Sunday 19 July 2015

டாக்டர் அம்பேத்கரின் இந்திய அரசியலை தீர்மானித்த பேருரைகள்

ந்தியா ஒரு படிநிலை சமத்துவமின்மையை  சமுக அடிப்படையாக கொண்ட நாடு .
தன்தலையில் இன்னொருவன் நிற்பதை  அனுமதித்துக் கொண்டே இன்னொருவனின்
தலையில் தான் நிற்பதில்  சுகம் காணுகிற முழுக்கவும் ஏற்றத்தாழ்வுகளால்
நெய்யப்பட்ட  கட்டமைப்பு கொண்ட நாடு .

 விரும்பி ஏற்றுக்கொள்ளப்படும் உயர்வும் விரும்பித் திணிக்கப்படும்
தாழ்வும் நிலவும் சமூகச் சூழலில்  அடைய வேண்டிய பொது லட்சியங்களைக்
குறித்தோ தகர்த்தெறிய வேண்டிய அதிகார வக்கிரங்களை குறித்தோ எந்தவொரு பொது
முடிவையும்   எட்டமுடியாத  நாட்டில்  புரட்சிக்கு மட்டுமல்ல ஒரு
நேர்மையான பிரச்சாரத்திற்குக் கூட சாத்தியமில்லை


இருந்தும் உலக அரங்கில் ஒரு வெற்றிகரமான மக்களாட்சி நாடாக இந்தியா
விளங்குவதற்கு காரணம்   கூறுபட்டுக் கிடக்கும் இந்திய மனத்தின்
உறுப்புகளை உரிய வடிவத்தில் ஓன்று படுத்தியிருக்கும்  இந்திய அரசியல்
சட்டம் .

எட்டு திசையிலும் மூர்க்கமாய் இழுக்கப்பட்டும்  இந்தியக் சமூகக் கயிறுகள்
இன்னும் அறுபடாமல் இருப்பதற்கு காரணம் மனித தர்மத்தின் நியதிகளால்
சனாதனத்தை உடைத்தெறிந்து அமைக்கப்பட்ட இந்து சட்ட தொகுப்புகள்.

வகுப்பு வாத பிரச்சினைகள்  வகுப்பு வாரி விகிதாச்சார பிரதிநிதித்துவம்
கோரும் கோரிக்கைகளாக மாறியதற்கு காரணம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்ய
வடிவமைக்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் .

இந்த காரணங்களுக்கெல்லாம்  காரணமாக இன்றைய நவீன இந்திய வாழ்வின் ஒவ்வொரு
இழையிலும் தன சிந்தனைகளால் ஊடாடிகொண்டிருக்கிற ஒரே தலைவர் டாக்டர் பி
.ஆர் . அம்பேத்கர்

             ***********************************


மே தினம் -ஐரோப்பிய அமெரிக்கத் தொழிலாளர்கள் பலகாலம் போராடி ரத்தம்
சிந்தி பெற்ற எட்டுமணி நேர வேலை உரிமையை கொண்டாடும் நாள் . ஆனால் அதே
உரிமையை எந்தவிதப்  போராட்டமும் இல்லாமல் தன் ஒரே கையெழுத்தில் இந்திய
தொழிலாளர்களுக்கு வழங்கியவர் டாக்டர் அம்பேத்கர் என்பதை இங்குள்ளோர்
குறிப்பாக பொதுஉடமை தோழர்களுங்கூட நினைவு கூர்வதில்லை .பெண்
ஊழியர்களுக்காக முதல் முதலாக அவர் கொண்டு வந்த ஊதியத்துடனான மகப்பேறு
விடுப்பு அன்றைய நாட்களில் யாரும் எண்ணிக்கூட பார்க்காதது .இன்றும்
தொடர்ந்து வருவது .

அதேபோல் இன்று அம்பேத்கர் என்னும் மகா பிம்பத்தின் வல்லமையை தங்கள்
மட்டரகமான வக்கிரச் செயல்களால் எதிர்ப்பவர்களுக்கு தெரியாது அவர்களின்
வாழ்வுரிமை பாதுகாப்புக்கும் வழிகோலியவர் அவர்தான் என்று . 1951
,அக்டோபர் 10 ஆம் நாள் பிரதமர் நேரு அமைச்சரவையிலிருந்து பதவி விலகி
வெளியேறினார்  டாக்டர் அம்பேத்கர். அதன் காரணங்களை விளக்கி வெளியிட்ட
அறிக்கையில் கூறும் முதல் காரணம் பிற்படுத்தப்பட்ட
( BC, MBC, DNC) மக்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் பாதுகாப்பு
நடவடிக்கைகளுக்காக பிற்படுத்தப்பட்டோருக்கான நல ஆணையம் ஏற்படுத்த
வேண்டுமென்று அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருப்பதை நிறைவேற்றாமல் நேரு
காட்டிய மெத்தனத்தை எதிர்த்து என்பதுதான் .

அம்பேத்கர் ஆரம்பித்து வைத்த அந்தக் குரலால் தான் இன்றைக்கிருக்கிற
பிற்படுத்தப்பட்டோருக்கான( BC, MBC, DNC) ஒதுக்கீடுகளும் குறிப்பாக
மண்டல் கமிசனின் வழியாக கிடைத்த உயர்கல்வி நிறுவன ஒதுக்கீடுகளும் ( 27%)
சாத்தியபட்டிருக்கின்றன .

கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு சாதாரண படை வீரனின் மகனாக பிறந்து
,பள்ளிகளில் உள்ளே அனுமதிக்கப்படாமல்
வராந்தாவில் கோணிச்சாக்கில் உட்கார்ந்து படித்து ,பரோடா மன்னர் மற்றும்
சாகுஜி ஆகியோரின் உதவியில் உயர்கல்வி பெற்று மறுக்கவோ புறக்கணிக்கவோ
முடியாத தனது தகுதியால் காங்கிரஸ் அல்லாதவராய் இருந்தபோதும் நேரு
அமைச்சரவையில் இடம்பெற்றவர் டாக்டர் அம்பேத்கர் .
அந்தப்பதவியைத்தான் பிற்படுத்தப்பட்டோருக்காக ( BC, MBC, DNC) தூக்கி
எறிந்தார் .இது ஒன்றுக்காகவே அவர் பிற்படுத்தப்பட்டோரின் தலைவராக
கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் .ஆனால் இவர்களோ  சிலைகளை உடைத்து தம்
நன்றியுணர்வை வெளிப் படுத்துகிறார்கள் .

இன்றைய இந்தியாவின் கல்வி வளர்ச்சியில் அவரின் பங்கு சிறப்பானது . 1932
ல் பம்பாய் மாகாண சபை உறுப்பினராக இருந்தபோது உயர் கல்விக்காக
மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கவேண்டும் என்று பேசிய அவரின் பேச்சு
கேலிக்கு உள்ளானது .இன்றோ கல்விகடன் வழங்காத வங்கிகள்
கண்டிக்கப்படுகின்றன  .


              **********************************

       ம் தேசத்தின் பெயரை" இந்தியா " என்று அரசியல் சட்டத்தில் இறுதிப்
படுத்தியதிலும்  அம்பேத்கரின் பங்கு முக்கியமானது . அவையில் இருந்த
அனைத்து தேசியத் தலைவர்களும்' பாரதம் 'என்ற பெயரே வேண்டும் என ஒரு சேர
முன்மொழிந்த போது 'அரசியல் சாசனத்தில் ஜாதி  மத பேதமற்ற நாடு (SECULARISM
)என்று வைத்திருப்பதைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இந்தியா என்ற பெயரே
பொருந்தும் . பாரதம் என்பது இந்துத்வாவின் ஏகபோக குறியீடு . அது அனைத்து
மத மக்களுக்கும் பொதுவான வார்த்தை அல்ல ' என  வாதிட்டு  இப்பெயரை
இடம்பெறச் செய்தார் .
அரசியல் சாசன முகப்புரையில் மட்டும்  INDIA THAT IS BHARATH என வருவது
அதை எழுதிய நேருவின் இந்துத்வ  பற்று .

      தேசியக் கொடியின் வடிவமைப்பு தொடர்பாக பலவகையான பதிவுகள் உள்ளன .
மூவர்ணமோ அல்லது  அளவுகளோ எப்படி அமைக்கப்பட்டிருப்பினும் அதன் நடுவில்
அமைக்கப்பட்டிருக்கும் அசோகச் சக்கரத்திற்கு அம்பேத்கரே பொறுப்பானவர் .
ஸ்வஸ்திக் சின்னம் வேண்டுமென்று காந்தியும் ஹிந்தி ஓம் வேண்டுமென்று
சாவர்க்கரும் விரும்பியபோது தர்ம சக்கரத்தை வலியுறுத்தி வைக்கச் செய்தவர்
அவர் .  .

 உலகிலேயே நமது அரசியல் சாசனத்தில் மட்டுந்தான்  395 விதிகள் உள்ளன
.அமெரிக்க அரசியல் சாசனத்தில் 7 விதிகள் மட்டுமே உள்ளன .
கனடாவின் அரசியல் சாசனத்தில் 147 ம் ஆஸ்திரேலியாவின் சாசனத்தில் 128 ம்
தென் ஆப்ரிக்காவின் சாசனத்தில் 153 பிரிவுகளும் உள்ளன .

     மேலும் இந்த அமெரிக்கா ஆஸ்திரேலியா கனடா மற்றும் தென் ஆப்ரிக்கா
ஆகிய நாடுகளின் சாசனங்கள் எந்தவித திருத்தங்கள் தொடர்பான
பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வில்லை. அவையெல்லாம் முன் மொழியப்பட்ட
வடிவத்தில் அப்படியே ஏற்றுக்கொள்ளப் பட்டவை .திருத்தங்களுக்கான
ஜனநாயகத்தன்மை அவற்றுள் இல்லை .ஆனால் நமது அரசியல் சாசனத்தில் அது
முன்மொழியப்பட்ட நேரத்திலேயே மிகுந்த வெளிப்படையான தன்மையோடு விவாதங்கள்
நடத்தப்பட்டு 2473 திருத்தங்கள் வரை மேற்கொள்ளப்பட்டன .

 மன்றத்தின் உறுப்பினர் யரொருவர் கொண்டு வரும் திருத்த்தையும் அனுமதித்து
விவாதித்து ஏற்று கொண்ட வெளிப் படைத்தன்மையே
அதன் தனி முத்திரை .அதற்கான நேர்மையையும் திறந்த மனத்தையும் அறிவுத்
துணிவையும் கொண்டிருந்தார் டாக்டர் அம்பேத்கர்


              *********************************

ம்பேத்கர் பெரியார் காரல் மார்க்ஸ் ( அபெகா ) பண்பாட்டு இயக்கம் மூலமாக
30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக
பாடுபட்டு வருபவர் மருத்துவர் நா. ஜெயராமன் . நிமிடங்களோடு போட்டிபோடும்
முன்னணி மருத்துவராக இருந்த போதிலும் தன்  பணியோடு சமூகப்பணிக்கும்
சமநேரம் வழங்குகிற கருத்துப் போராளி . அவர் எழுதியுள்ள "காந்தியின்
தீண்டாமை" நூலில் அவர் எடுத்துவைத்த வாதங்கள் சிந்தனை உலகில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியவை . அந்நூல் அறிஞர் ஞான அலாய்சிஸின் ஆங்கில
மொழிபெயர்ப்பில் விரைவில் வெளிவரவுள்ளது .

அவர் தொகுத்து வழங்கும் இந்நூலில் டாக்டர் பி.ஆர் . அம்பேத்கர் முதன்
முதலாய் அரசியல் சட்டத்திற்காக வரையறுக்கப்பட்ட நோக்கங்களின் மீது ஆற்றிய
விவாத உரை , நேருவின் அமைச்சரவையில் இருந்து அவர் வெளியேறியபோது அதற்கான
காரணங்களை விளக்கி இந்திய பாராளுமன்றத்தின் வாசற்படிகளில் நின்று
பத்திரிக்கையாளர்களுக்கு  ஆற்றிய விளக்க உரை , இந்திய அரசியல் சட்டத்தை
நிறைவு செய்ய எடுத்துக்கொண்ட காலம் குறித்து அவர் அளித்த விளக்க உரை ஆகிய
இந்திய அரசியலின் திருப்பு முனைகளை தீர்மானித்த மூன்று உரைகள் இடம்
பெற்றுள்ளன .

இந்த உரைகளின் வழியே வெளிப்படும் இந்திய அரசியல் உளவியலும் இந்திய சமூக
வாழ்வியலும் சமகாலத்  தலைமுறையினர் அறியாதவை . அரசியல் நோக்கர்களால்
அறியப்பட்டும் வெளிபடுத்த விரும்பப் படாதவை . உலகிலேயே ஒரு நாட்டின்
அரசியல் சட்டத்தை வரைவு செய்து அதன் ஒவ்வொரு சொல்லின் வழியாகவும்
அந்நாட்டின் நவீன வாழ்க்கையோடு தொடர்பு கொண்டிருக்கிற ஒரு தலைவனை
ஒடுக்கப்பட்டோர்களின் பிம்பமாக மட்டுமே பார்த்து சிறுமைப்படுத்துவது
இந்தியாவில் மட்டுமே சாத்தியம் . அதற்கு காரணம் இந்த மண்ணில் நிலவும்
படிநிலை வக்கிரமே .

தற்கால வாக்கு வங்கி கலாச்சாரத்தில் , வாக்குகள் வாங்கப்படும்
பண்டங்களாய் மாறிவிட்ட சூழலில் அதை நோக்கிய கபட நாடகங்களின் ஒரு
காட்சியாகவே அம்பேத்கருக்கு அதிகாரதாரிகள் காட்டும் பாவனை மரியாதைகள்
இருக்கின்றன . இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம் . அம்மட்டிலாவது
இந்திய அரசியல் சமூக தளத்தில் புறக்கணிக்கவியலாத ஒரு அரசியல் ஆளுமையாக
அம்பேத்கர் இருக்கிறார் .
இந்தியாவின் மற்ற தேசியத் தலைவர்கள் பாடப் புத்தகங்களின் பக்கங்களில்
இருக்க , அம்பேத்கரோ இந்திய வாழ்வின் பக்கங்களில் தொடர்கிறார் . அதை
புரிந்து கொள்ள உதவும் நூல்களின் வரிசையில் இந்நூலும் இடம் பெறுகிறது .

                                                                                                     - பன்னீர்செல்வன் அதிபா