக இருக்கிறது.
         சங்க இலக்கியமும் தமிழ்ச்சமூக வரலாறும் குறித்துப் பேசும் கட்டுரை ஓர் அரிய வகைக்கட்டுரை.சங்கப்பரிச்சயமும் ஆழ்ந்த வாசிப்பும் இல்லாத வாசகர்களுக்கு எளிமையாக ஓர் அறிமுகத்தைச் செய்கிற கட்டுரை இது.சங்க காலத்து மக்கள் நிலை என்னவாக இருந்த்து என்பதைப் பேசும் கட்டுரையின் இறுதிப்பகுதி முக்கியமானது. மேலாண்மை பொன்னுச்சாமியின் “கொலை“ சிறுகதையை முன் வைத்து அவர் நட்த்தும் கருத்துப்போர், ஒரு சக படைப்பாளிக்குக் கேடயமாக நிற்கும் ஆவேசமான வாதங்களின் தொகுப்பாக அமைகிறது. அகல ஆசையில் ஆழத்துக்கு முக்கியத்துவம் தராத அவரின் பிற்காலக் கதைகள் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்துச் செல்கிறது இக்கட்டுரை.
       இத்தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரை க.நா.சு.வை தெனாலிராமனா படிப்பாளியா என்று கேள்வி கேட்கும் கட்டுரை. க.நா.சு.  பிறநெது நூற்றாண்டு சமீபத்தில் கொண்டாடப்பட்ட பின்னணியில் இக்கட்டுரை இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.மொழிபெயர்ப்பில் தமிழுக்கு கநாசு அளித்துள்ள  கொடைகளையும் அவரது சோதனைப் படைப்பு முயற்சிகளையும் அங்கீகரிப்பதில் துவங்கி ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவான அவரது கருத்துவரை எல்லாவற்றையும் பதிவு செய்ததோடு இக்கட்டுரை சுபமங்களாவில் வந்தபோது எழுந்த எதிரும்புதிருமான எதிர்வினைகளையும் நேர்மையுடன் பிற்சேர்க்கையாக இணைத்திருப்பது பாராட்ட்த்தக்கது.
        இதே தரத்துடன் வந்துள்ள இன்னொரு கட்டுரை ஜெயகாந்தன் பற்றியது.தமிழ் இலக்கிய உலகின் ஆகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரான ஜெயகாந்தனை அவருக்கு உரிய மரியாதை அளித்து பிந்திய ஜெயகாந்தனின் சறுக்கல்களைப் பட்டியலிடுகிறார்.முனியம்மாவும் ராசாத்தியும் அம்மாசியுமாக இருந்த அவரது நாயக நாயகிகள் கங்காவும் சாரதா மாமியும் கௌதம சித்தார்த்தனுமாக மாறிப்போன கதையை ஆவணப்படுத்தியுள்ளார்.விமர்சன்ங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக  ஜெயகாந்தன் நம்மை ஆகர்ஷிக்கிறார் இன்றும் என்று எனக்குச் சொல்லத்தோன்றுகிறது.
         கம்பனையும் கார்ல் மார்க்சையும் எதிர்ப்பில் விளைந்த கனிகள் என்கிர புள்ளியில் வைத்து ஒப்பிட்டுப்பேசும் கட்டுரை புதிய அணுகுமுறையோடு இருப்பதோடு அன்றைய நாட்களில் கம்பனை உயர்த்திப்பிடித்த ஜீவாவின் குரலை நினைவுபடுத்துவதாகவும் எதிரொலிப்பதாகவும் அமைந்துள்ளது.
         இன்னும் தொடர்கின்ற வலைத்தளக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு விவாதப்புள்ளியை ஆழமாகத் தொட்டுச்செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.சிறு சிறு செய்யுள்களாகத்துவங்கிய தமிழ்க்கவிதை பெருமன்னர்கள் எழுந்தபோது விரிந்து சென்றதையும் காலத்தை மீறி எழுந்த சித்தர்களையும் தேராமன்னா என்று வெகுண்டெழுந்த பெண் குரலாக்க் கண்ணகியைக் குறிப்பிடுவதும் நான்கு குறட்பாக்களில்  ஆய்த எழுத்தை வள்ளுவன் ஏன் பயன்படுத்தினான் என விரிவாகப் பேசுவதும் இலக்கியத்தில் கெட்ட வார்த்தைகளின் பயன்பாடு குறித்து மனம் திறந்து பேசுவதும் பாரதியின் பரிசு பெற்ற கவிதை குறித்து தேடி எடுத்து முன்வைக்கும் கருத்துக்களும் எனப்பயணிக்கும்  ஒன்பது சின்னச் சின்னக் கட்டுரைகளும் காரமான கட்டுரைகள்தாம். 
         இறுதியில் இணையத்தில் புழங்க வசதியாக சில தகவல்களையும் தந்திருப்பது இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பாகும்.
பல்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்துச்செல்லும் இக்கட்டுரைகள் பரவலாக வாசிக்கவும் விவாதிக்கவும்படவேண்டிய மிக முக்கியமான கட்டுரைகள்.
வாழ்த்துக்கள் தோழரே...
அன்புடன்
ச.தமிழ்ச்செல்வன்
15.08.2014
சிவகாசி

Thursday, 8 May 2014

இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி பரிசுத்தொகை ரூ 50000





;

பெருமதிப்பிற்குரியீர் வணக்கம் .

தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய -பெரியாரிய -மார்க்ஸிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையை கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது .

0 அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வாண்டு எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான இந்திய சமூகவியல் ஆய்வுக்கட்டுரை போட்டியினை கீழ்கண்ட 25 தலைப்புகளில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது .

0 ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும்

0 தேர்வு பெறும் ஒவ்வொரு கட்டுரைக்கும் ரூ 2000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்

0 தேர்வு பெறும் கட்டுரைகளை புதுக்கோட்டையில் எதிர்வரும்அக்டோபர் (2014 ) மாதத்தில்
நடைபெறும் மூன்று நாள் சிறப்புக் கருத்தரங்கில் சமூகவியல் ஆய்வில் புகழ்பெற்ற படைப்பாளுமைகளின் தலைமையிலும் விமர்சனத்திலும் வாசித்தளிக்க வாய்ப்பு வழங்கப்படும்

0 தேர்வு பெறும் கட்டுரைகள் அனைத்தும் புகழ்பெற்ற புத்தக நிறுவனத்தால் தனி நூலாக வெளியிடப்படும்

0ஆய்வுக்கட்டுரைகளை A 4 தாளில் 10 முதல் 15 பக்க அளவினை கொண்ட தட்டச்சுப் பிரதிகளாய்
(குறுந்தகடுகளுடன் ) அனுப்பிட வேண்டும் .

0 ஆய்வுக்கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள /எடுத்தாளப்பட்டுள்ள அனைத்துக் குறிப்புகளுக்குமான ஆதார நூல்களின் விவரங்கள் தனித்தாளில் குறிப்பிடப்பட்டு இணைக்கப்படவேண்டும்

0 கட்டுரையாளரின் பெயர் ,முகவரி ,மின்அஞ்சல் முகவரி ,அலைபேசி எண்கள் போன்ற விபரங்களுடன் கட்டுரை தம் சொந்த படைப்பே என்பதற்கான உறுதி மொழியையும் தனியே இணைக்கவேண்டும் .

0 ஆய்வு கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.07.2014

0 கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி 


செயலர் , அபெகா பண்பாட்டு இயக்கம், 832, கீழ ராஜ வீதி புதுக்கோட்டை -622 001 

மின் அஞ்சல் முகவரிகள் drnjayaraman@gmail.com      rasipanneerselvan@gmail.com
jryazhini2012@gmail.com 

தொடர்புக்கு 9486752525
ராசி .பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன்அதிபா )


----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆய்வுக் கட்டுரைகளுக்கான பொருள்
--------------------------------------------------------------------------------------
1. ஆரிய வருகைக்கு முன்பான ஆதி இந்திய சமூகம்
2. வர்ணம், சாதி --தோற்றமும் இருப்பும்
3. வர்ண சாதியப் படிநிலைகளின் எதிர்ப்பு வரலாறு
4. சாதியத்தின் மீதான சமண பௌத்த குறுக்கீடுகள்
5. இந்து மதத்தின் தோற்றமும் நிலைநிறுத்தப்பட்ட விதமும்
6. மனு ஸ்மிருதி தொகுக்கப்படுவதற்கான சூழலும் தேவையும்
7. பௌத்தமும் சமணமும் அழிக்கபட்ட விதம்
8. இந்திய சாதியில் இஸ்லாத்தின் இடையீடுகள்
9. கிறிஸ்தவமும் சாதியும்
10 மத மாற்றம் போல் சாதி மாற்றம் சாத்தியப்படாதது ஏன் ?
11 இந்து மதம் ஏன் ஒரு பிரச்சார மதமாக இல்லை ?(கிறிஸ்துவ முஸ்லிம் மதங்களை போல் )
12 பிரிட்டீஷ் ஆட்சியில் சாதியம் --உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
13.பிரிட்டீஷ் ஆட்சியும் பிராமணர்களும்
14 பிரிட்டீஷ் ஆட்சியும் பிராமணரல்லாதோரும்
15 பிரிட்டீஷ் ஆட்சியும் தலித்துகளும்
16அம்பேத்கருக்கு முந்தைய சமூக சீர் திருத்த இயக்கங்கள்
17 அம்பேத்கர் சாதிய அடிப்படையிலான ஒடுக்கு முறையை
அம்பலப்படுத்தியதால் ஆதாயம் அடைந்தவர்கள்
18. அம்பேத்கரின் இந்து மத கருத்தியல்களுக்கு எதிரான போராட்டங்கள் ( பௌத்தம் தழுவியது வரை )
19 அம்பேத்கர் சமூக நீதி என்பதை நாடளாவிய விவாதப்பொருளாக்கியதால் விளைந்த பயன்கள்
20.அம்பேத்கர் அதிகார அமைப்புகளுக்குள் பங்கெடுத்து ஆற்றிய
பணிகளால் விளைந்த பலன்கள்
21 சாதியும் பெண்களும்/பெண்களின் ஊடாக சாதியம்
22 இன்றைய சாதியும் தொழில்களும்
23 சுதந்திர இந்தியாவை சாதி கைப்பற்றிய விதம்
24 உலகமயமாக்கல் காலகட்டத்தில் சாதியம்
25 இந்திய சமுக அமைப்பும் இட ஒதுக்கீடுகளும்
------------------------------------------------------------------------------------------------------------------------

Friday, 28 February 2014

முடியுமென்றால் சொல்

உன்னை "சகோதரா " என்றழைக்கவே
ஆசைப்படுகிறேன் ...

அச்சொல் உனக்குள்
என்னவோ செய்யுமென்பதையும்
விண் விண் னென்று காதுகள்
விடைத்துத்  தெறிக்கும்  என்பதையும்
நான் அறிவேன் ..

என்றாலும் என் ஆசையை
விட்டுவிட நான் விரும்பவில்லை

சகோதரா ,

கோடு போடுதலை விட
ரோடு போடுதல் பெரிது

ஒப்பித்தலைவிட
உண்டாக்குதல் பெரிது

நெற்றி சுருக்கத்தை விட 
நெற்றி வியர்வை பெரிது

உணவு மேலாண்மையை விட
உற்பத்தியே பெரிது

உலகச்  சுகாதார உச்சிமாநாட்டை விட
ஊரைத்  துப்புரவு செய்தல் பெரிது


மத சாஸ்திரங்களை விட
மனித அன்பு பெரிதோ பெரிது .

உன்னால் முடியுமென்றால் சொல்
பெரிதுகளை செய்து காட்ட  .....


சரியென்று வருவாயெனில்

பிறகென்ன ,
நீக்கி விடலாம் எல்லா
சலுகை மயிர்களையும் .






Wednesday, 26 February 2014

இச்சாதாரி


நடு நிசியில் மடல் அவிழும் 
தாழையின் உடலேறி 
ஊர்ந்து நழுவி 
ஊர்ந்து நழுவி 

இச்சாதாரி 
இசைக்கும் பண்ணில் 

இரவின் வனமெங்கும் 
குளிரோடு தாழை வீச 

நட்சத்திர அகல்கள்
நடுங்கிக் கண் செருக

பனியின் தூபத்தில்
வெந்தனல் கமழ

முயங்க நோக்கும்
ஊரெல்லாம் ...!

Saturday, 22 February 2014

கன்னிமை --கி .இராஜநாராயணன் சிறுகதை

கன்னிமை  --கி .இராஜநாராயணன் 


      சொன்னால் நம்பமுடியாதுதான்!     நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று 
     நினைக்கவேயில்லை.
kira2அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர் அண்ணன் தம்பிகள். 
‘பெண்ணடி’யில்லை என்று என் தாய் அவளைத் தத்து எடுத்துத் தன் மகளாக்கிக் கொண்டாள்

அம்மாவைவிட எங்களுக்குத்தான் சந்தோஷம் ரொம்ப. இப்படி ஒரு அருமைச் சகோதரி யாருக்குக் கிடைப்பாள்? அழகிலும் சரி, புத்திசாலித்தனத்திலும் சரி அவளுக்கு 
நிகர் அவளேதான்.

அவள் ‘மனுஷி’யாகி எங்கள் வீட்டில் கன்னிகாத்த அந்த நாட்கள் எங்கள் குடும்பத்துக்கே பொன் நாட்கள்.

வேலைக்காரர்களுக்குக்கூட அவளுடைய கையினால் கஞ்சி ஊற்றினால்தான் திருப்தி. 
நிறைய்ய மோர்விட்டுக் கம்மஞ்சோற்றைப் பிசைந்து கரைத்து மோர் மிளகு வத்தலைப் பக்குவமாக எண்ணெயில் வறுத்துக் கொண்டுவந்து விடுவாள். சருவச் சட்டியிலிருந்து வெங்கலச் செம்பில் கடகடவென்று ஊற்ற, அந்த மிளகு வத்தலை எடுத்து வாயில் போட்டு நொறு நொறுவென்று மென்றுகொண்டே, அண்ணாந்து கஞ்சியை விட்டுக்கொண்டு அவர்கள் ஆனந்தமாய்க் குடிக்கும்போது பார்த்தால், ‘நாமும் அப்படிக் குடித்தால் நன்றாக இருக்கும்போலிருக்கிறதே!’ என்று தோன்றும்.

ஒரு நாளைக்கு உருத்த பச்சை வெங்காயம் கொண்டுவந்து ‘கடித்துக்’ கொள்ள 
கொடுப்பாள். ஒரு நாளைக்குப் பச்சை மிளகாயும், உப்பும். பச்சை மிளகாயின் 
காம்பைப் பறித்துவிட்டு அந்த இடத்தில் சிறிது கம்மங்கஞ்சியைத் தொட்டு அதை 
உப்பில் தோய்ப்பார்கள். உப்பு அதில் தாராளமாய் ஒட்டிக்கொள்ளும். அப்படியே 
வாயில் போட்டுக்கொண்டு கசமுச என்று மெல்லுவார்கள். அது, கஞ்சியைக் ‘கொண்டா 
கொண்டா’ என்று சொல்லுமாம்! இரவில் அவர்களுக்கு வெதுவெதுப்பாகக் குதிரைவாலிச் சோறுபோட்டு தாராளமாஅ பருப்புக்கறி விட்டு நல்லெண்ணெயும் ஊற்றுவாள். இதுக்குப் புளி ஊற்றி அவித்த சீனியவரைக்காய் வெஞ்சனமாகக் கொண்டுவந்து வைப்பாள். இரண்டாந்தரம் சோற்றுக்குக் கும்பா நிறைய ரஸம். ரஸத்தில் ஊறிய உருண்டை உருண்டையான குதிரைவாலிப் பருக்கைகளை அவர்கள் கை நிறைய எடுத்துப் பிழிந்து உண்பார்கள்.

வேலைக்காரர்களுக்கு மட்டுமில்லை, பிச்சைக்காரர்களுக்குக்கூட நாச்சியாரம்மா 
என்றால் ‘குலதெய்வம்’தான். அவளுக்கு என்னவோ அப்படி அடுத்தவர்களுக்குப் 
படைத்துப் படைத்து அவர்கள் உண்டு பசி ஆறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதில் 
ஒரு தேவ திருப்தி.

அவள் வாழ்க்கைப்பட்டு, புருஷன் வீட்டுக்குப் போனபிறகு எங்கள் நாக்குகள் எல்லாம் 
இப்போது சப்பிட்டுப் போய்விட்டது. உயர்ந்த ஜாதி நெத்திலியைத் தலைகளைக் கிள்ளி 
நீக்கிவிட்டுக் காரம் இட்டு வறுத்துக் கொடுப்பாள். இப்போது யாருமில்லை எங்களுக்கு. அந்தப் பொன்முறுவல் பக்குவம் யாருக்கும் கைவராது. பருப்புச்சோற்றுக்கு உப்புக்கண்டம் வறுத்துக் கொடுப்பாள். ரஸ சாதத்துக்கு முட்டை அவித்துக் காரமிட்டுக் கொடுப்பாள். திரண்ட கட்டி வெண்ணெயை எடுத்துத் தின்னக் கொடுப்பாள், அம்மாவுக்குத் தெரியாமல்.
அவள் அப்பொழுது எங்கள் வீட்டிலிருந்தது வீடு நிறைந்திருந்தது. தீபம்போல் வீடு 
நிறைஒளி விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்தாள்.

மார்கழி மாசம் பிறந்துவிட்டால் வீட்டினுள்ளும் தெருவாசல் முற்றத்திலும் தினமும் 
வகை வகையான கோலங்கள் போட்டு அழகுபடுத்துவாள். அதிகாலையில் எழுந்து நீராடி திவ்யப்பிரபந்தம் பாடுவாள். இப்பொழுதும் பல திருப்பாவைப் பாடல்களை என்னால் பாராமல் ஒப்புவிக்கமுடியும். சிறுவயசில் அவளால் பிரபந்தப் பாடல்களைப் பாடக் கேட்டுக்கேட்டு எங்கள் எல்லோர்க்கும் அது மனப்பாடம் ஆகிவிட்டது.
அப்பொழுது எங்கள் வீட்டில் மரத் திருவிளக்கு என்று ஒன்று இருந்தது. அது 
அவ்வளவும் மரத்தினாலேயே ஆனது. தச்சன் அதில் பல இடங்களில் உளிகளைப் பதித்து நேர்கோடுகளால் ஆன கோலங்களைப் போட்டிருந்தான். மொங்காங்கட்டையின் வடிவத்தில் நிற்கும் பெரிதான பற்கள் இருக்கும். அதில் உயரத்துக்குத் தகுந்தபடி ஏற்றவும் இறக்கவும் வசதியாக இருக்கும்படியாக ‘ட’ வடிவத்தில் ஒரு துளையிட்ட சக்கையில் ‘சல்ல முத்த’ என்று சொல்லப்படும் மாட்டுச்சாண உருண்டையின் மீது மண் அகல்விளக்கு வைக்கப்பட்டு எரியும். சாணி உருண்டை தினமும் விளக்கு இடும் போதெல்லாம் மாற்றிவிட்டுப் புதிதாக வைக்கப்படும். அப்புறம் x மாதிரி ஒரு போர்வைப் பலகை கொண்டு இரவு வெகு நேரம் வரைக்கும் பெண்கள் புடைசூழ இவள் உரக்க ராகமிட்டு வாசிப்பாள். வாசித்துக்கொண்டே வரும்போது இவளும் மற்றப் பெண்களும் கண்ணீர் விடுவார்கள். கண்ணீரைத் துடைத்துக்கொண்டே தொண்டை கம்மத் திரும்பவும் ராகமிட்டு வசனத்தைப் பாடுவாள். அவர்கள் கண்ணீர் விடுவதையும் மூக்கைச் சிந்துவதையும் நான் படுக்கையில் படுத்துக்கொண்டு பேசாமல் இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.
அவள் வாசிப்பதை என் காதுகள் வாங்கிக்கொள்ளாது. என் கண்களே பார்க்கவும் 
செய்யும்; ‘கேட்க’வும் செய்யும்.

விளக்கின் ஒளியில்தான் அவள் எவ்வளவு அழகாகப் பிரகாசிக்கிறாள். அழகுக்கும் 
விளக்கின் ஒளிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. கறிக்கு உப்பைப்போல் அழகுக்கும் 
அதி ருசி கூட்டுகிறதுபோலும் விளக்கு.
தானாகக் கண்கள் சோர்ந்து மூடிக்கொண்டுவிடும்.

அதிகாலையில் ரங்கையா வந்து என்னை எழுப்பினான். ராமர், லக்‌ஷ்மணர், சீதை மூவரும் எங்கள் தெருவின் முடிவிலுள்ள கிழக்காகப் பார்த்த ஒரு வீட்டிலிருந்து இறங்கிக் காட்டுக்குப் போகிறார்கள். பார்வதி அம்மன் கோயிலைத் தாண்டி, பள்ளிக்கூடத்தையும் கடந்து, கம்மாய்க்கரை வழியாக அந்த மூவரும் போகிறாள். எனக்குத் தொண்டையில் வலிக்கிறாற்போல் இருக்கிறது. முகத்தைச் சுளிக்க முடியவில்லை. ரங்கையா தோள்களைப் பிடித்துப் பலமாக உலுக்கியதால் விழித்துவிட்டேன். சே! நன்றாக விடிந்துவிட்டிருக்கிறது. ரங்கையா சிரித்துக்கொண்டு நின்றிருந்தான், கிளம்பு கிளம்பு என்று ஜரூர்ப்படுத்தினான்.
நாச்சியாரம்மா செம்பு நிறையத் தயிர் கொண்டுவந்து வைத்தாள், இருவரும் 
வயிறுமுட்டக் குடித்துவிட்டுக் கிளம்பினோம்.

ரங்கையா எங்கள் மச்சினன்; ‘வீட்டுக்கு மேல்’ வரப்போகும் மாப்பிள்ளை. 
நாச்சியாரம்மாவை இவனுக்குத்தான் கொடுக்க இருக்கிறோம். இவனும் 
நாச்சியாரம்மாபேரில் உயிரையே வைத்திருக்கிறான்; அவளும் அப்படித்தான்.
‘புல்லை’யையும் ’மயிலை’ யையும் பிடித்து ரங்கையா வண்டி போட்டான். அவை இரண்டும் எங்கள் தொழுவில் பிறந்தவை. ஒன்று இரண்டு; இன்னொன்று நாலு பல். பாய்ச்சலில் புறப்பட்டது வண்டி. ஊணுக் கம்பைப் பிடித்துத்தொத்தி, அவற்றில் இரண்டைக் கைக்கு ஒன்றாகப் பிடித்துக்கொண்டு குனிந்து நின்றுகொண்டேன். சட்டத்தில் இரும்பு வளையங்கள் அதிர்ந்து குலுங்கிச் சத்தம் எழுப்பியது. வண்டியின் வேகத்தினால் ஏற்பட்ட குலுக்கலில் உடம்பு அதிர்ந்தது. கல்லாஞ்சிரட்டைத் தாண்டி வண்டியின் அறைத் தடத்துக்குள் காளைகள் நிதானங்கொண்டு நடை போட்டன.

நடுவோடைப் பாதையிலுள்ள வன்னிமரத்தருகில் வண்டியை அவிழ்த்து, காளைகளை 
மேய்ச்சலுக்காக ஓடைக்குக் கொண்டு போனோம்.
காட்டில் பருத்தி எடுக்கும் பெண்கள் காட்டுப் பாடல்கள் பாடிக் 
கொண்டிருந்தார்கள். அவர்களிடையே நாச்சியாரம்மாவும் நிரை போட்டுப் பருத்தி 
எடுத்துக் கொண்டிருந்தாள். பருத்தி ‘காடாய்’ வெடித்துக் கிடந்தது; பச்சை 
வானத்தில் நட்சத்திரங்களைப்போலே. ரங்கையா தன் மடியிலிருந்த கம்பரக் கத்தியால் 
கருவைக் குச்சியைச் சீவி, பல் தேய்க்கத் தனக்கு ஒன்று வைத்துக்கொண்டு எனக்கு 
ஒன்று கொடுத்தான். போக இன்னொன்று தயார் செய்து வைத்துக்கொண்டான்!
நேரம், கிடை எழுப்புகிற நேரத்துக்கும் அதிகமாகிவிட்டது. காளைகள் வயிறு முட்டப் 
புல்மேய்ந்து விட்டு வன்னிமர நிழலில் படுத்து அசைபோட்டுக் கொண்டிருந்தன.
நாச்சியாரம்மா, பருத்தியைக் கருவமரத்து நிழலில் கூறுவைத்துக் கொடுத்துக் 
கொண்டிருந்தாள். மடிப் பருத்தி, பிள்ளைப் பருத்தி, போடு பருத்தி என்று 
பகிர்ந்து போட, பள்ளுப் பெண்கள் சந்தோஷமாக நாச்சியாரம்மாவை வாழ்த்திக்கொண்டே வாங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் வேறு யார் வந்து கூறுவைத்துக் கொடுத்தாலும் ஒப்பமாட்டார்கள். நாச்சியாரம்மாதான் வேணும் அவர்களுக்கு.
கிஸ்தான் தாட்டுக்களில் பகிர்ந்த பருத்தி அம்பாரத்தைப் பொதியாக்கட்டி வண்டியில் 
பாரம் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டோம். பள்ளுப்பெண்கள் முன்கூட்டிப் 
புறப்பட்டுப் போய் விட்டார்கள் - நாச்சியாரம்மாவும் நானும் வண்டியில் 
ஏறிக்கொண்டு பருத்திப் பொட்டணங்களின்மேல் உட்கார்ந்துகொண்டு ஊணுக்கம்புகளைப் பிடித்துக்கொண்டோம். ரங்கையா வண்டியை விரட்டினான்.
வருகிற பாதையில் மடியில் பகிர்ந்த பருத்தியோடு நடந்து வருகிற பெண்டுகளின் 
கூட்டத்தைக் கடந்துகொண்டே வந்தது வண்டி. அவர்கள் வேண்டுமென்று 
குடிகாரர்களைப்போல் தள்ளாடி நடந்துகொண்டே வேடிக்கைப் பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒருவருக்கொருவர் கேலிசெய்து தள்ளிக்கொண்டும் வந்தார்கள். தொட்டெரம்மா கோயில் பக்கத்தில் வந்ததும் ரங்கையா கயிறுகளை முழங்கைகளில் சுற்றி இழுத்து வண்டியை நிறுத்தினான். தொட்டெரம்மா கோயிலின் இலந்தைமுள் கோட்டையின்மேல் நாச்சியாரம்மா ஒரு கூறு பருத்தியை எடுத்து இரு கைகளிலும் ஏந்திப் பயபக்தியோடு அந்த முள்கோட்டையின் மீது போட்டாள். பின்னால் வந்துக்கொண்டிருந்த பள்ளுப்பெண்கள் குலவையிட்டார்கள். ரங்கையா கயிற்றை நெகிழ்ந்து விட்டதும் புல்லையும் மயிலையும் வால்களை விடைத்துக்கொண்டு பாய்ந்து புறப்பட்டது.
********
ஊரெல்லாம் ஒரே சலசலப்பு. என்ன ஆகுமோ என்ற பயம். தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே வந்து சேர்ந்தான் ரங்கையா. ‘என்ன ஆச்சி?’ என்று அவனைக் கேட்பதுபோல் பார்த்தோம் யாவரும். அவன் என்னை மட்டிலும் ‘ராஜா, இங்கே வா’ என்று தனியாகக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான்.
எங்கள் ஊரில், சுந்தரத்தேவன் என்று ஒரு பெரிய போக்கிரி இருந்தான். ஏழுதடவை 
ஜெயிலுக்குப் போனவன். மூன்று கொலைகள் செய்தவன். அதில் ஒன்று இரட்டைக் கொலை. அவனுடைய மகனை, எங்கள் தகப்பனார் எங்கள் புஞ்சையில் ‘வாங்கித்திங்க’ 
பருத்திச்சுளை எடுத்தான் என்றதுக்கு ஊணுக்கம்பால் அடி நொறுக்கி எடுத்து 
விட்டார். பையனைக் கட்டிலில் வைத்து எடுத்துக்கொண்டு வந்து அவனுடைய வீட்டில் கிடத்தியிருக்கிறார்கள். சுந்தரத்தேவன் வெட்டரிவாளை எடுத்துக்கொண்டு வந்து எங்கள் வீட்டை நோக்கிப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறான். விஷயம் இதுதான். ரங்கையா போய் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை அவன்.
நாச்சியாரம்மா சுந்தரத்தேவன் வீட்டை நோக்கிப் போனாள். அவள் அங்கு போயிருப்பாள் என்று நாங்கள் முதலில் நினைக்கவில்லை; பிறகுதான் தெரியவந்தது.
அங்கு அவள் போனபோது ஒரே கூட்டம். அழுகைச் சத்தம். நாச்சியாரம்மா நுழைந்ததும் பரபரப்பு உண்டானது. பெண்கள் பணிவாக வழிவிட்டு விலகி நின்றனர். அடிப்பட்ட சிறுவ்னை அந்தக் கட்டிலிலேயே கிடந்த்தியிருந்தது. இரத்த உறவு கொண்ட பெண்கள் ஓவென்று அழுதுகொண்டிருந்தார்கள். சிறுவனின் தாய் கதறியது உள்ளத்தை உலுக்குவதாக இருந்தது. நாச்சியாரம்மா சிலையானாள். அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. அவள் சுந்தரத்தேவனை ஏறிட்டுப் பார்த்தாள். பின்பு கட்டிலின் 
சட்டத்தில் உட்கார்ந்தாள். தன் முந்தானையாள் கண்ணீரை ஒத்திக்கொண்டு 
அச்சிறுவனின் இரத்தம் உறைந்த முகத்தைத் துடைத்தாள். சுந்தரத்தேவன் கட்டிலின் 
பக்கத்தில் நெருங்கி அரிவாளைத் தரையில் ஊன்றி ஒற்றைக் கால் மண்டியிட்டு 
உட்கார்ந்துகொண்டு இடது முழங்கையைக் கட்டிலின் சட்டத்தில் ஊன்றி முகத்தில் 
ஐந்து விரல்களால் விரித்து மூடிக்கொண்டு ஒரு குழந்தைபோல் குமுறி அழுதான்.
நாச்சியாரம்மா சிறுவனை மூர்ச்சை தெளிவித்தாள். வீட்டிலிருந்த புளித்த மோரை 
வருத்திச் சிறிது கொடுத்துத் தெம்பு உண்டாக்கினாள். மஞ்சணத்தி இலைகளைப் 
பறித்துக்கொண்டு வரச் சொன்னாள். அதை வதக்கித் தன் கையாலேயே ஒத்தடம் கொடுத்தாள்.
சுவரொட்டி இலைகளை வாட்டிப் பக்குவப்படுத்திக் காயங்களைக் கட்டினாள். பின்பு 
வீட்டுக்கு வந்து, பத்துப் பக்கா நெல் அரிசியும், இரண்டு கோழிகளையும் 
கொடுத்தனுப்பினாள். நாங்கள் ஊமைகளைப்போல் ஒன்றுமே பேசாமல் அவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தோம்.
எங்கள் தகப்பனாரோ, இப்பொழுதுதான் ஒன்றுமே நடக்காதது போல் தலையில் கட்டிய 
லேஞ்சியோடு நிம்மதியாக உட்கார்ந்து கொண்டு சுவர்நிழலில் சூரித்தட்டை 
வீசிக்கொண்டிருந்தார். இடையிடையே வாயில் ஊறும் வெற்றிலை எச்சியை இரண்டு 
விரல்களை உதட்டில் அழுத்திப் பதித்துக்கொண்டு பீச்சித் துப்புவார். அது 
கம்மந்தட்டைகளையெல்லாம் தாண்டித் தூரப்போய் விழும்.
********
எல்லாப் பெண்களையும்போல் நாச்சியாரம்மாவுக்கும் ஒருநாள் கல்யாணம் நிச்சயமானது. அந்தக்காலத்துப் பெண்கள் தங்களுக்குக் கல்யாணம் நிச்சயமானவுடன் அழுவார்கள். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று இன்றுவரைக்கும் நான் யாரிடமும் காரனம் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால், அதில் ஒரு ‘தேவ ரகஸியம்’ ஏதோ இருக்கிறது என்று மட்டும் நிச்சயம். நாச்சியாரம்மாவும் ஒரு மூணுநாள் உட்கார்ந்து கண்ணீர் வடித்து ‘விசனம்’ காத்தாள்.
வழக்கம்போல் மூன்றுநாள் கல்யாணம். அந்த மூன்று நாளும் அவள் ‘பொண்ணுக்கு இருந்த’ அழகைச் சொல்லிமுடியாது. கல்யாணம் முடிந்த நாலாம்நாள் அவள் எங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து மறுவீடு போகிறாள். சுமங்கலிகள் அவளுக்கு ஆரத்தி எடுத்தார்கள். ஆரத்தி சுற்றிக்கொண்டே அவர்கள் பாடினார்கள். அந்தப் பாடலின் 
ஒவ்வொரு கடேசி அடியும் கீழ்க்கண்டவாறு முடியும்-
*‘மாயம்ம லக்‌ஷ்மியம்ம போயிராவே...’ 
(எங்கள் தாயே லக்‌ஷ்மி தேவியே போய் வருவாய்)*
அந்தக் காட்சி இன்னும் என் மனசில் பசுமையாக இருக்கிறது. அவளை நாங்கள் 
உள்ளூரில்தான் கட்டிக்கொடுத்திருக்கிறோம். ஐந்து வீடுகள் தள்ளித்தான் அவளுடைய 
புக்ககம். அவளுக்கு நாங்கள் விடை கொடுத்து அனுப்புவது என்பதில் 
அர்த்தமில்லைதான். ஆனால் ஏதோ ஒன்றுக்கு நிச்சயமாக விடை கொடுத்தனுப்பி 
இருக்கிறோம்.
அந்த ஒன்று இப்பொழுது எங்கள் நாச்சியாரம்மாவிடம் இல்லை. அது அவளிடமிருந்துபோயே போய்விட்டது.
-----
2
ஆம் அது ரொம்ப உண்மை.
ராஜா அடிக்கடி சொல்லுவான். இப்பொழுதுதான் தெரிகிறது எனக்கு.
நான் நாச்சியாரம்மாவைக் கல்யாணம் செய்து அடைந்து கொண்டேன். ஆனால் அவளிடமிருந்து எதையோ பிரித்துவிட்டேன்.
அவள் இப்பொழுது ரெட்டிப்புக் கலகலப்பாக உண்மையாகவே இருக்கிறாள். என் 
குடும்பத்தைப் பிரகாசிக்கச் செய்கிறாள். எங்கள் கல்யாணத்துக்கு முன்பு எனக்கு 
இருந்த நாச்சியாரம்மாள்; இப்பொழுது இருக்கும் என் நாச்சியாரம்மாள்; நான் அந்த 
அவளைத்தான் மிகவும் நேசிக்கிறேன்.
இப்பொழுது மூணு குழந்தைகள் எங்களுக்கு, தொடர்ந்த பிரசவம். இது அவளைப் 
பாதித்திருப்பது உண்மைதான். குழந்தைகளையும், குடும்பத்தையுமே சதா கவனிக்கும் 
சுயநலமி ஆகிவிட்டாள்.
எங்கோ ஓர் இடத்தில் கோளாறாகிவிட்டது. சந்தேகமே இல்லை. ஓய்வு ஒழிச்சலில்லாமல் முன்னைவிடப் பலமடங்கு அவள் இப்பொழுது உடைக்கிறாள். உழைத்து ஓடாய்த் தேய்ந்து வருகிறாள் என்னவள். ஒருநாளில் அவள் தூங்குகிற நேரம் மிகவும் அற்பம். என்ன பொறுமை, என்ன பொறுமை!
குழந்தைக்கு முலையூட்டிவிட்டு விலகிய மாராப்பைக்கூடச் சரி செய்து கொள்ளாமல் 
தூளியில் இட்டு ஆட்டும் இந்த இவளா அவள்?
ஏகாலிக்கும், குடிமகளுக்கும் சோறுபோட எழுந்திருக்கும்போது முகம் சுளிக்கிறாள். 
குழந்தைக்குப் பாலூட்டும்போதோ, அல்லது தான் சாப்பிட உட்காரும்போதோ 
பார்த்துத்தான் அவர்கள் சோறு வாங்கிப் போக வருகிறார்கள் தினமும் என்று புகார் 
செய்கிறாள். பிச்சைக்காரர்களுக்கு ‘வாய்தாப்’ போடுகிராள். வேலைக்காரகளின்மேல் 
எரிந்து விழுகிராள். ‘அப்பப்பா என்ன தீனி தின்கின்றான்கள் ஒவ்வொருத்தரும்’ 
என்று வாய்விட்டே சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.
குடுகுடுப்பைக்காரன் இப்பொழுதெல்லாம் அட்டகாசமாக வந்து எங்கள் தலைவாசலில் 
வெகுநேரம் புகழ்வதில்லை. பெருமாள் மாட்டுக்காரன் தன் மாட்டுக்கு 
கம்மஞ்சோற்றையும் பருத்திக்கொட்டையையும் தவிட்டையும் கலந்து வைக்கும் அந்த ‘நாச்சியார்’ எங்கே போனாள் என்று தேடிக்கொண்டிருக்கிறான்.
கல்யாணத்துக்கு முன் நாச்சியாரு, நின்ற கண்ணிப்பிள்ளை சேகரித்து மெத்தைகள், 
தலையணைகள் தைப்பாள். மெத்தை உறைகளிலும் தலையணை உறைகளிலும் பட்டு நூலால் 
வேலைப்பாடுகள் செய்வாள். அவள் தனியாக உட்கார்ந்துகொண்டு நிம்மதியாகவும் 
நிதானமாகவும் யோசித்து யோசித்துச் செய்யும் அந்தப் பின்னல் வேலைகளில், தன் 
கன்னிப் பருவத்தின் எண்ணங்களையும் கனவுகளையுமே அதில் பதித்துப் பின்னுவதுபோல் தோன்றும். இடையிடையே அவளுக்குள் அவளாகவே குறுநகை செய்து கொள்வாள். சில சமயம் வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பார்வை எந்தப் பொருள்பேரிலும் படியாமல் ‘பார்த்து’க்கொண்டே இருப்பாள். அப்புறம் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மீண்டும் தையலில் மூழ்குவாள்.
ஒருநாள் நாச்சியாருவின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனக்கு ஒரு புதிய ஏர்வடம் 
தேவையாக இருந்தது. அவர்களுடைய வீட்டில் அப்பொழுது களத்து ஜோலியாக எல்லாரும் வெளியே போயிருந்தார்கள். அடுப்பங்கூடத்தை ஒட்டி ஒரு நீளமான ஓடு வேய்ந்த கட்டிடம். அதில் ‘குறுக்க மறுக்க’ நிறையக் குலுக்கைகள். குதிரைவாலி, 
நாத்துச்சோளம், வரகு, காடைக்கண்ணி முதலிய தானியங்கள் ரொம்பி இருக்கும். புதிய 
ஏர் வடங்கள் ஓட்டின் கைமரச் சட்டங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. 
தொங்கிய கயிறுகளுக்கு மத்தியில், மண் ஓட்டில் ஓட்டை போட்டுக் 
கோர்த்திருந்தார்கள். ஏர்வடத்தைக் கத்தரிக்கக் கயிறு வழியாக இறங்கி மண் 
ஓட்டுக்கு வந்ததும் எலிகள் கீழே விழுந்துவிடும். ஆள் புழக்கம் அங்கு 
அதிகமிராததால் தேள்கள் நிறைய இருக்கும். பதனமாகப் பார்த்துக் குலுக்கை மேல் ஏறி நின்றேன். மத்தியான வெயிலால் ஓட்டின் வெக்கை தாள முடியாததாக இருந்தது. 
தற்செயலாக மறுபக்கம் திரும்பிப் பார்த்தேன். அங்கே தரையில் நாச்சியாரு ஒரு 
தலைப்பலகையை வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்! மார்பின்மீது விரித்துக் 
கவிழ்க்கப்பட்ட ’அல்லி அரசாணி மாலை’ப் புத்தகம். பக்கத்தில் வெங்கலப் 
பல்லாங்குழியின் மீது குவிக்கப்பட்ட சோழிகள். ஜன்னலில் ஒரு செம்பு, பக்கத்தில் 
ஒரு சினுக்குவலி, இரண்டு பக்கமும் பற்கள் உள்ள ஒரு மரச்சீப்பு, ஒரு ஈருவாங்கி, 
ஒரு உடைந்த முகம்பார்க்கும் கண்ணாடி முதலியன இருந்தன. அவள் அயர்ந்து 
தூங்கிக்கொண்டிருந்தாள். பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில் 
பால்நுரைமீது பால் பீச்சும்போது ஏற்படும் சப்தத்தைப்போல் மெல்லிய குறட்டை ஒலி. 
அவள் தூங்கும் வைபவத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அடர்ந்த நீண்டு வளைந்த ரெப்பை ரோமங்களைக் கொண்ட மூடிய அவள் கண்கள் அவ்வளவு அழகாய் இருந்தது. மெதுவாக இறங்கிப் போய் அந்த மூடிய கண்களில் புருவத்துக்கும் ரெப்பை ரோமங்களுக்கும் மத்தியில் முத்தமிட வேண்டும்போல் இருந்தது.
சொல்லி வைத்ததுபோல் நாச்சியாரு கண்களைத் திறந்தாள். தூக்கத்தினால் சிவந்த 
விழிகள் இன்னும் பார்க்க நன்றாக இருந்தது. குலுக்கைமேல் இருந்த என்னை அதே கணம் பார்த்துவிட்டாள். ‘இது என்ன வேடிக்கை?’ என்பதுபோல் சிரித்துப் பார்த்தாள். 
அவள் எழுந்த வேகத்தில் புஸ்தகம் அவளுடைய காலடியில் விழுந்தது. விழுந்த 
புஸ்தகத்தைத் தொட்டு வேகமாக இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு அதை எடுத்து ஜன்னலில் வைத்தாள். பின்பு லஜ்ஜையோடு சிரித்துத் தலைகவிந்துகொண்டே, நழுவும் மார்பு சேலையை வலதுகையினால் மார்போடு ஒட்ட வைத்துக்கொண்டு மெதுவாக அந்த இடத்தை விட்டு நழுவினாள்.
கல்யாணத்துக்கு முன்பிருந்தே நாங்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். யாரும் அறியாமல் தொலைவில் இருந்துகொண்டே ரகசியமாக ஒட்டிப் பழகினோம். இதயங்கள் அப்படி ஒன்றி ஊசலாடின. பேசாத ரகசியங்கள்தான் எங்களுக்குள் எத்தனை!
எனக்கு என்னென்ன சௌகரியங்கள் வேண்டுமென்று நான் உணர்த்தாமலே அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆச்சரியப்படும்படி அவைகள் செய்து முடிக்கப்பட்டிருக்கும் அப்போது.
********
ஒரு நாள் கோவில்பட்டியிலிருந்து ராத்திரி வந்தேன். அன்று வீட்டிற்கு நிறையச் 
சாமான்கள் வாங்க வேண்டியிருந்தது. காலம் முன்னைமாதிரி இல்லை. ஒரும்பாகிவிட்டது. 
முன்னெல்லாம் கொஞ்ச ரூபாயில் நிறையச் சாமான்கள் வாங்கிக்கொண்டு வரலாம். இப்போதோ நிறைய ரூபாய்கள் கொண்டுபோய் கொஞ்ச சாமான்களையே வாங்கமுடிகிறது.
வந்ததும் வராததுமாய்ச் சாமான்களையெல்லாம் வண்டியிலிருந்து இறக்கி 
வைத்துவிட்டுப் பணப்பையையும் கச்சாத்துகளையும் நாச்சியாருவிடம் கொடுத்துவிட்டு அப்படியே வந்து கட்டிலில் வீழ்ந்தேன். உடம்பெல்லாம் அடித்துப்போட்டதுமாதிரி வலி. கண்கள் ஜிவ்வென்று உஷ்ணத்தைக் கக்கிக்கொண்டிருந்தது. மண்டைப் பொருத்தோடுகளில் ஆக்ரா இறக்கியது போல் தெறி. கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டேன். குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. அரிக்கன் லாம்பை சரியாகத் துடைத்துத் திரியைக் கத்தரித்து விடாததாலோ என்னவோ சுடர் பிறைவடிவில் எரிந்துகொண்டிருந்தது. சிம்னியில் புகைபிடிக்க ஆரம்பித்திருந்தது.
அந்த வெளிச்சத்தில் அவள் கச்சாத்துக்களிலிருந்த தொகைகளைக் கூட்டிக்கொண்டும், 
மீதிப்பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொண்டுமிருந்தாள்.
கணக்கில் ஒரு ஐந்து ரூபாய் சொச்சம் உதைத்தது. அந்த ரூபாய்க்கான கணக்கு என்ன 
என்று என்னிடம் கேட்டாள்.
’எல்லாத்தையும் எடுத்துவை
கணக்கு எங்கெயும் போய்விடாது;
காலையில் பாத்துக்கலாம், எல்லாம்.’
அவள் பிடிவாதமாகக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
எனக்கு கண்களைத் திறக்க முடியவில்லை. மூடிக்கொண்டே இருக்கவேண்டும்போல் 
இருந்தது. என்னுடைய நெற்றி ஒரு இதமான விரல்களின் ஒத்தடத்துக்கு ஏங்கியது. 
மூக்கு மயிர் கருகும்படியான உஷ்ணக்காற்றை நான் வெளிவிட்டுக் கொண்டிருந்தேன். 
நல்ல உயர்ந்த காய்ச்சல்.
சூழ்நிலையின் பிரக்ஞை வட்டம் சுருங்கிக்கொண்டே வந்தது. சின்ன, மெல்லிய 
சப்தங்கள்கூடக் கோரமாகக் கேட்டன. கண்களைத் திறந்து நாச்சியாரு என்ன செய்கிறாள் என்று திரும்பிப் பார்த்தேன். அவள் ரூபாய் அணா பைசாவில் மூழ்கியிருந்தாள்.
குளிர்ந்த காற்றுப்பட்டதால் கண்கள் நீரை நிறைத்தன, துடைத்துக்கொள்ளக் கையை 
எடுக்க இஷ்டமில்லை. அதை இமைகளாலேயே மூடி வெளியேற்றினேன். மீண்டும் 
நாச்சியாருவையே பார்த்தேன். அவளுடைய ரவிக்கையின் அவிழ்க்கப்பட்ட முடிச்சு 
முடியப்படாமலே தொங்கின. கூந்தல் வாரிச் சேர்க்கப்படாததால் கற்றைகள் 
முன்முகத்தில் வந்து விழுந்து கிடந்தன.
என்ன ஆனந்தமான ‘சொகம்’ இந்தக் கண்களை மூடிக்கொண்டே இருப்பதினால்! கானல் 
அலைகளைப்போல் என் உடம்பிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் உஷ்ண அலைகள் கண்ணால் பார்க்கமுடியாமலிர்ந்தாலும் தெரிந்தது. நான் எரிந்துக்கொண்டிருக்கும் ஒரு 
சிதைக்குள் படுத்திருப்பதுபோல் குளிருக்கு அடக்கமாக இருந்தது. உயர்ந்த 
காய்ச்சலின் போதை இடைவிடாது மீட்டப்படும் சுருதிபோல் லயிப்பு மயமாக இருந்தது.
இந்த ஆனந்தத்தில் பங்குகொள்ள எனக்கு ஒரு துணைவேண்டும்போல் இருந்தது. அவள் எங்கே? அவள்தான்; என் அருமை நாச்சியாரு.

‘நாச்சியாரு, என் பிரியே! நீ எங்கிருக்கிறாய்?’


------------------------------------------------
நன்றி --அழியாச்சுடர் ராம்