Sunday, 1 September 2019

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் நான்காவது “இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்” வருக! வருக!!



கணினித் தமிழ்ச் சங்கம்புதுக்கோட்டை
இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் - 4 


இடம் – ஜெஜெ.கல்லூரி சிவபுரம், (மதுரைச்சாலை) புதுக்கோட்டை
நாள்- அக்டோபர்-12,13 சனி,ஞாயிறு காலை 9மணி – மாலை 5மணி
(அழைப்பிதழ் விரைவில், இது ஒரு முன்தெரிவிப்பே)

 பங்கேற்பாளர்கள் இணைய இணைப்புடன் கூடிய செல்பேசி / மடிக்கணினிகொண்டுவருதல் நல்லது. 
மற்றவர்க்கு செய்துதர முயற்சி செய்வோம்
இரண்டுநாள் மதியஉணவு, கையேடு, தேநீர்ச் செலவுக்காக 
ரூ.200 (மாணவர்க்கு ரூ.100) நன்கொடை வரவேற்கப்படுகிறது.

பங்கேற்பாளர் விவரம் தந்து முன்பதிவு செய்தல் அவசியம்

தலைமை
முனைவர் நா.அருள் முருகன் அவர்கள்
கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர்
(இணைஇயக்குநர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை)

தொடக்கவுரை
முனைவர் .இராசேந்திரன் அவர்கள்
ஆசிரியர் - கணையாழி – இலக்கிய இதழ்
(மேனாள் துணை வேந்தர் –தமிழ்ப்பல்கலைக் கழகம்) 

முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர்
திருமிகு நா.சுப்பிரமணியன் அவர்கள்,
செயலர் ஜெ.ஜெ.கல்விக் குழுமம், புதுக்கோட்டை
முனைவர் ஜ.பரசுராமன் அவர்கள் 
      முதல்வர்ஜெ.ஜெ.கலைஅறிவியல் கல்லூரி       
முனைவர் கு.தயாநிதி அவர்கள்
       தமிழ்த்துறைத் தலைவர்

---------- பயிற்சியளிக்கும் கணித்தமிழ் வல்லுநர்கள் --------
முனைவர் மு.பழனியப்பன் காரைக்குடி,  திண்டுக்கல் தனபாலன்சிவ.தினகரன் காஞ்சி, தி.ந.முரளிதரன் சென்னை பிரின்சு என்னாரெசுப் பெரியார் சென்னை, நீச்சல்காரன்சென்னை, எஸ்.பி.செந்தில்குமார் மதுரை,  முனைவர் பா.ஜம்புலிங்கம் தஞ்சாவூர்,கரந்தை ஜெயக்குமார், மற்றும் 
புதுக்கோட்டை நண்பர்கள் - 
யு.கே.கார்த்திகஸ்தூரிரெங்கன்எஸ்.இளங்கோ, புதுகை செல்வா,  த.ரேவதி,ஸ்ரீமலையப்பன்காயத்ரிஉதயகுமார், திவ்யபாரதி

-------------------ஒருங்கிணைப்பாளர்கள்-------------------
நா.முத்துநிலவன்ராசி.பன்னீர்செல்வன்மு.கீதா, இரா.ஜெயலட்சுமிகு.ம.திருப்பதி,எஸ்.டி.பஷீர்அலிமகா.சுந்தர்.மாலதி, கே.ஸ்டாலின் சரவணன்சு.மதியழகன்மைதிலி,தென்றல்பொன்.கருப்பையா மீரா.செல்வக்குமார், சோலச்சி. என்.கே.சூரியா
----------------------------------------------
ஒருங்கிணைப்பில் இணைந்து பணியாற்ற விரும்பும் புதுகை நண்பர்களோ, பயிற்சிமுகாமில் பயிற்சி தர விரும்பும் வல்லுநர்களோ விவரம்தெரிவித்தால் அவசியம் பயன்படுத்திக் கொள்வோம். 
வருக வருக!

பயிற்சிக் கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்காக உதவிசெய்ய, பங்களிக்க விரும்பி நன்கொடை தர விரும்புவோர் நமது ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா அவர்களை தொடர்பு கொண்டு நன்கொடை தந்தால் மிகவும் மகிழ்வோம். வழக்கம் போல முகாம் முடிந்து, வரவு செலவு விவரம் இங்குத்தரப்படும்

இணையத் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் விவரம்
(1)  கணினியில் தமிழ் எளிய அறிமுகம் –
(2)  இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் வாய்ப்பும் – உரை –
(3)  வலைத்தளங்களில் செய்யவேண்டியதும், செய்யக் கூடாததும்
(4)  தமிழில் வலைப்பக்கம் (Blog) உருவாக்கம் விரிவாக்கம் –
(5)  தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல்
(6)  தமிழில் புலனம் (whatsaap) செயல்பாட்டுப் பயிற்சி -
(7)  தமிழில் முகநூல் (FaceBook) செயல்பாட்டுப் பயிற்சி –
(8)  தமிழில் இன்ஸ்டாகிராம் செயல்பாட்டுப் பயிற்சி –
(9)  தமிழில் சுட்டுரை(Twitter)செயல்பாட்டுப் பயிற்சி –
(10)          ,இணைய (Online) வணிக வாய்ப்புகளும் ஏய்ப்புகளும் –
(11)          தட்டச்சு செய்யாமலே குரல்வழிப் பதிவேற்றுதல் -
(12)          மின்னூல் (E.Book) / இலவசப் பதிவிறக்கம் பற்றிய தகவல்கள் 
(13)          கிண்டில் (Kindle) படித்தல்பதிவிறக்கிச் சேமித்தல்
(14)          படைப்புகளை You-Tubeஇல் ஏற்றுதல் செயல்பாட்டுப் பயிற்சி-
(15)          மின்-சுவரொட்டி (Flex) தயாரித்தல்செயல்பாட்டுப் பயிற்சி -  
(16)          பார்க்க வேண்டிய குறும்படங்கள் (மாலை,இரவு) 

இவைபற்றிய கையேடுகள்  இலவசமாக வழங்கப்படும்
(இந்த முயற்சியை நமது வலைச்சித்தர்
திண்டுக்கல் தனபாலன் மேற்கொண்டு வருகிறார்.)
---------------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவு பார்த்து, புதுக்கோட்டையின் புகழ்வாய்ந்த ”எம்.எஸ்.ஸ்க்ரீன்ஸ்” ஆசிரியர் எம்.எஸ்.ரவி அவர்கள் தொடர்பு கொண்டு, “நான் ஃபோட்டோ ஷாப் வழியாக எப்படி போஸ்டர்கள் வடிவமைப்பது என்பது பற்றிச் சொல்கிறேன்” என்று சொன்னார். நமது அமைப்புகளில் எப்படியும் மாதம் 4,5கூட்டங்கள் நடக்கின்றன. அவற்றுக்கு அழைப்பிதழ், போஸ்டர்கள் வடிவமைக்க நாமே தெரிந்து கொண்டால் எவ்வளவு நல்லது என்று தோன்றியது! எனவே அவரது யோசனையைப் 
பயிற்சி முகாமில் செயல்படுத்தலாம் என்பதுஎன்கருத்து 
– நா.மு., 01-09-2019 இரவு 10.20

--------------------------------------------------------------------------------------------------------------

ஒரு வேண்டுகோள்...
இதைப் படிக்கும் நண்பர்கள். 
தமக்குத் தொடர்புள்ள சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து
இணையத்தமிழ் வளர்ச்சிக்கு
 உதவிடவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணையத்தால் இணைவோம்!
---------------------------------------
மேற்காணும் தலைப்புகளே அன்றி வேறு தலைப்புகளும் அவசியம் கற்பிக்கப்படவேண்டும் என்று கருதுவோர், அதுபற்றிய தகவல்களோடு, வணிகநோக்கிலன்றி வந்து கற்பிக்கத் தக்க வல்லுநர் விவரங்களையும் தந்துதவ அன்புடன் வேண்டுகிறேன், வணக்கம்.
----------------------------------------------------------
நமது முந்திய பயிற்சி முகாம்களைப் பற்றி அறிய -
--------------------------------- 
பயிற்சி முகாம் தொடர்பான மேல்விவரம் அறிய 

        மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com,
        செல்பேசி எண்கள்-
நா.முத்துநிலவன் 9443193293,    கவிஞர் மு.கீதா-9659247363 
---------------------------------------------

Thursday, 20 September 2018

சில கழிப்புகளும் ஒரு நிர்வாணமும்




முதலாளி போகச் சொல்லிவிட்டார் என்பதால்காரணம் ஏதும் கேட்காமலே அந்த வீட்டுக்குச் சென்றேன்.
அது ப வடிவிலான வாடகைக் குடியிருப்பு. மதிய நேரத்து அமைதியில் சிலோன் ரேடியோவின் ஒலிச்சித்திரம் தவழ்ந்து கொண்டிருந்தது . மெல்லிய புகையோடு கலந்த சாம்பார் வாசம் பசியைக் கிளப்பியது 

மையத்தில் இருந்த பெரிய வேப்ப மரத்தடியில் சைக்கிளை சாத்திவைத்தேன் (ஸ்டான்ட் பழுது). வேப்ப மரத்தின் பூக்கள் உதிர்ந்து கம்பளமாய் கிடந்தன. உணவுநேரத்து காக்கைகள் வந்து கூடியபடி கரைந்தன .

வேட்டியை இறக்கி சரிசெய்து கொண்டு வலது பக்கம் இருந்த மூன்றாவது வீட்டைப் பார்த்தேன். ஏற்கனவே அந்த வீட்டுக்கு நான் வந்திருக்கிறேன். அது நெல்லுக்கடை சண்முகம் என்பவரின் வீடு. அவர் நான் வேலைபார்த்த துணிக்கடை முதலாளியின் நண்பர்



  பள்ளியிறுதி வகுப்பு முடித்துவிட்டு துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டேன்.பள்ளியிறுதியில் நான் மாவட்ட முதலிடம் பெற்றிருந்தாலும் வீட்டுக்கு அரிசி பருப்புக்காக  நான் வேலைக்குப் போகவேண்டியிருந்தது.அந்த ஒருவருட காலத்திற்குள்ளேயே  முதலாளி குமாரண்ணனிடம் எனக்கு ரொம்ப நல்லபெயர்.  முதலில் விற்பனைக்கவுண்டரில் நின்ற நான்  அப்போது கல்லாவிற்கு அருகில் உட்கார்ந்து  பில் போடவும் கணக்கு எழுதவும் ஆரம்பித்திருந்தேன். மதுரைக்கு  கொள்முதல் செய்யச செல்வது முதல் பண்டிகை சீசனில் கடையின் விளம்பர வாசகம் அமைப்பது, டெய்லரிங் பிரிவில் தயாராகிக்கொண்டிருக்கும்  ரெடிமேடு ஆடைகளின் கணக்குகளை பராமரிப்பது வரை எல்லாம் என் பொறுப்பில்தான்.  விற்பனைவரிக் கணக்குகளை எழுதி நானே அலுவலகத்துக்கும் எடுத்துச் சென்று முடித்துக்கொண்டு வந்துவிடுவேன். 

  அப்போது ஊரிலிருந்து பனிரெண்டு கிமீ சைக்கிள் மிதித்து கடைக்குப் போய்க்கொண்டிருந்தேன். மதியத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்து பக்கத்து மெஸ்ஸில் ஜனதாசாப்பாடு.

  நாளடைவில் முதலாளி தான் மதியச்சாப்பாட்டிற்கு வீட்டுக்குப் போகும்போது என்னையும் கூட்டிக்கொண்டுபோனார். இருவருக்கும் மனைப்பலகை போட்டு தட்டுவைத்து  சுற்றிலும் வெஞ்சனக்கிண்ணங்களை அழகாகக் அடுக்கி கவிதை போல் உணவு பரிமாறுவார் ராதாண்ணி. முதலாளி குமாரண்ணனின் அம்மா ஷோபாவில் உட்கார்ந்துகொண்டு என்னை நன்றாக சாப்பிட வைக்குமாறு மருமகளிடம் சொல்லிக்கொண்டிருப்பார். மதிய வேளைகளிலும்  கடையில் தங்கும் இரவுகளிலும் முதலாளி வீட்டில்தான் சாப்பாடு.;

  (வீட்டுக்குவந்து அம்மாவிடம் முதலாளி வீட்டில் சாப்பிட்டுக்கொள்வதைச் சொன்னால்“ஐயையே…. அடுத்த வீட்டுலபோயி தட்டுல சாப்புடுறியா…  அவுக எலையில போட்டா என்னவாம் …” என்று முணுமுணுக்கும்.. )

    எனக்கு மட்டும் முதலாளிவீட்டு உபசரிப்பு கிடைப்பதில் கடையின் மற்ற பணியாளர்களுக்கு கொஞ்சம் பொறாமைதான்.

    முன்றாவது வீட்டு வாசலில் போய் நின்றேன். ஆழகான மாக்கோலத்தின் மேல் சைக்கிள் தடம். வரந்தாவில் மூங்கில்பட்டைக்கதவு சாத்தியிருந்தது.

  “ அக்கா……”  கூப்பிட்டேன்.

   “வாப்பா……வாப்பா” அருணாக்கா, நெல்லுக்கடை  சண்முகத்தின் மனைவி உள்ளேகூப்பிட்டாங்க.

    “குமாரண்ணன் வரச்சொன்னாங்க…..”

        “  ஆமாப்பா  வா ..”

    கூடத்தில் ஒரு  ;பாயை மடித்துப்போட்டு உட்காரச்சொன்னாங்க.

உள்ளே போய் ஒரு துணிக்கடை பார்சலை எடுத்து வந்து என்னிடம் கொடுத்துவிட்டு

மீண்டும் அறைக்குள் செல்ல,கையிலிருந்த பார்சலைப்பார்த்தேன். அது எங்கள் கடையில்வாங்கியதுதான் . 

     ‘ இதுல என்ன இருக்கு’ 

      அதற்குள் வெளியே வந்த அருணாக்காவின் கையில் இருந்ததைப் பார்த்ததும் எனக்கு குழப்பமும் லேசான பதட்டமுமாக இருந்தது.  ஒரு சீயக்காய் பொட்டலம்,ஒரு தேன் பாட்டிலில் நல்லெண்ணெய்,சாம்பிள் குளியல்சோப்,ஒரு துண்டு ஆகியவற்றை என்னிடம் நீட்டி

    “ தம்பி…  போயி.. பக்கத்துல ஒரு குளம் இருக்குல்ல…அதுல எண்ணெய்வச்சு குளிச்சுட்டு,அதுல புது வேட்டிசட்டை இருக்கு அதக் கட்டிக்கிட்டு வா….”

        ‘ இந்த மத்தியான நேரத்தில போய் குளிக்கச் சொல்றாங்களே …..நம்மள எதுக்கு இவுங்க குளிக்கச்சொல்லணும்….’ கையில் இருக்கும் பொருள்களோ குழப்பின.

   ’நமக்கு எதுக்கு இவுங்க வேட்டி சட்டை எடுத்துக் கொடுக்கணும்.’.

           

              இரண்டு முன்று தடவை அந்த வீட்டுக்கு நான் போயிருக்கிறேன். முதலாளி சேலைகள்   காண்பிக்க அனுப்பியிருக்கிறார். மற்றபடி அந்தக் குடும்பத்தோடு எனக்கு எந்தவித உறவும் இல்லை.

       அதுவும்  வீட்டுக்கு ஒருவனை வரச்சொல்லிக் கூப்பிட்டுவிட்டு அவனை  குளித்துவிட்டு வா என்று சொன்னால் என்ன பொருள் . வாரந்தாவில் நின்றவாறே வெளியே .பார்த்தேன்

   யாரும் இதை பார்த்ததாய் தெரியவில்லை.;

        ஒரு அரை மணி நேரத்திற்கு முன்புதான் முதலாளி குமாரண்ணன் என்னை கல்லாவருகே வருமாறு சைகை செய்தார். பெரும்பாலும் சத்தமாக பேர்சொல்லி வாஞ்சையான  குரலில் என்னை அழைப்பவர்.

        அருகே சென்றேன். இன்னும் அருகே அழைத்தார் . அருகே நின்று குனிந்தேன்.

  “ என்னங்கண்ணே….”

   “ நம்ம நெல்லுக்கடை சண்முகம் வீட்டுல  ஏதோ விஷேசம் போலருக்கு….” நிறுத்தினார்.

  “ சரிங்கண்ணே…..”

   “ ஒன்னய சாப்பிட வரச்சொன்னார்.  போயி சாப்பிட்டுட்டு வந்திரு… சரியா”

    அங்கு  விஷேசத்திற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. வீட்டில் அருணாக்காவைத் தவிர யாரும் இல்லை.    நான் என்ன ஏதென்று திர்மானிப்பதற்குள் அருணாக்கா,

   “ என்னப்பா நின்னுக்கிட்டு இருக்கே… குளிச்சிட்டு  வந்திரு” என்றார்

முதலாளி குமாரண்ணன் சொல்லிவிட்டார் என்ற ஓரே காரணம் தயக்கத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் ஒதுக்கி சைக்கிளை நோக்கி நடக்கவைத்தது .சைக்கிள் கேரியரில்துணிப் பார்சலை செருகிவிட்டு குளத்துக்கு ஓட்டினேன்.


துவட்டிய தலையை விரல்களாலேயே படிய வைத்துக்கொண்டு புது வேட்டி சட்டையை அணிந்துகொண்டு மீண்டும் அருணாக்கா வீட்டில் நுழைந்தபோது அங்குசண்முகம் வந்திருந்தார்.

 “வா பன்னீரு வா” சிரித்த முகத்தோடு அழைத்தார் “நேத்து குமாருக்கிட்டே சொல்லிட்டு வந்தேன் ஒன்ன வரச்சொல்லி …. உள்ள வந்து ஒக்காருப்பா”

கூடமெல்லாம் ஒரே சாம்பிராணி புகை . சட்டையைக் கழட்டிவிட்டு இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டார்

   “அருணா.. எல்லாம் ரெடியா.. சாமி கும்பிடலாமா”

“சரிங்க.. தம்பியை பூஜையறைக்குள்ள கூட்டியாங்க”

என் தோளில் கை வைத்து பூஜையறைக்குள் கூட்டிச் சென்றார் சண்முகம். ஒரு புதுத்துண்டைப் பிரித்து என் இடுப்பில் கட்டிவிட்டார். பூஜையறை மேடையில் பெருந்தெய்வங்களிலிருந்து சிறுதெய்வங்கள் வரை ஏகப்பட்ட சாமி படங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

“ ஓங்கையாலே பூஜை பண்ணனும்னுதான் ஒன்ன வரச்சொன்னேன் நல்லா வேண்டிக்கிட்டுசெய்யுப்பா “



  எதிரே ஒரு பெரிய தட்டில் தேங்காய் பழங்கள்  படையல் போடுவதற்கு தயாராக பிரித்து வைக்கப்பட்டிருந்த வாழை இலைகள் ஒவ்வொரு படத்திற்கும் முன்னால் புகைந்து கொண்டிருந்த ஊதுபத்திகள் மூன்று பித்தளைப் பானைகளில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் .  நடக்கின்ற செயல்களின் காரணம் ஏதும் புரியாத குழப்பத்தோடு அவரைப்பார்த்தேன்.

அவரின் முகத்தில் இருந்த கனிவும் அதில் நான் உணர்ந்த முதலாளி குமாரண்ணனின் சொல்லும் மறுப்பேதுமின்றி அவர் சொல்லியபடி செய்ய வைத்தன.

 பொங்கலை படையல் பரிமாறி பழம் உரித்துவைத்து சாம்பிராணி தூபத்தில் தேங்காய்களைக்காட்டி உடைத்துவைத்தேன் .அருணாக்கா அருகில் நின்று மணியடித்துக்கொண்டிருந்தார். தட்டில்  விபூதிக்கு நடுவே சூடம்வைத்து சண்முகம் நீட்டினார். அனைத்து படங்களுக்கும் தீபாராதனை செய்து விட்டு அவர்களிடம் நீட்டினேன்.

இருவரும் தீபம் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டனர்.

“நீ பூசிக்கிட்டு எங்களுக்கும் விபூதி கொடுப்பா”

கொடுத்தேன். இருவரும் வாங்கிப் பூசிக்கொண்டார்கள். சாமி படங்களைக் கும்பிட்டுவிட்டு என்னைப் பார்த்து மிகுந்த பயபக்தியுடன்  குனிந்து வணங்கினார்கள் . ஏதோ நடக்கிறது என்பது மடடும் புரிந்தது..

கூடத்தில் பாய்போட்டு உட்காரவைத்து அருகிலேயே அமர்ந்துகொண்டு அருணாக்கா உணவு பரிமாற எதிரே சண்முகம் உட்கார்ந்துகொண்டார்.

சாம்பிராணி புகையை வெற்றிகொண்ட முருங்கைக்காய் சாம்பாரின் வாசமும் சுவையும் கபகபவென சாப்பிடவைத்தாலும் காரணம் புரியாத அந்தச்  சூழலும்  அருகிலேயே அவர்கள் உட்கார்ந்துகொண்டு உபசரித்ததும் மிகுந்த கூச்சத்தை ஏற்படுத்தின.

சாப்பிட்டு முடித்ததும் அவ்விடத்தைவிட்டு கிளம்பினால் போதும் என்று புறப்பட்டபோது சண்முகம் என் கையைப்பிடித்து கொடுத்தார்  வெற்றிலைப் பாக்குடன்  ஒரு நூறு ரூபாய் தாள். (அப்போது கடையில் எனது ஒரு மாத சம்பளம் அறுபது ரூபாய்.) அப்படியே கையை மூடியபடி, சைக்கிளேறி கடைவந்து சேர்ந்த போது முதலாளி குமாரண்ணன் சாப்பிடப் போயிருந்தார்.



ந்தமான மதிய நேரமென்பதால் வாடிக்கையாளர்கள் இல்லை. கவுண்டருக்குள் உட்கார்ந்திருந்த சேல்ஸ்மேன் மண்டைமணி நமட்டுச் சிரிப்போடு  குறுகுறுவென என்னையே பார்த்துக்கொண்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
‘நான் எங்கே போய்விட்டு வருகிறேன் என்பது அவனுக்கு தெரிந்திருக்குமோ’
உடுத்தியிருந்த புதுவேட்டியும் சட்டையும் என்னவோ செய்தது.

“என்னடாப்பா…வேட்டி சட்டை புதுசு போலருக்கு..”

சந்தேகமே இல்லை மண்டைமணிக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்பதை அந்த ஜாடைப்பேச்சு உறுதி செய்தது.அதைப் புரிந்துகொண்டவுடன் வியர்த்து உள்ளே பனியன் நனையத்தொடங்கியது.ஒருவாறு பதட்டத்தை வெளிக்காட்டாமல் உள்ளே வந்த வாடிக்கையாளருக்கு கைலிகளை எடுத்துப் போட்டேன்.

கணக்கப்பிள்ளை கணபதியை மெல்ல தோள் மீது கை வைத்து உள்ளறைக்குள் கூட்டிக்கொண்டுப் போய் மண்டைமணி கிசுகிசுப்பாக ஏதோ சொன்னான். அவன் என்னைப்பற்றித்தான்  சொல்லியிருக்கிறான் என்பது கணபதி வெளியே வந்ததும் ஏன்னை ஏற இறங்க பார்த்ததிலேயே தெரிந்தது.

மெல்ல மெல்ல குறுக ஆரம்பித்தேன். வெளியே ஓடி நகர் கடந்து வனம் கடந்து மலை கடந்து கடல் கடந்து ஒதுங்கிக் கிடக்கும் ஒரு தீவின் இருட்குகைக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் போலிருந்தது.
என்னவோ கேலிக்குரிய ஒன்று நடந்து விட்டது போல் தெரிந்தது.

முதலாளி குமாரண்ணன் புது சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் நுழைந்து கல்லாவில் உட்கார்ந்தார்.அவரிடம் சென்று நடந்தையெல்லாம் சொல்லிவிடவேண்டும் என்று நினைத்து   அவரைப்பார்த்தபோது அவர்

‘போய் வந்து விட்டாயா ….சரி  சரி ..’என்பது போல் ஆமோதிப்பாய் தலையை அசைத்துபுன்னைகத்துவிட்டு கொள்முதல் இரசீதுகளை எடுத்துக்கொண்டு குனிந்து விட்டார்.

அது பற்றி ஏன் குமாரண்ணன் என்னிடம் விரிவாக விசாரிக்கவில்லை என குழப்பமாயிருந்தது.அவர் தானே அனுப்பினார். ஓன்றும் புரியாமல் குழப்பத்தோடு வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தேன்.

டெய்லர்கள் அறையின் உள்ளேயிருந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார்சண்முகண்ணன்.;. கொள்முதலுக்கு மதுரை சென்றிருந்தவர் வந்துவிட்டார் போலும். நான் உள்ளே போகாததால் தெரியவில்லை.



 என்னைப்பார்த்ததும் அவர் முகம் இறுகிப்போனது. கண்களில் கோபத்தின் கூர்மை.ஓரு மணி நேரத்திற்கு மேலாகியும் என்னொடு பேசவில்லை.



  இந்த சண்முகண்ணன்; அசோகாசண்முகசுந்தரம் என்றபெயரில் அனந்தவிகடன்இதழில் அறிமுகஎழுத்தாளர்  பகுதியில் தன்சிறுகதை மூலம் அறிமுகம்  ஆனவர்

எழுபதுகளின் முன்பாதியில் வெளியான அந்தப்பகுதியில்தான் இந்துமதி சிவசங்கரி மாலன் பாலகுமாரன் சுப்ரமணியராஜீ ஆகியோரும் அறிமுகம் .ஆகியிருந்தார்கள்



  என்னை இலக்கியத்தை நோக்கி இழுத்ததும் கதை கவிதை எழுத வைத்ததும்
அவர்தான். புகலெல்லாம் கடைவியாபாரத்தை கவனித்துவிட்டு இரவில் தூக்கம் விழித்து இலக்கியம் பேசித்திரிந்த நாட்கள் அவை.



 கவுண்டரில் ஆள் இல்லாத நேரத்தில் என் முகத்தை நேராகப் பார்த்து ‘உள்ள வா’என்றவாறு உள்ளே போனார். மெல்ல குறுகியபடி உள்ளே போனேன்.


‘’மத்தியானம் எங்கடா போன..”



“குமாரண்ணன்தான் போகச் சொன்னார்.. நெல்லுக்கட சண்முகம் வீட்டுக்கு”



“ஏன் நம்ம வீட்டுல சோறு திங்க வழியில்லையின்னு போனியா .. இல்ல உடுத்திக்க துணியில்லையின்னு போனியா …”



வியர்த்து வெடவெடத்துப்போய் பேசாமல் நின்றேன்.



“என்னடா பேசாம நிக்கிற …சொல்லு ‘‘



“எனக்கிட்ட ஒண்ணுமே சொல்லல ..அவங்க வீட்டுல விஷேசம்..ஒன்ன வரச்சொன்னாங்க போயிட்டு வா’ன்னார் ..அங்க அவங்க சாப்பாடு போட்டு வேட்டிசட்டை தந்தாங்க.. “



“ஓடனெ ஒக்காந்து சாப்பிட்டுட்டு.. வாங்கிட்டு வந்திட்டியாக்கும்”



புக்கவாட்டில் பார்த்தபடி பேசாமல் நின்றேன். சண்முகண்ணன் தொடாந்தார்



“எதுக்காக அப்படி செஞ்சாங்கன்னு தெரியுமா …?”



‘தெரியலண்ணே”



“நெல்லுக்கடை காரருக்கு வரவுசெலவு படுத்துருச்சு… என்ன ஏதுன்னு ஜோசியம்பார்த்திருக்காரு … ஜோசிய காரன்தான் இதைச் சொல்லியிருக்கான்…”



சொல்லி முடிக்காமல் என்னையே பார்த்தார் . பிறகு வேறு பக்கமாய் பார்த்துகொண்டே



“ ஏதோ செய்வினை விழுந்திருக்குன்னு சொல்லி தள்ளுப்பட்ட சாதிக்காரன் ஒருத்தனைநடுவீட்டுக்குள்ளே கூட்டியாந்து பூஜை பண்ண வைச்சு சாப்பாடு போட்டு துணி எடுத்து கொடுத்தா சரியாயிடும்னு சொல்லியிருக்கான்”



அவமானத்தில் அப்படியே குறுகிப்போய் தரையோடு தரையாய் கிடந்தேன் ..ஏழுமலை தாண்டி ஏழுகடல் தாண்டி பறந்து போய் ஒரு வனாந்திர காடடுக்குள் புதைந்துவிட வேண்டும் போலிருந்தது.



அழுகை வெடித்துக்கொண்டு வரப்பார்த்த வேளையில் வயிற்றுக்குள் சுழன்றவாறு குமட்டல்வந்து அதை தடுத்தது. சட்டை தொப்பலாய் நனைந்து போனது.

கடைக்குள் வாடிக்கையாளர்கள் வரவே “சரி சரி போய் கவுண்டரில் நில்லு” சண்முகண்ணன் உள்ளே நகர்ந்தார்.

இயந்திரகதியில் ஒப்பித்தபடி வியாபாரத்தைக் கவனித்துவிட்டு துணிகளை மீண்டும் ஏற்றிய போது அருகில் வந்து தோளில் கை வைத்தார் சண்முகண்ணன்.



“ஒரு வழியா அவங்கெ பாவத்தையெல்லாம்  ஒம் மேல கழிப்பு கழிச்சு விட்டுட்டாங்கெ…. இனிமே இப்படி என்ன ஏதுன்னு தெரியாம எங்கயும் போகாத…ஆமா..” சொல்லி விட்டு உள்ளே நகர்ந்தவர் கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தார்.



 “சரி சரி வா.. டீ குடிச்சுட்டு வரலாம். “



போனோம்.  இருவரும் ஏதுவும் பேசிக் கொள்ளவில்லை.



குடித்து முடித்து கிளாஸை வைத்துவிட்டு அருகில் கிடந்த மாலை செய்தித்தாளில்

எம் ஜி ஆர் கூட்டத்தில் பேசிய செய்தி ;சிவாஜியின் திரிசூலம் பட விளம்பரம் எல்லாம் பார்த்து விட்டு  சிறிது நேரம் கழித்து சண்முகண்ணனிடம்; கேட்டேன்.



“ஏண்ணே..நம்ம சாப்பிட்டதால அவங்க பாவமெல்லாம் போயிரும்னா அது நமக்கு புண்ணியம்தானே..”



கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தவர் என் முகத்தைப் பார்த்தார்

“ ஏதோ அப்படி ஆனா தேவலைதான் ..”



தேநீர்க்கடையில் இருந்து திரும்பினோம்.  ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு வேலையில் ஈடுபட ஆரம்பித்தேன்.


ன்று இரவு கடையில் இருப்புக்கணக்கு எடுக்கும் வேலை இருந்தது.
“பன்னீரு.. இன்னைக்கு நீ ஊருக்கு போக வேணாம்.. வீட்டுல போயி சாப்புட்டுட்டு எனக்குசாப்பாடு எடுத்துகிட்டு வந்துரு..”

“சரிங்கண்ணே”

பகலில் நடந்த எதுவுமே நினைவில் இல்லாதது போல் படு பாந்தமாக பேசினார்.கடை சைக்கிளில் டிபன் கேரியரைக் கட்டிக்கொண்டு முதலாளி வீட்டுக்குச் சென்றேன்.

‘செல்வியக்கா..செல்வியக்கா”

சமையற்கார செல்வியக்கா கூடத்திற்குள் வந்தாள்.

“அக்கா குமாரண்ணன் சாப்பாடு எடுத்துக்கிட்டு வரச் சொன்னாங்க இன்னக்கி கடையில நைட்டு வேலை .. ஸ்டாக் எடுக்கிறோம்.”

‘ நீ சாப்பிடுறியா..”

“ம.. சீக்கிரம் சாப்பாடு வை”

அலமாரியில் இருந்த ஒரு சில்வர் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு கூடத்தில் உட்கார்ந்தேன்.

‘இன்னும் சமையலறைக்குள்ளேயே நின்னுக்கிட்டு என்ன பண்ணுது இந்தக்கா..’

“ செல்வியக்கா .. நேரமாச்சு.. குமாரண்ணன் பசி தாங்கமாட்டார்.. சீக்கிரம் சாப்பாடு வை.”

அதற்குப் பிறகும் கொஞ்சம் நேரங்கழித்து மெல்ல அசைந்து ஒரு தயக்கத்துடன் வந்தாள் செல்வியக்கா.

“பன்னீரு.. தட்டை வைச்சுட்டு பின்னாடி தோட்டத்துல போய் ஒரு இலை வெட்டியா..”

“சட்டென நல்ல காய்ச்சல் அடிக்கிறபோது கண்ணெல்லாம் எரியுமே.. அப்படி எரிந்தது..”

வெட்டுக் கத்தியை நீட்டினாள்

தட்டை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு தோட்டத்துக்கு போனேன்.

இலையைப் போட்டு உட்கார்ந்து கொண்டு செல்வியக்கா கையிலிருந்த தண்ணீருக்காக கைகளை நீட்டினேன்.

“இங்க வா” சொல்லிக்கொண்டே வெளிப்பக்கமாய் போனாள். உட்கார்ந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன். நியூஸ்பேப்பர் செருப்பெல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வராந்தாவில் போய் நின்று கொண்டு கையக் காட்டி அழைத்தாள்.

“இங்க… வா”

மெல்ல எழுந்து மெல்ல இலையை மெல்ல எடுத்தக்கொண்டு மெல்ல நடந்து மெல்ல போய் மெல்ல வராந்தாவில் மெல்ல உட்கார்ந்தேன்.அதற்குள் மூன்று தடவை கால் தடுக்கியிருந்தது .

“அம்மாவும் அண்ணியும் எங்கே…” எப்போதும் நான் சாப்பிடும் போது மகிழ்ச்சியாய் பேசிக்கொண்டிருப்பார்களே….

“அவங்க ரெண்டு பேரும் ரூமுக்குள்ளே இருக்காங்க…அம்மாதான் உனக்கு இங்க வச்சு போடச்சொன்னாங்க” செல்வியக்காவின் குரல் உடைந்திருந்தது. அல்லது நான்தான் அப்படி நினைத்துக்கொண்டேனோ…

             பறிமாறினாள். இலை நிறைத்துப் பறிமாறியிருந்தாள் . கண்கள் எரிந்தன.. கால்களால் அந்த இலைச்சாப்பாட்டை அப்படியே எட்டி உதைத்து விசிறியடித்தேன்.
கண்களைத் தேய்த்துக்கொண்டேன். இலை நிறைத்துப் பறிமாறியிருந்தாள். ‘அம்மாதான் சொல்லியிருக்கிறார்கள் .. நாம் ஏதும் செய்தால் சங்கடப்படுவார்கள்;   மெல்ல பிசைந்து சாப்பிட ஆரம்பித்தேன் தாட்களை தூளாய் நறுக்கிப்போட்டு அதில் தண்ணீரைப் பிசைந்து சாப்பிடுவது போல் இருந்தது.என்ன நினைத்தாளோ செல்வியக்கா தேவைக்கு அதிகமாகவே குழம்பை ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“ஏம்பா.. பன்னீரு ரொம்ப நல்ல பிள்ளையா இருக்கான்ல இப்படி  ஒரு பையன் கிடைக்கிறது கஷ்டம்” அம்மா சொன்னதாக யாரோ சொன்னது மனதில் கேட்டது.

விக்குவது போலிருந்தது தண்ணீரைக் குடித்துக்கொண்டேன் தண்ணீர் வாய் மீறி வழிந்தது புறங்கையால் துடைத்துக்கொண்டேன் .



“குமாரு பன்னீருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிற ..அறுபதா.. அடுத்த மாசத்துல இருந்து ஒரு எழுபதஞ்சா கொடு கெட்டிக்காரப் பய”



கால்வாசி சாப்பிட்டு முடித்திருந்தேன்.

“கடையோட எல்லா கணக்கு வழக்கையும் பார்த்துக்கிறானாமே ஆபிஸ்ல போய் வரிக்கணக்கெல்லாம் சரி பண்ணிருவானாமே..”

செல்வியக்கா டம்ளரில் தண்ணீரை ஊற்றினாள்.

“இந்த வயசுலயே மதுரைக்கு ஒத்த ஆளா கொள்முதலுக்கு போறானாமே”



பாதி சாப்பாடு கூட முடியவில்லை.



“இந்த வருஷம் தீபாவளிக்க நல்ல வியாபாரம்னா அது பன்னீரு வாங்கிட்டு வந்த டிசைன்களாலதான்”



கொஞ்ச நேரத்துக்கு முன் செல்வியக்கா சொன்னது காற்றில் ஈசலாய் பறந்தது

“அம்மாதான் உனக்கு இங்க வச்சு போடச் சொன்னாங்க”



இன்னிக்குதான் வீட்டுல தெரிந்திருக்கும் போல.



என் பசிக்கு வாஞசையான சொற்களோடு அமுது படைத்தவர்



தொடரும்........

















 


1

20.09.2018

Tuesday, 15 May 2018

திருக்கல்யாணம்

திருக்கல்யாணம் 


உடுக்கை உருளும் தாள லயத்தில்
மரகதச் சிரிப்பின் வெளிச்ச இருளில்
நடந்த களவின்
பகல் தடயங்களாய்
கூடல் நகரெங்கும்
காணக்கிடைக்காலம்.....
படமெடுக்கும் கிளிகளும்
பச்சை நல்ல பாம்புகளும்



Monday, 21 November 2016

ஒரு எளிய எழுத்தாளன் / விமர்சகனின் பரிந்துரைகள்

 புதுக்கோட்டை மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது . 26.11.2016 முதல் 04.12.2016 வரை நடைபெறும் இவ்விழாவில் சுமார் 25 பதிப்பகங்கள் கலந்துகொள்கின்றன ஆயிரக்கணக்கான தலைப்புகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் வரவுள்ளன .இது புதுக்கோட்டையில் முதல் முயற்சி

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் அமைக்க ப்பட்டிருக்கும் வரவேற்புக்குழு அற்புதமாக திட்டமிட்டு மிக நேர்த்தியாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது .

இந்த   இனிய தருணத்தில் புதிய இளம் வாசகர்களுக்காக அவர்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய தமிழின்  சிறந்த நூல்களை அறிமுகப்படுத்தி பரிந்துரை செய்வது எனது கடமை என்றே கருதுகிறேன் .

எனது பரந்துபட்ட வாசிப்பனுவத்தின் ஊடாக நான் கண்டடைந்த உன்னதமான வாழ்வியல் பதிவுகளை / அவற்றை தாங்கிய நூல்களை வகைமை வாரியாக இங்கு தந்துள்ளேன் . புதிய / நடப்பு   வாசகர்களுக்கு இது  நல்ல வழிகாட்டுதலாய் இருக்கும்  என்று நம்புகிறேன்

நாவல்கள் 
----------------

இலக்கிய  வாசகத் தளத்தில் இயங்கும் படைப்புகள் 

மாயூரம் வேத நாயகம் பிள்ளை  -  பிரதாப முதலியார் சரித்திரம்
பி ஆர் ராஜம் ஐயர்                                -  கமலாம்பாள் சரித்திரம்
அ . மாதவையா                                       -  பத்மாவதி சரித்திரம்
கு.ப ராஜகோபாலன்                            -  வேரோட்டம்
அநுத்தமா                                                    - கேட்ட வரம்
க நா சுப்பிரமணியம்                         -  பொய்த்தேவு , ஒருநாள் ,
சி சு செல்லப்பா                                       - வாடிவாசல் , ஜீவனாம்சம்
லா ச ராமாமிர்தம்                                  - அபிதா , புத்ர
எம் வி வெங்கட்ராம்                              - வேள்வித் தீ ,நித்ய கன்னி ,                                                                                                                                        காதுகள்
கரிச்சான் குஞ்சு                                      - பசித்த மானிடம்
ரகுநாதன்                                                      - பஞ்சும் பசியும்
தி ஜானகிராமன்                                      - மோகமுள் ,அம்மா வந்தாள்
                                                                                 செம்பருத்தி , மரப்பசு
மு தளைய சிங்கம்                                 - ஒரு தனி வீடு

அகிலன்                                                         - பாவை விளக்கு , சித்திரப் பாவை

ஜெயகாந்தன்                                             - சிலநேரங்களில் சில மனிதர்கள்
                                                                                ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
                                                                                ஒரு நடிகை   நாடகம் பார்க்கிறாள்                                                                                   சுந்தர காண்டம்
                                                                                 கங்கை எங்கே போகிறாள்


இந்திரா பார்த்தசாரதி                        - குருதிப்புனல், சுதந்திர பூமி
                                                                                வேதபுரத்து வியாபாரிகள்

நா பார்த்தசாரதி                                    - குறிஞ்சி மலர்

ராஜம் கிருஷ்ணன்                               -   குறிஞ்சித்தேன் , வளைக்கரம்
                                                                                 பாதையில் படிந்த அடிகள்

கு சின்னப்ப பாரதி                                  - தாகம் , சங்கம்
டி .செல்வராஜ்                                           -   தேநீர் , மலரும் சருகும்
ப சிங்காரம்                                                - புயலிலே ஒரு தோணி
                                                                               கடலுக்கு அப்பால்

நகுலன்                                                         - நினைவுப்பாதை , நாய்கள் ,                                                                                                       வாக்குமூலம்

சுந்தர ராமசாமி                                     - ஒரு புளிய மரத்தின் கதை
                                                                              ஜெ ஜெ சில குறிப்புகள்
                                                                              குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

கி ராஜ நாராயணன்                          கோபல்ல கிராமம்
                                                                            கோபல்லபுரத்து மக்கள்

சா .கந்தசாமி                                         - சாயாவனம் , சூரிய வம்சம்
                                                                           தொலைந்து போனவர்கள்
                                                                           அவன் ஆனது

ஜி ,நாகராஜன்                                      - குறத்தி முடுக்கு ,
                                                                           நாளை மற்றுமொரு நாளே

ஹெப்சிபா சேசுதாசன்                - புத்தம் வீடு

அசோகமித்திரன்                              - அப்பாவின் சிநேகிதர்கள்
                                                                          பதினெட்டாவது அட்சக்கோடு
                                                                         தண்ணீர்
                                                                         கரைந்த நிழல்கள்

நீல பத்மநாபன்                                 - தலைமுறைகள், பள்ளிகொண்ட புரம்                                                                          உறவுகள்,தே ரோடும் வீதி
நரசய்யா                                               - கடலோடி

பொன்னீலன்                                       - கரிசல் ,  புதிய தரிசனங்கள்

ஆ மாதவன்                                           - கிருஷ்ணப் பருந்து ,
                                                                           புனலும்  மணலும்

சு சமுத்திரம்                                        - சோற்று பட்டாளம்
                                                                          வாடா மல்லி
விட்டல் ராவ்                                          - போக்கிடம் ,   நதிமூலம்

தமிழவன்                                                 - ஏற்கனவே சொல்லப்பட்ட                                                                                                       மனிதர்கள்

வண்ண நிலவன்                                 - கடல் புரத்தில்
                                                                           கம்பா நதி
                                                                           ரெயினீஸ் ஐயர் தெரு

பூமணி                                                        - பிறகு
                                                                          வெக்கை
                                                                           அஞ்ஞாடி

நாஞ்சில் நாடன்                                 - தலைகீழ் விகிதங்கள்
                                                                          என்பிலதனை வெயில் காயும்
                                                                          மாமிசபடைப்பு
                                                                          எட்டு திக்கும் மத யானை
                                                                          மிதவை
                                                                         சூடும் பூ சூடற்க

தோப்பில் முகமது மீரான்         - ஒரு கடலோர கிராமத்தின் கதை
                                                                        கூனன் தோப்பு
                                                                        துறைமுகம்
                                                                         சாய்வு நாற்காலி
                                                                     
பிரபஞ்சன்                                          - மானுடம் வெல்லும்
                                                                      வானம் வசப்படும்
                                                                      மகாநதி

ஆதவன்                                               - காகித மலர்கள்
                                                                      என் பெயர் ராம சேஷன்

பாமா                                                      - கருக்கு , சங்கதி

ஆதவன் தீட்சண்யா                   - மீசை என்பது வெறும் மயிர்

சிவகாமி                                              - ஆனந்தாயி
                                                                      பழையன கழிதலும்

சி ஆர் ரவீந்திரன்                           - ஈ ரம் கசிந்த நிலம்
பாவை சந்திரன்                              - நல்ல நிலம்
சூரிய    காந்தன்                             - மானாவாரி மனிதர்கள்
பாவண்ணன்                                    - பாய்மரக்கப்பல்
சுப்ர பாரதி மணியன்                - மற்றும் சிலர்
                                                                       சாயத்திரை
சோ தர்மன்                                        - கூகை
                                                                       தூர்வை

இமையம்                                            - கோவேறு கழுதைகள் ,செவல்
                                                                       ஆறுமுகம் ,

கோணங்கி                                          -  பாழி
                                                                         பிதிரா

தஞ்சை பிரகாஷ்                             - கள்ளம்
                                                                       கரமுண்டார் வீடு

எஸ் .ராமகிருஷ்ணன்                 - உப பாண்டவம்
                                                                       நெடுங்குருதி
                                                                        உறுபசி
                                                                   
ஜெய மோகன்                                 - விஷ்ணு புரம் ,   காடு
                                                                     ஏழாம் உலகம் , கொற்றவை

பெருமாள் முருகன்                       - கூள  மாதாரி
                                                                       மாதொரு பாகன்
                                                                       நிழல் முற்றம்

சு வெங்கடேசன்                            காவல் கோட்டம்

ஜோ டி குருஸ்                                   - ஆழிசூழ் உலகு

திலகவதி                                              -கல்மரம்

ஷோபா சக்தி                                     - ம்
                                                                        கொரில்லா

அழகிய பெரியவன்                   - தகப்பன் கொடி
கண்மணி குணசேகரன்          - அஞ்சலை , கோரை
யுவன் சந்திர சேகர்                     - பகடையாட்டம்
எம் ஜி சுரேஷ்                   - அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்
                                                     அட்லாண்டிஸ் மனிதன்
 ராஜ் கவுதமன்                              - காலச்சுமை
சு வேணுகோபால்                       - நுண் வெளிக்கிரணங்கள்
அன்வர் பாலசிங்கம்                 - நூர்ஜஹான் என்கிற கருப்பாயி


பொது வாசக ரசனைத் தளத்தில் இயங்கும் படைப்புகள் 

வரலாற்று நாவல்கள் 

கல்கி        -                       - பொன்னியின் செல்வன்
                                              -சிவகாமியின் சபதம்
சாண்டில்யன் -          -யவன ராணி ,ஜலதீபம் , கடல்புறா
மு. கருணாநிதி        - ரோமாபுரிபாண்டியன்,  பொன்னர் சங்கர்
                                                தென்பாண்டிசிங்கம்
அகிலன் -                       -வேங்கையின் மைந்தன்
நா .பார்த்தசாரதி   -  மணிபல்லவம்
சுஜாதா -                         - ரத்தம் ஒரே நிறம்

பொதுவான நாவல்கள் 

சிவசங்கரி                   - ஒரு மனிதனின் கதை
இந்துமதி                       - தரையில் இறங்கும் விமானங்கள்
சுஜாதா                            - கரையெல்லாம் செண்பகப்பூ /நைலான் கயிறு
வைர முத்து                  -கள்ளிக்காட்டு இதிகாசம்
                                                கருவாச்சி காவியம்
பாலகுமாரன்              - தாயுமானவன் , மெர்குரிப்பூக்கள்
ஸ்டெல்லா புரூஸ்    - அது ஒரு நிலாக் காலம்


சிறுகதைகள் 
-------------------------

புதுமைப்பித்தன் கதைகள்    - காலச்சுவடு பதிப்பகம்
மௌனி கதைகள்                          - பீகாக் பதிப்பகம்
கு ப ரா படைப்புகள்                     - அல்லயன்ஸ் பதிப்பகம்
ந பிச்சமூர்த்தி படைப்புகள் - மதி நிலையம் & சாகித்ய அகாடமி
க நா சுப்பிரமணியம் - கா  நா சு படைப்புகள் - காவ்யா
லா ச ராமாமிர்தம்        லா ச ரா கதைகள்-வானதி பதிப்பகம்
கு அழகிரிசாமி கதைகள்   - சாகித்ய அகாடமி
தி ஜானகி ராமன் படைப்புகள்  -ஐந்திணை பதிப்பகம்
ஜெயகாந்தன் சிறுகதைகள்  - கவிதா
கி ராஜ நாராயணன் கதைகள் - அகரம் பதிப்பகம்
சுந்தர ராமசாமி - காகங்கள் - காலச்சுவடு
அசோக மித்திரன் கதைகள்  - கவிதா பப்ளிகேஷன்
கந்தர்வன் கதைகள்- வம்சி புக்ஸ்
அ .முத்துலிங்கம் கதைகள் - தமிழினி
ஜி நாகராஜன் படைப்புகள் - காலச்சுவடு
ஆ. மாதவன் கதைகள்            - தமிழினி
சுஜாதா -- தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - உயிர்மை
வண்ணதாசன் கதைகள் -சந்தியா பதிப்பகம்
வண்ண நிலவன் கதைகள் - சந்தியா பதிப்பகம்
நாஞ்சில் நாடன் கதைகள்  - தமிழினி

ஆதவன் தீட்சண்யா  - ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் - சந்தியா
                                                  லிபரல் பாளையத்து கதைகள் - பூபாளம்
                                            சொல்லவே முடியாத கதைகளின் கதை -சந்தியா

கோணங்கி        - மதினிமார்கள் கதை -அகரம்
                                     கொல்லனின் ஆறு  பெண்மக்கள் - வம்சி புக்ஸ்

எஸ் ராமகிருஷ்ணன் கதைகள் -கிழக்கு
பவா செல்லதுரை - சத்ரு - வம்சி புக்ஸ்
ஜெய மோகன்       -  ஜெய மோகன் சிறுகதைகள் - உயிர்மை

யூமா வாசுகி         -உயிர்த்திருத்தல் -தமிழினி
வேல ராம மூர்த்தி  - இருளப்ப சாமியும் இருப்பத்தொரு கிடாய்களும்
                                                அகரம்

அழகிய பெரியவன்  - தீட்டு - தமிழினி .
ச .தமிழ்ச் செல்வன்  - மிதமான காற்றும் இசைவான கடலலையும்
                                                     தமிழினி
லட்சுமணப்பெருமாள் - பால காண்டம் - தமிழினி





பட்டியல் தொடரும் .............கவிதைகள் ..மொழிபெயர்ப்புகள் கட்டுரைகள் என் பட்டியல் தொடரும் ........