Saturday, 20 December 2014

முத்தொள்ளாயிரம் -ஒரு அழகியல் அதீதம்

  -ராசி.பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன் அதிபா)

( செம்மொழித்தமிழ்  உயராய்வு மையம் நடத்திய முத்தொள்ளாயிர கருத்தரங்கில் எனது   உரை- ஜனவரி 2014, புதுக்கோட்டை)
---------------------------------------------------------------------------------------------------------------

மனிதகுல நாகரிகம் நதிக்கரையில் தோன்றி வளர்ந்ததென்று பார்க்கிறோம். உணவு தயாரிக்கவும், உடை உடுத்தவும், இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதுமான அடிப்படை தேவைகளையும் - உற்பத்தி முறைகளையும் அறிந்து கொண்டது மட்டும் நாகரிகமல்ல. ஆண் பெண் தாம்பத்ய உறவை முறைப்படுத்திக் கொண்டதும், மொழியை வடிவமைத்து சிந்தனைக்கு உருவங்கொடுத்தும் தான் உண்மையான நாகரிகம்.

அம்மாதிரியான மொழி நாகரிகத்தில் உலக அளவிலான மொழிகளாக கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு, சீனம், வடமொழி ஆகியவற்றோடு கால ஓட்டத்தில் முன்னும் பின்னுமாய் ஊடாடி இன்றைக்கும் மொழிகள் குலத் தனி விளக்காய் ஒளி வீசிக்கொண்டிருப்பது தமிழ்.

கிரேக்கமொழி ஹோமரின் இலியட்;, ஒடிசி ஆகிய மகாகாவியங்களாலும் ஹெரடோட்டஸின் வரலாற்றுப் பதிவுகளாலும், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரின் தத்துவ நூல்களாலும் சிறந்திருந்த காலம் உண்டு.

இலத்தீன் இனீட் ஈக்கலாக், ஜார்ஜிக்ஸ் ஆகிய காவியங்களாலும் வர்ஜில், சிசிரோ படைப்புகளாலும் சிறந்திருந்த காலம் உண்டு.

பாரசீகம் ருதகி, பிர்தௌசி ஆகியோரது காப்பியங்களாலும், நிஜாமியின் புனைகதைகளாலும், ரூமியின் மறைப்பாடல்களாலும் சிறந்திருந்த காலம் உண்டு.
   ஹீப்ரு, விவிலியத்தின் மொழியாக இருந்து தன்னுள் தேவனின் வேதத்தை தாங்கி சிறந்திருந்த காலம் உண்டு.

சீனம் கன்பூசியஸ், லாவுட்ஸ் ஆகிய தத்துவவாதிகளாலும், தாவோ நெறிகளாலும், உச்சத்தை அடைந்த காலம் உண்டு.

தமிழ் அகமும் புறமும் சார்ந்த சங்க இலக்கியங்களால் மானிட வாழ்வுப் பதிவை மாண்புறச் செய்து தன்னை செவ்வியல் மொழியாக்கிக் கொண்ட காலம் உண்டு.

வேதங்களின் தத்துவ விசாரணைகளை, தன்னகத்தே தாங்கி செழுமையான மொழியாக சமஸ்கிருதம் வெற்றிகண்ட காலம் உண்டு.
இவற்றுள் இன்றைக்கும் உயிரோடு புழக்கத்தில் வெற்றிகரமாய் வலம் வருகிற மக்கள் மொழிகளாய் திகழ்பவை. இரண்டு தான் ஒன்று சீனம், மற்றொன்று தமிழ்.

அத்தகைய செவ்வியல் சிறப்பு வாய்ந்த தமிழ்மொழிக்கு, உலக அறிஞர்கள் அனைவராலும் செம்மொழி என அறிவுப்பரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்மொழிக்கு, நமது இந்திய அரசு செம்மொழி தகுதி அளித்து அங்கீகரிக்க வேண்டுமென நாம் பரிதிமாற் கலைஞர் காலத்திலிருந்து நடத்திய கோரிக்கைச் செயல்பாடுகளின் விளைவாக 12.10.2004-ல் நடுவண் அரசு ஒரு அரசாணை மூலம் தமிழுக்கு செம்மொழிப் பட்டியல் தகுதியை வழங்கியது.

அந்த அரசாணை ஒரு செவ்வியல் மொழிக்கான தொன்மை, இலக்கிய மூலங்கள் மற்றும் அசல்தன்மை ஆகியவற்றை பற்றியெல்லாம் குறிப்பிடுகிறது. அவையெல்லாம் கூட நமக்கு முக்கியமில்லை.

அரசாணையின் பத்தி 1 இப்படி ஆரம்பிக்கிறது. இந்திய அரசு செவ்வியல்மொழிகள் என ஒரு புது மொழிப்பிரிவினை உருவாக்குவதென முடிவு செய்துள்ளது.

இதன்பொருள் என்ன? இப்போதுதான் செவ்வியல் மொழிப் பிரிவு என்ற ஒன்றே தொடங்கப்படுகிறது எனில் ஏற்கனவே பட்டியலில் உள்ள சமஸ்கிருதம், பாரசீகம், அரேபியம், பாலி, பிராக்கிருதம் ஆகிய மொழிகள் எப்படி செவ்வியல் மொழிப்பட்டியலில் உள்ளன என கேள்விகள் எழுவது இயற்கை.

இன்று செம்மொழி தகுதி அறிவிப்புக்கு பிறகு தமிழுக்கு வழங்கப்படும் சிறப்புகளும் ஆய்வு நிதிவகைகளும், மேற்கண்ட ஐந்து மொழிகளுக்கு ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பெற்று வருகின்றன.

அப்பட்டியல் எப்படி வந்தது? 1835-ல் மெக்கால பிரபு இந்நாட்டுக்கான கல்வித் திட்டத்தை முடிவுசெய்ய ஆலோசனைகளை பெற்ற போது ஆங்கில வழிக் கல்வி மற்றும் அறிவியல் கல்வியை ஏற்றுக் கொண்டவர்கள் மேலைச் சிந்தனையாளர்கள் எனவும் இம்மண்ணின மொழிகளையும் கலை கலாச்சாரத்தையும் கற்க வேண்டும் என்றவர்கள் கீழைச் சிந்தனையாளர்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.
மெக்காலே பிரபு மேலைச்சிந்தனையாளர்களின் ஆலோசனைகளை ஏற்று ஆங்கிலம் அறிவியல் கலந்த மேலைக் கல்வியை நடைமுறைப்படுத்திவிட்டு கீழைச் சிந்தனையாளர்களையும் ஆதரிப்பதற்காக பண்டைய மொழிகளை அங்கீகரிக்க அவற்றின் வழியாகவும் கல்வி வழங்க ORIENTAL SCHOOLS   ஏற்பாடு செய்தார்.

அந்த காரணத்தில் பட்டியலில் அமைந்த அம்மொழிகள் நாளடைவில் இந்தியாவின் செம்மொழிகள் என்று ஆகிப்போயின.

ஆக எந்த அரசாணையின் மூலமும் இன்று நாம் புரிந்து கொள்கிற செம்மொழி என்ற பொருளில் அம்மொழிகள் அறிவிக்கப்படவில்லை.

ஆக இந்தியாவின் அரசாணைப்படியான முதல் மற்றும் ஒரே செம்மொழி தமிழ் மட்டும்தான்.

இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம், தமிழுக்கு செம்மொழி தகுதி வழங்குவதற்கான பரிசீலனைக் கோப்பில் 41 தமிழ்நூல்களை ஆதார நூல்களாய் வைத்திருந்தது.

அவை பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய மேற்கணக்கு நூல்கணக்கு நூல்கள் 18, அறநூல்களில் பதிணென் கீழ்கணக்கு நூல்கள் 18, காப்பியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலை – 2, தொல்காப்பியம் 1, இறையனார் அகப்பொருள் 1, மற்றும் முத்தொள்ளாயிரம் 1 ஆகியவை அந்த 41 நூல்களாகும்.

ஆக தமிழுக்கு செம்மொழி தகுதி பெற்றுத் தந்த 41 நூல்களுள் ஒன்று என்ற சிறப்பை “முத்தொள்ளாயிரம்” பெறுகிறது.

அம் முத்தொள்ளாயிரத்தை அழகியல் நோக்கில் நாம் காணக் கிடைத்திருக்கிற இவ்வாய்ப்பினை எண்ணி மகிழ்கிறேன்.

நண்பர்களே, தமிழ்க்கவிதை இரண்டாயிரமாண்டு கால வாழ்வியல் அனுபவத்தைக் கொண்டது. நம் ஒவ்வொருவரின் அணுத்திரளிலும் நம் முன்னோர்களது கவிப்பிரதிகள் மிதந்துகொண்டிருக்கின்றன.
அதனால்தான் அனைத்துமே உரைநடையாயிருக்கிற இந்த நவீன காலத்திலும் ஒரு நவீன இளைஞன் கவிதை வரிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிற வாழ்த்து அட்டைகளின் மூலம் தம் அன்பை பரிமாறிக் கொள்ள விரும்புகிறான். ஒரு சமானியன் தன் காதல் பெண்ணை கவிதைகளால் அர்ச்சிப்பதையே விரும்புகிறான்.

திரையரங்குகளில் எதுகை மோனைகளோடு உள்ள வசனங்களை தமிழன் கைதட்டல்களால் ஆர்ப்பரித்து ரசிக்கிறான்.

நுட்பமாக கவனித்தால் தமிழின் அடுக்குகளும் அலங்காரங்களும் சிலேடைகளும் அணிநயங்களும் இலக்கிய வரிகளும் தமிழ் மண்ணில் ஆட்சி அதிகாரங்களை சாத்தியப்படுத்தி இருப்பதை நாம் பார்க்க முடியும்.

இவற்றிலிருந்தெல்லாம் தப்பி ஒருவன் பேருந்தில் ஏறினால் கூட கரம் சிரம் புறம் நீட்டாதீர் என்று இரண்டாயிரம் ஆண்டுகால கவி மரபு கையைப் பிடித்து இழுக்கிறது.

அப்படி தமிழ்க்கவிதை நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பாதையில் சென்று முத்தொள்ளாயிரத்தின் அழகியல்களைக் காணலாம்.

படைப்பு அனுபவங்களின் அடிமனச் சர ஓடையில் இறங்கி உணர்வுகளின் அழகை வகைப்பிரித்து உணர்தலே அழகியல் பார்வை.

தமிழில் அழகியல் என்றும் ஆங்கிலத்தில் AESTHETICS என்றும் இந்திய மரபில் ‘ரசம்’ என்றும் இவ்வுணர்வு குறிக்கப்படுகிறது.

தமிழில் காதல், நகை, இரக்கம், கோபம், வீரம், அச்சம், வெறுப்பு, வியப்பு, தன்மை என்று வகைபெறும் அழகியல் கோட்பாடு வடமொழியில் சிருங்கார், ஹாஸ்யம், கருணை, ருத்திரம், வீர், பயனாகம், பீபஸ்தம், அற்புதம் மற்றும் சாந்தம் என்று நவரசக் கோட்பாடாகிறது.
   நகை அழுகை  இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை
என்று மெய்ம்மை அழகியலை தொல்காப்பியம் பேசுகிறது.

என்றாலும் கோட்பாடுகளின் வழிகளில் நில்லாமல் நம் மனம் சார்ந்த ரசனையின் அடிப்படையிலேயே,  அனுபவப்புரிதல்களின் அடிப்படையிலேயே, முத்தொள்ளாயிர அழகியலை நாம் அணுகலாம்.


பாடலெங்கும் கதவுகள்… அழகின் திறப்புகள்

உள்ளே நுழையும்போது வாயில் இருக்கிறது. வாயிலெங்கும் கதவுகள் இருக்கின்றன. கதவுகள் தோறும் அழகின் மூடலும் திறப்பும் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கின்றன.

கதவு1
சேரன்கோதை உலாவருகின்றான் அவனை  காணவிடாமல் தாயார்கள் கதவுகளை அடைக்க, காணும் ஆர்வத்தில் இளம்பெண்கள் கதவுகளைத் திறக்க கதவுகளின் உச்சியில் அமைந்துள்ள நிலையோடு பொருந்திய இணைப்புக் குமிழ் தேய்ந்தது என்கிறான் கவிஞன்.
“தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே ”  என்று மட்டும்  சொல்லி நிறுத்தவில்லை. அடுத்து வருகிற சில குறியீட்டுச் சொற்கள் நுட்பம் வாய்ந்தவை.
“ஆய்மலர் வண்டு உலா அங்கண்ணி”

சேரனின் மாலையில் தேர்ந்தெடுக்கப்பெற்ற மலர்கள்: மன்னனின்  மார்பை அலங்கரிக்கும் மலர்களல்லவா! வண்டுகள் உலாவும் மாலை.
ஆவலுடன் பார்க்கும் பெண்களுக்கு மலர்களை குறியீடாக்கினால் ஒரு பொருளும் வண்டுகளை குறியீடாக்கினால் எதிர்ப்பொருளும் வருவது அழகு.

தாயார் கதவுகளைச் சாத்துவதிலும் உட்காட்சி இருக்கிறது. அவர்களின் மனக் கதவுகளும் ஒரு காலத்தில் திறந்து மூடியவை தானே காதல் மாயையை கண்டுமயங்கும்  மகளை காக்கத் துடிப்பது நியாயந்தானே.

“கண்டுலா அம் வீதிக் கதவு” என பாடல் முடியும் அம் - என்பதை அழகிய என்றும் கொள்ளலாம். உ.வே.சா. உரைப்பது போல் அகம் என்றும் கொள்ளலாம்.

கதவு2
சேரன் மீது காதல் வயப்பட்ட பெண்ணை வீட்டுக்;குள் வைத்து கதவினை அடைத்தாள் அனிக் கதவம் அன்னை
சேரனையும் என்னையும் இணைத்து பேசும் வாய்களை அடைக்க அவனால் முடியுமோ எனக் கேட்கிறாள்தலைமகள்.
‘என்னை யவன்மே லெடுத்துரைப்பார்
வாயு மடைக்குமோ தான்”.
இதை அலர்நாணல் என மெய்ப்பாடு காண்பார் தொல்காப்பியர்

கதவு 3
சேர மன்னனைக் காண கதவருகே செல்கிறாள் அவள். ஆர்வத்தால் முன்சென்ற அவள் நாணத்தால் பின்வாங்குகிறாள்.

“காணிய சென்று கதவடைத்தேன் - நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு.
செல்வம் படைத்தவரிடம் பொருள் கேட்க செல்லும் வறுமையுற்றவர் போல... வரும் செல்லும் நெஞ்சம்.


கதவு 4
சேரனைக் காணச் செல்கிறாள் அவள்.

பனியின் மார்கழியில் அரண்மனைக் கதவருகில் குளிருக்கு இரண்டு கைகளாலும் போர்த்திக் கொண்டு நிற்கிறாள்.

வீட்டுக்கதவைத் தாண்டி வெளியே போய்விட்டாளே என்று ஆச்சரியப்பட்டால் கடைசி வரி அதை கலைத்து விடுகிறது.

கடைசி வரி ..... “காணிய சென்றவென் னெஞ்சு”
மனம்’ கிடந்து அலைந்து திரிகிறது. மன்னவனைப் பார்க்க....

“பொறி நுதல் வியர்த்தல்” என்று மெய்ப்பாடு கண்ட தொல்காப்பியர் ... இந்த பொறி மனம் சென்றலைதலை “மடன்” என்பார்.

 கதவு 5
     பாண்டிய மன்னனின் பகைவர்களிடம் சொல்லப்படுவதான பாடல்
“கண்ணார் கதவந் திறமின்...” உங்கள் கண்கவர் கதவுகளைத் திறந்து விடுங்கள் பகைவர்களே .. பாண்டியன் தான் பிறந்த இந்த நட்சத்திரத்தில் உங்களுடன் போர்புரிய வரமாட்டான் என்கிறது அந்தப்பாடல்.
கதவு 6
பகைவர்களுக்கு அச்சம் விளைவிக்கும் தும்பை மாலை அணிந்திருக்கும் பாண்டியனின் யானையின் ஒரு தந்தம் பகை மார்பை கிழிக்கும் மறுதந்தம் கோட்டைக் கதவை உடைக்கும்.

“பெருகோடு மாற்றார் மதில் திறக்குமால்”

கதவு 7
அன்னை காவல் நிறைந்த வீட்டில் வைத்து இரண்டு கதவுகளையும் அடைத்துவிட்டுச் சென்ற பிறகும் பாண்டியனின் காண முடிகிறது தாம் அவளுக்கு எப்படி அவள் நன்றி தெரிவிக்கிறாள். கதவில் சாவித்துளையை வைத்தவருக்கு..

நன்னலங் காண கதவந் துளைதொட்டார்க்
கென்னைகொல் கைம்மா றினி.

பொன்னூறிய பசலை
      காதல் நினைவுகளால், பிரிவின் ஏக்கத்தால், ஆற்றா முடியாத ஆவலால், காதல் மகளிர் நலிவுற்று அழகுவாடி தளர்கின்ற, சோழை இழக்கின்ற “பசலையைத் தான் தமிழின் இலக்கியச் சாளரங்களில் நாம் கண்டிருக்கிறோம்.
ஆனால் இங்கு ஒரு இளம்பெண் கூறுகிறாள்.

மாமையிற் பன்னூறு கோடி பழுதோ என் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு”

சேரன் உலாவை கண்ட பெண்கள் காதல் விரகத்தில் அயர்களது அழகை வேண்டுமானால் இழக்கலாம்.  ஆனால் அவர்கள் அடையும் “பசலை” யானது அழகைவிட பலநூறு கோடிப்பங்கு உயர்ந்தது “என்கிறாள் அதுவும் அப்பசலை பொன்ஊறித் ததும்பி மேனியில் பிரகாசிப்பது போல் இருக்கிறது.
இப்படியொரு பசலையை அநேகமாக இங்குமான் பார்க்கின்றோம்.

நவீன கவிதைப் பாணியில்
வினை ஒரு இடத்திலும் அதன் விளைவு ஒரு இடத்திலும் அழகுற அமைந்து தொடர்புகொண்டு பொருள் தருவது நவீன கவிதை வடிவத்தில் ஒன்று.

மகளை கரைசேர்த்த தந்தை முழுகிப்போனார்.
அவன் குடித்தான், குடும்பம் தள்ளாடியது.
அவன் பொட்டில் அடித்தான், அவன் மனைவி பூவை இழந்தாள்.
அவன் ரிக்ஷாவின் பெடலை மிதித்தான் குடும்பம் ஓடியது.

இந்த நவீன பாணியில் முத்தொள்ளாயிரத்தை பாடல் இருப்பது அதுதான் இப்போது நவீனமாகியிருக்கிறது என நமக்கு புரிய வைக்கிறது.

கிள்ளி வளவனின் யானை காலை எடுத்து வைத்தால், சங்கிலிப் பிணைப்பு மட்டும் விடுபடுவதில்லை. பகை மன்னர்களின் மான் போன்ற பார்வையினை உடைய மனைவியரின் மங்கலநாணும் அறுபட்டு விழுமாம்.
“புல்லாதார் – மானனையார் மங்கல நாண் அல்லவோ – தான
மழைத்தடக்கை வார்கழற்கால் மானவேற்கிள்ளி
புழைத்தடக்கை நால்வாய் பொருப்பு”
யானை சங்கிலியை அறுத்தால் - அங்கு
மங்கலநாண்கள் அறுபடுமாம்.

சுடும் பனிக்காற்று

இளம் மகளிரின் பசலைக்கும் தீராத் தாபத்திற்கும் குழலிசையும், இனிய பனிவாடையும் கூட காரணமாக இருக்கின்றன.

மண்ணுலகைக் காப்பதில் சிறந்தவனாகிய சோழன் மாலைப்பொழுதில் கோவலர்கள் இனிமையாக இசைக்கும் குழல் ஒலியால் துன்புறும் என்னைக் காக்க மாட்டானோ,

“காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க்
கோவலர்வாய் வைத்த குழல்”
என்று வினவுகிறாள் ஒரு பெண்.

0 இன்னொரு பெண்ணோ “பேயோ பெருந்தண் பனிவாடாய்” என்று குளுமை வீசும் பனிவாடைக் காற்றைக் கேட்கிறாள். பிரிவில் நாங்கள் சோர்ந்திருக்கும் காலம் பார்த்து துன்புறுத்துவது நியாயமா? எனக் கேட்கிறாள்.

அத்திக்காய்  ஆலங்காய் வெண்ணிலவே பாடல்களுக்கெல்லாம் மூலாதார சுருதி முத்தொள்ளாயிரத்தில் அல்லவா. ஒலித்துக்கொண்டிருக்கிறது.
“அலமரல் அசைவளி அலைப்ப என் உயவு நோய் அறியாது துஞ்சும்
ஊர்க்கே” என்ற ஒளவையின் குறுந் தொகை பாடலையும் இது நினைவூட்டுகிறது.



புண்ணின் பெருமை
 வீரன் மார்பிலே புண்பட வேண்டும் என்கிறது புறநானூறு. புறமுதுகு காட்டி முதுகிலே புண்பட்டால் அதைப்போன்ற இழிவு வேறெதுவும் என்ற வீரவாழ்வு வாழ்ந்தான் தமிழன்.

ஆனால் முத்தொள்ளாயிரத்திலோ ஒரு உன்னதமான புண் பேசப்படுகிறது.
சோழனுக்கு திரை  செலுத்த வந்தவர்களில் மணிமுடிகள் அவர்கள் குனிந்து வணங்கிய போது அவனின் பாதங்களில் அழுத்தி அழுத்தி நேற்றைக்கு பலபேர் திரைசெலுத்த முடியாமல் போனது இன்றைக்கும் அப்படித்தான். ஆகவே பொறுத்திருந்து திரை செலுத்த மன்னர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மார்பு புண் வீரத்தின் பெருமிதம் என்றால் பாதப்புண் வெற்றியின் பெருமிதம் அல்லவா?
“முன்றந்த மன்னர் முடிதாக்க - இன்றுந்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி யிலனே”

கவிதை வலைக்குள் உவமை மீன்கள்

உலா வருகின்ற சோழனை சாளரங்கள் வழியாக காண்கிறார்கள் இளம்பெண்கள்.

சாளரத்தின் வெளியிலிருந்து அக்காட்சியைக் காணும்போது வலைகளில் சிக்கிக்கொண்ட கெண்டை மீன்களைப்போல் பெண்ணின் கண்கள் பிறழ்ந்து நகர்கின்றன.
“நீல வலையிற் கயல்போற் பிறமுமே
சாலேக வாயில் தொறுங் கண்”

இக்காலத்தில் ‘விழிமீனே தூண்டில் போடுதே’ என்று நவீன கவி கேட்பதற்கு இங்கல்லவா இருக்கிறது அடிப்படை.




விலங்குகள் காக்கும் வீரமரபு
0 பாண்டியன் மாறனுடைய களிறு தனது தந்தத்தை எழுது கோலாகவும் பகை மன்னர்களின் மார்பு பனை ஓலையாகவும் கொண்டு செல்வம் நிறைந்த இவ்வுலகம் எம்முடையது என எழுதிச் செல்லும்.


“உருத்தரு மார்போலை யாகத் - திருத்தக்க
வையக மெல்லா மெமாதன் றெமுதுமே”

மாறனை கண்டு மட்டுமல்ல ; மாறனின் யானைகளை கண்டே பகைவர்கள் பறந்தோடி விடுவார்கள் என யானையின் வீரம் சொல்லப்படுகிறது.

0 சோழனின் குதிரைகள் பகை மன்னர்களின் மார்பை உதைத்துத் தாக்கியதில் கீழே விழுந்த மணிமுடிகளையும் அணிகலன்களையும் காலால் மிதித்துக் கடந்ததால் அவற்றின் குளம்புகள் பொன் உரைத்த கல் போல விளங்குவதாக அமைகிறது என அழகிய காட்சியில் குதிரை வீரம் பதிவு செய்யப்படுகிறது.

“மன்னது முடியுதைத்து மார்பகத்து பூணுழக்கிப்
பொன்னுரைகற் போன்ற குளம்பு.

அகிற் புகையின் வளையங்களாய் கமழும் கனவுகள்

கன்னடத்தில் பழமையான நாகர்ஜுன மானஸ சரித படைப்பில் ஒரு கனவுக் காட்சி அகிற் புகையின் வளைங்களாய் தவழ்ந்தோடும்.

“அக்கா கேளுவா நானொந்து கனாச கண்டே
அக்கி அடுக்கி தெங்கின காயி கண்டே நோவா
மிக்கி மீறி போவேனோ வெம்பதி விளிதனு
சந்திர மல்லிகார்சுனரு கண்டே நோவா...”
என்று அந்த காதற்கன்னியின் கனவு தவழும்...

களியானை தென்னன் கனவின்வந் தென்னை
யளியா னளிப்பானே போன்றான்”

என்று முத்தொள்ளாயிர தலைவிக்கும் கனவில் தென்னன் பாண்டியன் வருகின்றான்.

யானைக்கும் மெய்ப்பாடு
அவள் சோழன் உலாவை லயித்து நின்று பார்க்கிறாள். அவனைச் சுமந்துசெல்லும் யானையின் மீது அவளுக்கு பொறாமை வருகிறது.
அது ஒரு பெண் யானை – பிடி
அவள் கேட்கிறாள். சோழ நாட்டு பெண் யானையே சேரன் எனும் அழகன், வீரன் உன்மேல் அமர்ந்திருந்திருக்கிறானே அவ்வுணர்வு சிறிதும் இன்றி சோழநாட்டு பெண்டிருக்கு உண்டான நாணம் சிறிதும் இன்றி சுமந்து செல்கிறாயே உனக்கு கூச்சம் இல்லையா எனக் கேட்கிறாள்.

நாணின்மை யின்றி நடத்தியால் - நீனிலங்
கண்டன்ன கொண்டல் வருங்கா விரிநாட்டு
பெண்டன்மை யில்லை பிடி.

0 பாண்டியனின் யானை கோட்டை மதிலின் மீது மோதி மதிலை சாய்த்ததில் மதில் அழிந்தது. அதனால் சிதைந்த தன்னுடைய உடைந்த தந்தத்தோடு பெண் யானையிடம் செல்ல நாணம் கொண்டு மணி முடி அணிந்த பகை மன்னர்களின் குடலால் தந்தந்தை மறைத்துக் கொண்டு செனறதாம்.

வெற்றிப் பெருமையை விட நாணமே யானைக்குப் பெரிதாய்ப் போய்விட்டது. காதலின் வலிமைதான் என்னே!
மன்னர் குடறால் மறைக்குமே செங்கனல்வேற்
றென்னவர் கோமான் களிறு”




தரைக்கு வந்த வானவில்

சோழனின் உறையூர் நகரில் மாலைப்பொழுதில் பூக்களை விலை கூறி விற்பவர்கள் கிள்ளி எடுத்துப் போட்ட பூவின் இதழ்கள் வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றன.

காலையே
விற்பயில் வானகம் போலுமே வெல்வளவன்
பொற்பார் உறந்தை யகம்

காலையில் தரைகளில் வானவிற்கள் தோன்றிக் கிடப்பதை போல இருந்து என்று அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

0 இந்தக் காட்;சியை அப்படியே பாண்டிய மன்னனுக்கு கொண்டு செல்கிறது மற்றொரு பாடல்....

பூமிப்பரப்பெங்கும் ஆட்சி செய்யும் மன்னர்கள் தங்கள் தலையில் சூடியிருக்கிய பூக்கள் வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்திருக்கும் பாண்டியன்p மாறனின் காலடியில் குவிந்து கிடக்கும் என்கிறது அப்பாடல்...

“முடிமன்னா சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப்படும்”...

நாராய் நாராய் ....

தமிழில் நாரை பிரபலமானது. ஒரே பாடலில் புகழ்பெற்றார் சத்திமுத்தப்புலவர்.
“பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவள கூர்வாய்”
அழகில் மெய்மறந்து போயிருக்கிறோம் நாம்.
இங்கும் ஒரு நாரை தூது விடப்படுகிறது.

“செங்கான் மட நாராய்” யைப் பார்த்து தூது சொல்கிறாள் அவள். மருதநிலத்தின் இருபுறங்களிலும் கரைகளில் மீன்கள் எதிர் ஏறிவரும் காவிரிநாட்டு சோழனுக்கு என்னுடைய காதல் நோயை எடுத்துக் கூறு என்கிறாள்.

“காவிரி நீர் நாடற் குரையாயோ யானுற்ற நோய்”
நாரையிடம் சொல்லும்போது எவ்வளவு கவனமாய் மீன்களை நினைவுபடுத்துகிறாள்  பாருங்கள்.

“யாருமில்லை தானே கள்வன்” எனத் தொடங்கும் குறுந்தொகைப்
பாடலில் “தினைத் தாள் அன்ன சிறு பசுங்கால குருகும் உண்டு ஞான் மணந்த ஞான்றே” என்று தங்களின் காந்தர்வ மனத்திற்கு நாரையை சாட்சி வைப்பாள் தலைவி.. இங்கு தலைவி தூது அளவிலேயே நாரையை வைக்கிறாள். கவனமான தலைவிதான்.


அலர் நாணம்
அவள் வைகை ஆற்றின் குளிர்ந்த நீரில் நீராடினால் இவள் பாண்டியன் மேல்கொண்ட காதலால்தான் இவ்வாறு மகிழ்ந்து நீராடுகிறாள் என்பார்கள். நீராடாமல் இருந்தால் கொண்ட காதலை மறைக்க முயற்சிக்கிறாள் என்று கூறுவார்கள். இவை எல்லாமே துன்பத்தை தருகின்றன என்று கூறுகிறாள்.

“ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால்
மாற்றியிருந்தாள் எனவுரைப்பார்”

ஊடலின் சந்தனச் சேறு
மதுரைச் தெருக்களில் மாளிகையின் மேல் மடத்தில் இருந்து இரவுப் பொழுதில் தங்கள் கணவர்களோடு ஊடல் கொண்டு உதிர்த்து விட்ட குளுமையான சந்தனமும் குங்குமமும் தெருவெல்லாம் நிறைந்திருக்க நடந்த செல்வார்க்கு தடுமாற்றம் ஏற்படுகிறது.

மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட
குங்கும ஈர்ஞ்சாந்தின் சேறிழுக்கி”

குதிரை வணக்கம்
காதல் தலைவன் கால்வரும் திசை கூட மகளிர்க்கு இன்பம் தருவதாகும். காதல் தலைவனை நினைவூட்டக்கூடிய அல்லது அவனுக்கு தொடர்புடைய அனைத்துமே அவளுக்கு வணங்கத் தக்கதாக இருக்கிறது.

அதனால்தான் அவள் சோழன் உலா வரும்போது சோழனை அல்ல அவனது குதிரையைப் பார்த்தே பரவசமடைந்து காதலால் கசிகிறாள். உணர்ச்சிப் பெருக்கால் கலங்கி நிற்கிறாள்.

ஆனால் தோழியிடமோ தூசியினால் கண் கலங்கிற்று என்பர்.

“பொங்கும் படைபரப்ப மீதெழுந்த பூந்துகள் சேர்ந்
தெங்கன் கடலுழ்ந்தனவால் என்று”

அன்னையின் உன்னதம், அன்னையின் பேதமை
தோழியிடம் சொல்கிறாள் அவள். தோழி, பாண்டியனிடம் என்னைப் பற்றியோ என் ஊரைப் பற்றியோ சொல்லவேண்டாம். உன் நினைவால் கண்துயிலாமல் இருக்கிறாள் என்பதை மட்டும் சொல். அவள் இன்னொன்றும் சொல்கிறாள்.
“நம் அன்னை இப்படிப்பட்டவள்” என்றும் சொல்ல வேண்டாம் அன்னை எப்படிப்பட்டவள் எத்தகைய நடப்பும் குணமும் வாய்ந்தவள் என்ற அடிப்படையில் அவள்தம் மகளை, மக்களை மதிப்பிடும் வழக்கம் அப்போது இருந்திருக்கிறது என்பதை இது சுட்டுகிறது.
 
தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், தாயைப் போலப் பிள்ளை போன்வற்றிற்கு அடிப்படை வேர் புரிகிறது.

0 அதே அன்னையின் பேதமையை இன்னொரு தலைமகள் குறிப்பிடுகிறாள். அவளின் நெஞ்சமோ ஒரு பறவையாய் கூட்டைவிட்டு வெளியேறி பாண்டியனைக் கூடி இன்புற எண்ணி சென்றுவிட்டது அதனையறியாத தாய், பறவை வெளியே சென்றறியாமல் வெறுங்கூட்டினை காவல் காக்கும் வேடன்போல் உயிரற்ற என் உடம்பை வீட்டுக்குள் வைத்து பாதுகாக்கிறாள் - என்கிறாள்.

தன் உடம்பை உயிரற்ற வெறுங்கூடு என்றும் உயிர்ப்பறவை மன்னனை நோக்கி சென்றுவிட்டது என்றும் சொல்வதற்கு ஒரு யோகி நிலை வேண்டும் அது முத்தொள்ளாயிரத் தலைவிக்கு வாய்த்திருக்கிறது.

கண் திறந்தால் காட்சி மறைந்துவிடும்
  கம்பனின் சீதை தான் கண்களுக்கு மை தீட்டாத காரணத்தை தோழி நீலமணியிடம் சொல்வாள். கண்ணுக்குள் இராமன் இருக்கிறான் அவன் இருக்கும்
கண்ணுக்குள் கறுப்பை ப+சலாமா !.. அதனால்தான் நான் கண்ணுக்கு மை எழுதவில்லை என்பாள்

இங்கு முத்தொள்ளாயிரத்தில் இரு கைகளாலும் கண்களை மூடிக் கொண்டாள் ஒரு தலைவி  பாண்டியன் என் கண்களுக்குள் புகுந்த விட்டான்.என் உயிர் பிரிந்தாலும் கண்களை மூடிய கைகளை எடுத்து அவனை வெளியே விடமாட்டேன் என்கிறாள் அவள்.
“ஆவி களையினும் என் கை திறந்து காட்டேன் “

அழகியலும் வீரமும்
இலக்கியங்களில் பெரும்பாலும் சொல்லப்படும் வீரத்தின் விளைவுகள் என்ன?
இரத்த நதியில் மிதக்கும் உடலங்கள் .. மனித அன்பின் கல்லறைகள் மீது
அடுக்கி கட்டிய வெற்றிக்கோட்டைகள் ..கொம்புகளின் முழக்கத்தினை தோற்கடிக்கும் உயிர் பிரியும் ஓலங்கள் …
அவற்றை  அழகியல் காட்சியாகத்தான் காண வேண்டுமா ?.நம் மனது இதை ஒப்புவதில்லை ஏனெனில் அடிப்படை மனித தர்மம் அவற்றில் இல்லை.  தமிழ் வீரத்தை அழகியலில்தான் சேர்க்கிறது..வடமொழி மரபும் ருத்ரத்தை ரசங்களில் ஒன்றாகத்தான் குறிக்கிறது.
குவிந்திருக்கும் மண்டை ஓடுகளும் குடல்களில் விளக்கெரிக்கும் பேய்களும் ஊளையிடும் நரிகளும் நிறைந்திருக்கிற முத்தொள்ளாயிரம் நம்மை அழகியல் ரசனைக்குத்தான் இட்டுச் செல்கிறதா ?
யுhனைகள் மன்னர் மார்புகளை கிழிப்பதும் குதிரையின் குளம்புகள் மணிமுடிகளை உதைத்து பொன்னுரைக்கும் கல்லாக மாறிப்போவதும் அழகுதானா? அழகியலுக்குரியதுதானா ?
பூக்களை எரித்து விட்டு அவர்கள் எந்த சாம்பலில் ஒப்பனை செய்து கொண்டார்கள்.
இப்படி,  பொதுவாக போரின் வெற்றிகளை சொல்லுகிற இலக்கியங்களில் அவ்வளவாக எளிதில் காணக்கிடைக்காத ஒரு பாடல் அதுவும் ஒரே ஒரு ஒற்றை வரி.... வீரத்தை அழகியலில் வைத்திருப்பதன் உண்மைப்பொருளை வெளிப்படுத்துகிறது இம் முத்தொள்ளாயிரத்தில்……

அக்காட்சி… கண்களை  உருட்டி முறைத்தபடி ,கீழ் உதட்டைக்   கடித்து  மடித்த வாயுடன் எய்யும்படி கையில் பிடித்த வேலுடன் ஆண் யானையையே படுக்கையாகக் கொண்டு தம் மண்ணை விட்டுக்கொடுக்காமல் இறந்து கிடக்கும்   பகை மன்னனைப் பார்த்து தம் கையில் வெற்றிக்கொடியை உயர்த்திப் பிடித்தவாறு நின்றான் பாண்டியன்.
 எப்படி நின்றான் என்று முத்தொள்ளாயிரக் கவிஞன் கூறுகிறான் தெரியுமா…
கொடித்தலைத்தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான்”
பரணிகளையெல்லாம்  புரட்டிப்போடும் வரிகளல்லவா இவை.
ஒற்றை வரியில்... அழகியல் காட்டும் வீரம் என்பது மானுடத்தை காத்தல்
மன்னுயிர் காத்தல் என்ற பொருளிலேதான் அமைகிறதே தவிர அழித்தலில் அல்ல ஆதிக்க வெறியை நிலை நாட்டல் அல்ல என்பதை முத்தொள்ளாயிரக் கவிஞன் நிறுவிச்செல்கிறான்.
வெற்றியைப்போல் அது பொய் முகம் காட்டினாலும் அவலத்தால் அது தோல்வி என்றான்.இரண்டு தரப்பினருமே வீரத்தை காத்தலுக்கே தர வேண்டும் என்பதே அழகியல் வீரம்’.




முத்தொள்ளாயிரத்தை முன்வைத்து  ஒரு உரையாடல்…

 ஆக, நண்பர்களே ...சில குறுக்கு வெட்டு உரையாடல்களோடு உரையை நிறைவு செய்ய எண்ணுகிறேன்....

1)  முத்தொள்ளாயிரம் ஒரு தொள்ளாயிரமோ மூன்று தொள்ளாயிரமோ கிடைத்திருப்பவை மிகக்குறைவான பாடல்களே .  இருக்கின்ற பாடல்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியாக மூவேந்தர்களை மட்டுமே பேசுவதால் மற்றவை மறைக்கப்பாட்டு இவை மட்டும் பொறுக்கி எடுத்து தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.

2)  பெண்கள் முழுவதும் தாயார்களால் வீட்டுக்குள் வைத்து அடைக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்.  சதாகாலமும் மன்னன் மீதான காம இச்சையில் உழல்பவர்களாக இருக்கிறார்கள்.  உண்மையில் அக்காலப் பெண்கள் அப்படியா இருந்திருப்பார்கள்?  (காதலும் களவும் இங்கு பேசப்படவில்லை).

3)  “வினையே ஆடவருக்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” என்று சங்கப் பாடல் பேசினாலும்… “அவ்வினைக்கு அம்மா அரிவையும் வருமோ” என்று எழுச்சிகரமான பெண்சமத்துவத்தை பெண்விடுதலையை குறுந்தொகை 63ல் உகாய்க்குடி கிழார் ஆரம்பித்து வைக்கிறார்.   ஆனால் அநேகமாக அதற்குப் பின்னால் எழுதப்பட்டிருக்கும் இதில் பெண் காம மடமைக்குள் தள்ளப்படுகிறாள்.

மன்னனைப் பார்த்த மாத்திரத்தில் குடத்து விளக்காய் இருந்து காமம் மலையுச்சி விளக்காய் மாறிவிட்டது, ஏறிவிட்டது என்று பேசப்படும்போது (பாடல்கள் 122) பெண்மையை முத்தொள்ளாயிரம் கொச்சைப்படுத்தவும் செய்திருக்கிறது என நாம் துணிய வேண்டியிருக்கிறது.

4)  எந்தவித தத்துவார்த்தப் பின்புலமும் இன்றி வாழ்க்கையை உய்விக்கும் உன்னதப் பதிவுகள் இன்றி அதீதப் புனைவுகளாக ஒரே மாதிரியான வார்ப்பில் எழுதப்பட்டிருக்கிறது முத்தொள்ளாயிரம்.

5)  என்றாலும் புனைவுகளின் ஊடாக அடுக்கடுக்காய் அகக் காட்சிகளில் கசிந்து பரவுகிற படைப்புச்சுவையின் வசீகரம் நம்மை முத்தொள்ளாயிரத்தை வாசிக்கச் செய்கிறது. வணக்கம் .
                                         
                                               ...............................................................................................