இன்றைய நாட்களில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு எதிரான சவால்களில் மிக முக்கியமானது சகல மட்டங்களிலும் நிரம்பியிருக்கிற ஊழல். ஊழலுக்கெதிரான வலுவான குரல்களும் இயக்கவழிப்போராட்டங்களும் நாடெங்கிலும் எழுவதும் பின் நுரைத்துப்பொங்கும் பால் நீர்த்துளிகளால் அடங்கிப்போவதைப்போல் நீர்த்துப் போவதுமான காட்சிகள் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இயல்பில் அநீதிக்கு எதிராக வெகுண்டெழும் மனத்தன்மை கொண்ட இளைஞர்கள் தற்கால ஊடக வலிமையினால் உடனுக்குடன் ஒருங்கிணைந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் .முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இவ்வெழுச்சிகள் அமைகின்றன. யார் முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பது கூட முக்கியம் இல்லாதபடிக்கு ஒரு ரோபோ ஊழலை எதிர்த்து இயக்கம் நடத்தினாலும் அதன் பின்னே ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணிவகுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
இச்சூழலில் சட்டப்பூர்வமாக இயங்கும் இலஞ்ச ஒழிப்புப்பிரிவோ கைக்குட்டையால் முகம் மறைத்துச் செல்லும் சில சில்லரைத்திருடர்களை கைது செய்வதையே தனது கடமையின் எல்லையாக வரையறுத்துக்கொண்டிருக்கிறது . பாராளுமன்ற அமைப்பின் வழி திட்டமிடப்படுகிற பலவகை லோக்பால் முறைகள் முழுமனதோடு ஊழல் நடவடிக்கைகளுக்கெதிராக தங்களை தகவமைத்துக்கொள்வதில் இன்னும் ஒரு முறையான முடிவுக்கு வந்தபாடில்லை. வரப்போவதுமில்லை. அவை வெறும் அரசியல்நாடகத்தின் மழுங்கிய அங்கதக்காட்சிகளே.
தண்டனை பெற்றால் தகுதி இழப்பு என்பது ஒரு நம்பிக்கை வெளிச்சம் என்றாலும் தீர்ப்புக்கு ஒன்றரை மாமாங்க காலம் ஆவதும் தண்டனைகள் நீதிமன்ற முறையீட்டு அரசியலில் மாட்டிக்கொண்டு கிடப்பதும் தண்டனை பெறாவிட்டால் எதுவுமே குற்றக்கணக்கில் வராது என்ற நிலையும் பாவனையின் நாடகங்களாக மாறிவிட்டன.
இந்நிலையில் இருப்பதை அடியோடு புரட்டிப்போட்டு புரட்சிகரமான பெரும் மாற்றங்களை நிகழ்த்தக்கூடிய சூழலை இந்திய தேர்தல்ஜனநாயகம் அனுமதிக்காத நிலையில் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க மிக எளிமையான உடனடி நடைமுறைச் சாத்தியங்களுடன் கூடிய ஒரு முன்மொழிவை இதன் மூலம் வைக்கிறேன்.
. வங்கி பரிமாற்றுச்சீட்டு முறை ( BANK TRANSFER STATEMENT) BTS முறை
பொதுவாக நேர்மையற்ற வழிகளில் சேர்க்கப்படும் இலஞ்சம் மற்றும் கணக்கில் வராத கறுப்புப்பணம் ஆகியவற்றை வைத்திருப்பவர்கள் அவற்றைச் சொத்துக்களாக மாற்றி பரம்பரைக்கும் நிலைக்கச் செய்யவே விரும்புகிறார்கள். அதனை கணக்கில்கொண்டே நாம் எதிர்வினையாற்ற வேண்டியிருக்கிறது இந்த BTS முறையின் படி கீழ்கண்டவற்றை வாங்கும்போதும் விற்கும்போதும் நேரடி பணப் பட்டுவாடா முற்றிலும் ஒழிக்கப்பட்டு அனைத்தும் வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் மட்டுமே நடைபெறும்.
1. வீடு வீட்டுமனை மற்றும் நிலம்
2. தொழிற்சாலை வணிகவளாகம் தியேட்டர் கடைகள் மற்றும் பண்ணைகள்
3. கார் பஸ் வேன் லாரி டிராக்டர் முதலான நான்கு சக்கர வாகனங்கள்
4. ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள்
5. லாரிகள் மூலமாகச் செல்லும் பலவகைப் பண்டங்கள்
6. நவீன மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்
7. தங்கம் வைரம் வெள்ளி பிளாட்டினம் மற்றும் அவற்றாலான ஆபரணங்கள்
8. அனைத்து வகையான கட்டுமானப் பொருட்கள்
9. வீடு கடைகள் முதலானவற்றின் வாடகைகள்
10. தனியார் மருத்துவமனைக் கட்டணங்கள் (மருந்துப் பொருட்கள் நீங்கலாக)
11. தனியார் கல்வி நிறுவனக் கட்டணங்கள்
BANK TRANSFER STATEMENT --- BTS முறை ----விளக்கம்
எடுத்துக்காட்டாக ஒருவர் ரூ 50 இலட்சத்துக்கு ஒரு வீட்டை வாங்குகிறார் என்றால் அவரது கோரிக்கையின் பேரில் அத்தொகை அவரது வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்பட்டு விற்பவரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட வங்கி பரிமாற்றச்சீட்டினை அவர்பெற்று பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே பத்திர பதிவு நடைபெறும்.
ஏக்காரணத்தை முன்னிட்டும் நேரடி பண வரவுசெலவு ஏற்றுககொள்ளப்படமாட்டாது.
வங்கி பரிமாற்றச்சீட்டில் வாங்குபவர் மற்றும் விற்பவர் ஆகியவர்களின் பெயர்கள் கணக்கு எண்கள் அவரவர் கணக்கில் கழிக்கப்பட்ட மற்றும் கூட்டப்பட்ட விவரங்கள் ஆகியன அடங்கியிருக்கும்.
தொடர்வேன்……..
நடு நிசியில் தான் சுதந்திரம் வாங்கினோம் சரி,
ReplyDeleteவிடியலுக்கான ஒரு பதிவும் நடு நிசியில் ....
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா
ReplyDelete